tamilnadu

img

ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்

சிதம்பரம்,மே 12-ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் 46 இடங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறி 13 இடங்களில் மறு தேர்தலைநடத்த உத்தரவிட்டுள்ள தேர்தல்ஆணையம், சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்காதது கண்டிக்கத்தக்கது” என்றார்.ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதால், தில்லுமுல்லு செய்து எப்படியாது இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சதி திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.மக்களின் கருத்து கேட்பு, சுற்றுச்சூழல், வன பாதுகாப்பு உள்ளிட்ட எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை வன்மையாககண்டித்த அவர், இந்த திட்டத்தால்விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்றார்.புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தைரியமாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள் ளார். ஆனால் தமிழக முதல்வர் பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆமாம் சாமி போட்டு வருகிறார். இவர் மட்டு மல்லஅந்த கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் ஆமாம் சாமியாக உள்ளனர். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் அதன் தீமைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 5 முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டெல்டா பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் பிரச்சாரம்செய்ய உள்ளதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும். ஆனால் மேட்டூரில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டும்பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காவிரி ஆணையத்தை கூட்டிதென்மேற்கு பருவ மழை பெய்யும் போது நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கேட்டு பெற்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க இந்த மாநில அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், கோடை காலங்களில் நீர்நிலைகளை தூர்வாரி, மராமத்து பணிகள் செய்து இருந்தால் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கலாம் என்றார்.யாகம் நடத்தினால் மழை வரும் என்பதை சொல்வதற்கு அரசுஅதிகாரிகள் எதற்கு? எல்லா பிரச்சனைக்கும் யாகம் செய்து சரி செய்து இருக்கலாமே என கேள்வி எழுப்பினார். சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு, முன்னாள் அமைச்சர் கக்கன் பேரன் ஆகியோரின் வீடுகளை அரசு காலி செய்யும் முன் மாற்று வீடு கொடுத்துவிட்டு காலி செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு உடனே வீடு வழங்க வேண்டும். இதனை நிதானமாக அரசு கையாள வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு ரூ.150 கோடி வரை செலவு செய்கிறார்கள். இதில் ஜனநாயகம் இல்லை. பண நாயகமாக உள்ளது. அப்படியே ஆட்சி இருந்தாலும் ஒன்றரை வருடம்தான் அதுவும் 23 ஆம் தேதிக்குப் பிறகு மாறக் கூடிய சூழல் உள்ளது. தேர்தலுக்கு செலவு செய்யும் ரூ. 150 கோடியை வைத்துக் கொண்டு அத்தொகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை செலவு செய்தாலே மக்கள் சிறப்பாக வாழ்வார்கள். இந்த பேட்டியின் போது மாவட்டக் குழு உறுப்பினர்கள் கற்பனை செல்வம், முத்து, நகரச் செயலாளர் ராஜா,சிஐடியு ஆட்டோ சங்க செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

;