tamilnadu

img

உயர்வுள்ளல் -மொசைக்குமார்

தூரத்துப் பார்வையில் கொஞ்சம் துள்ளியமாகத் தெரிந்திருந்தால் அப்படியே வண்டியுடன் வேறு ஹோட்டலுக்காவது பறந்திருப்பேன். இலையை வேறு போட்டாயிற்று! இல்லையேல் எழுந்தும் போயிருக்கலாம். தலை நிமிரவே சங்கட்டமாயிருக்கிறது. எடுத்து வந்த இரண்டு புரோட்டாக்களை என் சம்மதத்தோடு சல்லி சல்லியாய்ப் பிய்த்துப் போட்டு சால்னாவை பரசி ஊற்றினார் சர்வர். கூடவே ஒரு ஆம்லேட். கூனிக் குருகியே சாப்பிடலானேன். வேலையை முடித்த கையோடு கட்டிடத்திலிருந்து அப்படியே வந்திருக்கிறேன். அழுக்கு கைலி, சுருங்களும் சிமெண்ட் தூசும் படிந்த கட்டம் போட்ட சட்டை, பாதத்தில் பாதி தேய்ந்த ரப்பர் செருப்பு, போதாக்குறைக்கு காலையிலிருந்து பணியிலிருந்ததின் அடையாளமாய் கை கால்களெல்லாம் எண்ணெய் தேய்க்காமல் வெள்ளை பூத்துக் கிடக்கிறது. அதுபோக தலை முடியும் முகமும் எந்த லட்சனத்தில் இருக்கிறதென்று தெரியவில்லை. என்னை நினைக்கையில் எனக்கே வெட்கமாய்ப் பட்டது. குறைந்தபட்சம் பேன்ட்-சட்டை சகிதம் வந்திருந்தாலாவது தன்னம்பிக்கையையோடு நிமிர்ந்து உட்காரலாம். எனக்கு அவர்களை அடையாளம் தெரிகிறது! அவர்களுக்கு என்னை தெரியுமா! இத்தனை வருடங்களில் எத்தனை மாணாக்கர்களுக்கு ஆசிரியராக இருந்திருப்பர்கள். அனைவரையும் நினைவில் நிறுத்திருக்க முடியுமா? 

