tamilnadu

img

கொரோனாவுக்கு பிந்தைய உலகு - டி.கே.ரங்கராஜன்

இதுவரை உலகம் பல்வேறு கொள்ளை நோய்களை எதிர்கொண்டிருக்கிறது. அவற்றுள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் அதிக சவாலை மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் இந்த பெருந்தொற் றினை இரண்டாம் உலகப்போரை ஒத்த ஒரு உலக நிகழ்வாக கருதுகிறார். சீனாவும்,தென்கொரியாவும் செய்திருக்கும் சாதனைகளைப் பாராட்டியிருக்கும் அவர் ஜெர்மனியின் முன்னுதாரணத்தை மேற்குலக நாடுகள் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். தடுப்பு மருந்து தயாரிப்புக்கு முன்னதாக இந்த தொற்று நோய் உலகின் போக்கில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது அவருடைய அனுமானமாக இருக்கிறது. நிச்சயமாக இது உலக வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் நிகழ்வுதான். இயற்கையாகவே இந்த நோயை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் ஒரு பக்கம் இருக்க, இந்த நோய்த் தொற்றின் பின்னணியில் அரசி யல் தளத்தில் புதிய முரண்பாடுகள் உருவாகிவருவதை யும் பார்க்க வேண்டும்.

ஆதிக்க அரசியல்

கோவிட் 19 நோயை மையமாக வைத்து அமெரிக்கா, சீனா இடையிலான நேரடியான வாக்குவாதங்கள் நடக்கின்றன. முதல் பெரும் பொருளாதார சக்தியாக இருக்கும் அமெரிக்கா தனது மேலாதிக்க நிலையில் மாற்றத்தை அனுமதிக்காது. எனவே சீனாவுக்கு எதி ரான அறிவியல்விரோதமான குற்றச்சாட்டுக்களும், மிரட்டலும் பல்வேறு தளங்களில் தொடர்கின்றன. இந்த ஆண்டு நவம்பரில் நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் சீனாவைக் கட்டுப்படுத்துவது ஒரு முக்கியமான கேள்வியாக அமையும். அமெரிக்காவின் இந்த பிரச்சாரத்தில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடு கள் சிலவும் இணைந்துள்ளன. இவ்வாறு சோசலிச சீனா வுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சர்வதேச சக்தி களின் முரண்பாடு மேலும் கூர்மையாகிறது. இது இந்தியா வுக்கு ஒரு வாய்ப்பையும் உருவாக்கலாம்.

ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முதலாளி கள் சீனாவிலிருந்து வெளியேறலாம் என்ற வாதங்கள் நடந்துகொண்டுள்ள நிலையில் அந்த முதலீடுகளை இந்தியாவை நோக்கி ஈர்க்கும் விருப்பம் இந்தியாவுக்கு உள்ளது.

அமெரிக்காவின் சறுக்கல்

பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் சீனாவின் நட வடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டு கிறது. அமெரிக்கா முன்வைக்கும் அறிவியல் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை மறுத்தும் வருகிறது. இத னால் அமெரிக்க ஆட்சியாளர்கள் எரிச்சலடைந்துள்ள னர். உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டத் தொடங்கி யிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதி யை நிறுத்திவைப்பதாக டிரம்ப் அறிவிப்பு செய்தார். இவ்விசயத்தில் பல நாடுகள் அமெரிக்காவிடம் மாறு பட்டுள்ளன.

பிரான்ஸ், கனடா, ஜப்பான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு உட்பட சர்வதேச அமைப்பு கள் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவை உறுதிப் படுத்தியுள்ளன. அணி சேரா நாடுகள் மற்றும் 77நாடுகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவை வழங்கி யுள்ளன. ஜி 20 நாடுகளின் மிக அவசரக்கூட்டம் உலக சுகா தார நிறுவனத்தின் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரின் ஒற்றுமையை வலியுறுத்தி யுள்ளது. இவ்விசயத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகார நடவடிக்கையை உலகம் எதிர்க்கிறது. இந்த சூழலில் சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு 30 மில்லியன் டாலர்களும், ஆசிய, ஆப்பிரிக்க ஏழை நாடுகளுக்கு 20 மில்லியன் டாலர்களும் நிதி உதவி செய்துள்ளது. 

இந்தியாவின் நெருக்கடி

அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இப்போதைய சூழலில் அவர்களின் மீட்சி உடனடியாக சாத்தியமில்லை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நமது பொருளாதாரம் பல்வேறு சவால் களை எதிர்கொண்டு வருகிறது. அதனால் நமது வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுதான் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லலாம் என்பது குறித்து அரசுத் தரப்பிலும் பேசுவதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் நாடு காணாத ஒரு பொருளா தார மந்தநிலைக்குள் செல்ல வாய்ப்புள்ளது என ஆக்சிஸ் மூலதன நிறுவனம் கணித்துள்ளது.

உண்மையில் செல்லா நோட்டு அறிவிப்பு அறி விக்கப்பட்ட காலத்திலேயே நமக்கு நெருக்கடி தொடங்கி விட்டது. விவசாய நெருக்கடியை தொடர்ந்து சிறு குறுந்தொழில்கள், சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் நெருக்கடியை பார்த்தோம். ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்ட விதமும் இந்த நெருக்கடி யை தீவிரமாக்கியது. ஆட்டோ மொபைல் உட்பட பல்வேறு துறைகளில் பணி நீக்கமும், விற்பனைத் தேக்கத்தை யும் பார்த்தோம்.இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் வீழ்ச்சியடைந்ததையும், 45ஆண்டு களில் காணாத வேலை இழப்பு சூழலும் இதன் விளைவு களாகவே அமைந்தன. ஆனால் இக்காலகட்டத்தில் மோடி அரசு பெரும்பணக்காரர்களுக்கே சலுகைகளை அள்ளிக் கொடுத்துவந்தது.

