tamilnadu

கடலூர் , வேலூர் முக்கிய செய்திகள்

நெய்வேலி அருகே  மின்னல் தாக்கி 2 பேர் பலி
நெய்வேலி, செப்.17-கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அருண்பிரசாத்(21). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராமன் மகன் குமார்(25) ஆகிய இருவரும் கடலூர் அருகே உள்ள சொத்திகுப்பம் முகத்துவாரத்தில் தூண்டி போட்டு மீன் பிடித்துள்ளனர். பிறகு, இரு சக்கர வாகனத்தில் செல்போன் பேசிக்கொண்டு வந்தபோது அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். அங்கிருந்தவர்கள் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலூர் துறைமுகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
வேலூர், செப். 17-வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வேலூரில் வெள்ளியன்று (செப். 20) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமை வகிக்கிறார். இதில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம், விற்பனைத் துறை, பட்டுவளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். அத்துடன், கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எனவே, இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை நேரடியாகவோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.