தன்னிடம் பயின்ற யாராவது மருத்துவராகவோ, பொறியாளராகவோ, ஆசிரியராகவோ அல்லது அயல் நாடுகளில் உயர் ஸ்தானத்தில் இருந்து கேள்விப்பட்டிருந்தால் அவர்களை தெரிந்திருக்கும். என் போன்ற அறைகுறை படிப்பாளிகளையும், அன்னாடங் காய்ச்சிகளையும் ஞாபகமிருக்குமா? இல்லை-‘டீச்சர் நா உங்ககிட்டத்தா படிச்சேன்’ என்று கூறி அவர்களிடம் அறிமுகமாகும் தகுதிதான் எனக்கு உண்டா! என் போன்ற கூலிக்காரர்களால் அவர்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது?. அவ்வப்போது பள்ளிக்கால ஆசிரியர்கள் பலரை காணும் வாய்ப்பு கிட்டும் சமயங்களிலெல்லாம் என்னை நானே கூச்சத்தில் மறைத்துக் கொள்வேன். இன்றோ ஓடவும் ஒழியவும் முடியாத சூழல்.  அரசு மேனிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற தருணம். இதோ எதிர்த்த மேஜையில் குருந்தாடி வைத்த தன் கணவரோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த ‘அமுதாம்மாள்’ அவர்கள்தான் என் வகுப்பாசிரியர். தமிழை தவிர்த்து ஏனைய பாடங்களில் சுட்டுப் போட்டாலும் கிட்டவில்லை ஞானம். ரேங்க் கார்டில் தொடர்ந்த சிவப்புக் கோடுகளைப் போலவே என் குடும்பத்தின் வறுமை நிறமும் இருந்தது. ஒரு காலத்தில் பத்துப் பதினைந்து பேர்களுக்கு வேலை கொடுத்த அப்பா மீண்டும் கூலிக்காரராய்ப் போனார்… கடன் தாண்டவமாட கடன்காரராகள் வீட்டுக்கு வந்தாட, விற்கப்பட்ட வீடும் காணி நிலத்தையும் தாண்டி எவர் சில்வர், பித்தளை அண்டா குண்டா எல்லாம் அடகு போக, நோட்டு பேனா பென்சில் வாங்கக்கூட வசதியற்றுப்போனது. பெற்றோர்களுக்கிடையே சண்டை சச்சரவுகள், இருவரும் மாறி மாறி வீட்டை விட்டு வெளியேறுவதும் பின் கூடுவதுமாய் குடும்பம் மிகப் பெரிய சுனாமிகளை எதிர் கொண்ட நாட்கள் அது. எதிர் பார்த்தது போலவே அக்கல்வியாண்டு தோல்வியை பரிசளிக்கவே, பள்ளி செல்ல இயலா நிலையிலானேன். சொல்லொன்னா கஷ்டத்திலும் “நாந்தே படிக்காம கூலிக்காரனா போயிட்டேன்.. நீங்களாவது நல்லா படிச்சு பெரிய ஆளா வரலாம்லடா” என அப்பா ஆதங்கக் குரல் கொடுத்தார். கூடவே ஒரு சிலர் மூலமாக உற்சாக மூட்டவும் முயன்றார். எதற்கும் மசியாத மனது ஆட்டோ மொபைல்ஸ், டிராக்டர் ஒர்க்ஸ் என ஏறி இறங்கி இறுதியில் அப்பாவோடு கட்டிடத் தொழிலிலேயே ஐக்கியமாகியது.

பேட் பிடிக்க கற்றுத்தரும் பயிற்சியாளரைப் போல் எனக்கு கரண்டி பிடிக்க சொல்லிக் கொடுத்த ஆசான் அவர். சித்தாள் நிமிந்தாள் என உருண்டோடி கொத்தனாரில் முற்றுப்புள்ளியானது என் தொழில் அனுபவம்.  தேவைகள் சந்திக்கப்பட தங்களது படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தனர் தங்கச்சியும், தம்பியும். வருடங்கள் உருண்டோட துளிர்விட்ட விதையொன்று கிளை பரப்பி விருட்சமாகியது போல் உடன் பிறப்புக்கள் படிப்புக்கேற்ற உத்தியோகத்தினூடே குடும்பம் குட்டியாகி தனித்தனியே அவரவர் வாழ்ந்து கொண்டிருக்க, நான் மட்டும் அதே கொத்தனார் வேலைதான். ‘ச்சே.. இன்றைக்குப் பார்த்துத்தானா வீட்டில் வைத்த மொச்சைப் பயிர் குழம்பு சலித்துப் போகனும்? வரும் போது ஹோட்டலிலேயே சாப்பிட்டு வாங்க என அவளும் சொல்லனும்!’ இந்த உணவகத்தை மிகப் பெரியது என்று சொல்ல முடியாது.. அதற்காக தாழ்த்தியும் மதிப்பிட வேண்டியதில்லை. மையத்தில் கிரானைட் கற்களால் ஆன ஐந்தாறு மேஜைகள். முன்புறம் கல்லாப் பெட்டியாக மேல் தட்டுடன் கூடிய ஒரு டிராயர், சீரக மிட்டாய்களுடன் வறுத்த அரிசியும் கலந்தபடி வட்டக் கிண்ணமொன்றும். அதுபோக ஃபாஸ்ட்புட் ரகங்களுக்கான கேஸ் அடுப்புகளும், உபகரணங்களும், கண்ணாடிப் பெட்டியினுள்ளே நூடுல்ஸ் குவியலும், ரைஸ்சும். பின்புறம் இன்னுமொரு சமயலறை… அங்கிருந்துதான் தோசை, இட்லி, பிரியாணி, புரோட்டா, சப்பாத்திகளும்.