எனவே நமது பொருளாதார நிலைமையில் மேலும் சரிவு ஏற்படுமானால் அது நம்மை பலவீனமாக்கவே செய்யும். இது, குறிப்பாக, இந்திய தொழிலாளி வர்க் கத்திற்கு சிக்கலை அதிகப்படுத்தும். பெருந் தொற்றை எதிர்கொள்ளும் காரணத்தைச் சொல்லி வரும் காலத்தில் அரசு ஊழியர்கள்மற்றும் ஆயுதப்படை யினருக்கு அகவிலைப்படி உயர்வு இருக்காது என மத்திய அரசு செய்திருக்கும் அறிவிப்பு, தனியார் துறை யிலும் பணியாளர்களுக்கான சம்பள உயர்வை பாதிக்கும்.

அதிகாரக் குவிப்பின் அச்சுறுத்தல்

அமெரிக்க அரசியல் சட்டத்தில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட கவர்னர்கள் உள்ளார்கள். முதலமைச்சர் இல்லை. அமெரிக்க ஜனாதிபதியால் கவர்னர்களை மிரட்டமுடியாது. அவர்களின் அரசியல் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு அதிகாரத்தை கொடுக்கி றது. அது பற்றி தனியாகபேசலாம். ஆனால் அங்கே ஜனாதிபதியின் சில எதேச்சாதிகார அறிவிப்புகளையும், அதற்கு எதிராக எழுந்த விமர்சனங்களையும் பார்த்தோம். இதுபோன்ற முயற்சிகள் இந்தியாவிலும் நடக்கின்றன.

இந்தியாவில் பொது சுகாதாரம் மாநில பட்டியலில் உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் அங்குள்ள கட்சி களையும், பல்வேறு அமைப்புகளையும் கலந்து பேசி தனக்கென முடிவு எடுக்க முடியும். ஆனால் பிரதமர் மோடி நாடுதழுவிய ஊரடங்கு உட்பட பலமுக்கிய அறிவிப்புகளை மாநிலங்களை விவாதிக்காமல் தானாக அறிவித்தார். அடுத்தடுத்து மக்களுக்கு ஆற்றிய உரைகளிலும் இந்த போக்கு தொடர்ந்தது.

மறுபக்கம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் மற்றும் அதிகரித்திருக்கும் வேலையின்மை பற்றி எந்த கவலையும் மத்திய அரசின் தரப்பிலிருந்து வெளிப்படவில்லை. இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 12 கோடியாக இருக்கும் என கணக்கீடு கள் காட்டுகின்றன.

நிதிக் குவியலை தன்னிடமே வைத்துக் கொண்டி ருக்கும் மத்திய அரசு, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் உட்பட தன் பகட்டான திட்டங்களுக்கான செலவுகளை குறைத்துக்கொள்ளவில்லை. மேலும் மாநிலங்களின் முடிவுகளை தானே எடுக்க முயற்சிக்கிறது. அதிகாரி களை அனுப்பி அவர்கள் மாநிலங்களுக்கு வழிகாட்டு வார்கள் என்ற முயற்சியை செய்கிறது. மருத்துவர்களுக் கான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பது முதல் பரி சோதனை முறைகள் வரை அனைத்திலும் தலையிடு கிறது. மாநிலங்கள் வாங்கும் கருவிகளுக்கும் கூட ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. பெருந்தொற்றை பயன்படுத்தி மாநிலங்களுக்கு அதி காரங்கள் குறைக்கப்பட்ட புதிய சூழலை மோடி அரசு ஏற்படுத்துகிறது. இது இந்தியாவிலும் புதிய முரண்பாடு களை தோற்றுவிக்கும். இந்த நிலைமைக்கு எதிராக மாநிலங்களின் உரிமைகளை காப்பதற்கான புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.

நமக்குள்ள கடமை

எல்லா நெருக்கடிகளும் அதனோடு தனக்கான வாய்ப்புகளையும் கொண்டுவரும் என்பதை அரசியலை கூர்ந்து நோக்கினால் புரிந்துகொள்ள முடியும். ஆளும் வர்க்கங்கள் தங்கள் நலன்களையே முக்கியமாகக் கருதுகிறார்கள். பொதுச் சொத்துக்களை கைப்பற்றவும், நெருக்கடியின் நடுவில் அதிக லாபம் குவிக்கவும், அதி காரத்தை நிலைநாட்டவும் போட்டிகள் நடக்கின்றன. இந்த நிலையில், உலகம் முழுவதுமே ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர் நலன்கள் ஆபத்துக்கு உள்ளாகும். மேற்சொன்ன முரண்பாடுகளில் முதன்மையானதாக, முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கும் இடை யிலான முரண்பாடு இந்த கொரோனா காலத்தில் கூர்மை அடைந்துள்ளது. இதனால் கம்யூனிச எதிர்ப்பு சிந்தனை களை முதலாளித்துவம் தீவிரமாக கட்டவிழ்த்து விடு கிறது. இந்த போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வலிமையை அதிகரிக்க வேண்டும். அதுதான் இந்தியா வின் நலன்களை பாதுகாக்கவும், மாநில உரிமைகளைக் காத்திடவும், பொது சுகாதாரத்தை உறுதி செய்திடவும், வறுமை/வேலையின்மை பிரச்சனைகளுக்கு தீர்வை எட்டவும் உதவிடும்.

புதிய நெருக்கடியின் சூழலில் கம்யூனிஸ்டுகளின் முன்னால் இந்தப் பெருங்கடமை உள்ளது.