அத்திப்பூத்தாற் போல் எப்போதாவதுதான் மேஜைகள் ஓய்வெடுக்கும்! மற்றபடி சாப்பிடுபவர்கள் முதல் பார்சலுக்காக காத்து நிற்பவர்கள் வரை என நிரம்பித்தான் காட்சியளிக்கும். அந்தளவிற்கு தரமும் சுவையும் விலையும் என்று பிரதான சாலையில் பிரபலம் இந்த ‘ஹோட்டல் ராணி விலாஸ்’. போதாக்குறைக்கு அருகினில் பிரசவ மருத்துவமனை வேறு! அவ்வப்போது பெண்களும் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஏழை நடுத்தரம் என பாகுபாடின்றி வந்துபோகும் இடம். நான் அடிக்கடி வந்து போனாலும் இன்றுதான் கைலியும் அழுக்குச் சட்டையுமாய் நுழைந்திருக்கிறேன். மற்றபடி குளித்து பேண்ட் சட்டையோ, துவைத்துத் தேய்த்த ஆடையையோ அணிந்து கொண்டு கொஞ்சமாவது ‘நீட்’டாகத்தான் வந்திருக்கிறேன். இன்றைக்குப்பார்த்தா அந்த டீச்சரும் வரணும்! சாப்பிட சாப்பிடக் குறையாமல் இலையில் வைத்த இரண்டு புரோட்டாக்கள் மலைபோல் மனதை உறுத்தியது. மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக இருக்கும் இளங்கோவன், காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் மாசிலாமணி, கல்லூரியில் உதவிப் பேராசிரியரான அனாமிகா, பாண்டீஸ்வரி என்று உடன் பயின்று உயர் பணிகளிலிருக்கும் பலரை குறித்ததான எண்ணங்கள் உள்ளத்தில் ஊடுருவித் துவம்சம் செய்தது. ‘ச்சே… நாமலும் படிச்சு பெரிய ஆளா வந்திருக்கலாமோ..’ இப்படியும் அப்படியுமாய் உளன்று கொண்டிருந்தது உள்ளம்.

மனப்போராட்டத்தின் முடிவாக சற்று நேரத்தில் எதிர்த்த மேஜை காலியாகி அவர்கள் கடந்து போனது கவிழ்ந்திருந்த கண்களுக்குப் புலப்பட்டது. அப்பாடா! போயிருப்பர்கள் என ஆசுவாசப்பட்டுக் கொண்டு இலையை போட்டு கை கழுவி பில் கொடுத்து கூடவே சீரக மிட்டாய்களை அள்ளிப் போட்டு சுவைந்த படியே பைக்கின் அருகில் வந்து நின்றேன். “டேய்… கலையரசா!” உடம்பு ஒருகணம் அதிர்ந்து நின்றது. முகமெல்லாம் குப்பென்று வேர்க்க… பக்கவாட்டில் திரும்பினேன். “நிய்யிதா அங்க உக்காந்து சாப்டிட்டிருந்தியா… யார்ரா அது தெரிஞ்ச பையன் மாதிரியே இருக்கேன்னு நானும் அப்ப இருந்து யோசிச்சிட்டிருக்கேன்… என்ன உனக்கு தெரியலையாடா!”  டீச்சரின் உரிமைக் குரலில் உடைந்தேன் நான். “த் தெரியும் ட்டீச்சர்.. உங்கள மறக்க முடியுமா…  நயன்த்துல நீங்கதான எங்களுக்கு கிளாஸ் டீச்சர்.! ஹோட்டல்குள்ள வந்தப் பெறகு ந்நா.. நானும் பாத்தேன்… ஒரு வேளை என்னயெல்லா உங்களுக்கு ய்யா யாபகம் இருக்குமான்னு தெரியல.. அப்பறும் உங்கள பாக்குறதுக்கே சங்கட்டமாயிருந்துச்சு.. அதான்” தட்டுத் தடுமாற்றத்தினூடே பவ்யமாய் சற்று அருகினில் போனேன். மேலும் தயக்கத்தோடு தொடர்ந்த நான், பெருமூச்சொன்றை வாங்கிக் கொண்டு…

“உங்ககிட்ட படிச்ச நா இன்னைக்கு டாக்டராவோ இன்ஜினியராவோ இல்ல வேற ஒரு உசந்த நல்ல வேலைக்காரனாவோ இருந்தா உங்கள வந்து பாக்குறதுக்கும், நாலுபேரு முன்னாடி நீங்க என்னய சொல்றதுக்கும் பெருமையாயிருக்கும்.. நாந்தா சாதாரண கொத்தனாராச்சே..” என கூடவே கடந்த கால குடும்ப சூழல், பாதியில் விட்ட படிப்பு, தம்பி தங்கச்சியின் இன்றைய உயர்நிலை, என் மனைவி குழந்தைகள் பற்றி ஓரிரு நிமிடங்களில் மூச்சிறைக்க பகிர்ந்து கொண்டேன். தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதையும் தற்போது அருகாமை மருத்துவமனையில் மகன் வழிப் பேத்தி பிறந்திருப்பதையும் உற்சாகத்துடன் சொன்ன அவர்களும், தொடர்ந்து… 

“தம்பி… கல்வியோட நோக்கம் பெரிய வேலைக்காரன உருவாக்குறது இல்ல… ஒருத்தர நல்ல மனுஷனா ஆக்குறதுதான். வேலைகள், பதவி, உயர்வெல்லாம் அடுத்த கட்டம். கல்வி கண்டிப்பா வேணும். நாட்டையும் வீட்டையும் அறிவுப் பூர்வமான வளர்ச்சிப் பாதைக்கு நேரா கொண்டு போகும் பாதை அது.. இன்றியமையாத ஒன்னு. எந்த சூழ்நிலையிலும் அத தவறவிடக்கூடாது. அதுக்காக எப்பயோ பாதியில விட்ட படிப்ப நினைச்சு சமுதாயத்துல நம்மை நாமே தாழ்திக்கிடவும் கூடாது… படிக்கணும்னா இப்பக்கூட நீ படிக்கலாம். வயசு ஒரு தடையே இல்ல, கேரளாவுல கார்த்தியாயினி அம்மா-ங்கிற 96 வயது மூதாட்டி முதியோர் கல்வித்திட்டத்துல படிச்சு பரீட்சை எழுதினதெல்லாம் நீ கேள்விப்பட்டிருக்கியா! நீயும் வேலை பாத்துக்கிட்டே படிக்கலாம்… இன்னும் பெரிய ஆளா வரலாம். அப்புறம்… எந்த தொழிலும் சாதாரணமானது இல்லப்பா… கேவலமானதும் இல்ல! பெட்டிக் கடையா இருக்கட்டும், துப்புரவுத் தொழிலா இருக்கட்டும், ஹோட்டலு, ஹாஸ்பிட்டலு, வீட்டு வீட்டுக்கு பேப்பர் போடுறாங்களே அதுலயிருந்து உன்னோட கொத்தனார் வேலை வரைக்கும்னு சொல்லி எல்லாத் தொழில்களும் பின்னிப் பினைஞ்சுதான் மனித வாழ்க்கையோட மேம்பாட்டுக்கு உறுதுணையா இருக்கு.. வரட்டாப்பா” சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு கடக்கிறார் ஆசிரியர் அமுதாம்மாள்.!

“…………………..”

அவ்வார்த்தைகளின் ரீங்காரத்தில் லயித்திருந்த என்னை உசுப்புகிறது என்னவளிடமிருந்து வந்த அலைபேசியின் அலறல்.

 

;