tamilnadu

img

சிந்தாமணி கால்வாய் குப்பைகளை அள்ளி வைகையில் கொட்டிய கொடுமை

மதுரை, ஜுன் 16- மதுரை சிந்தாமணி வரத்துக் கால்வாய் வைகையாற்றுப் பகுதியில் துவங்கி குண்டாறு வரை செல்கிறது. கடந்த வாரம் மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிந்தாமணிக் கால்வாயை சுத்தப்படுத்தும் பணியை 21-ஆவது வார்டு  பெத்தானியாபுரம் பகுதியில்  துவக்கி வைத்தார்.  வாய்க்காலில் அள்ளப்படும் குப்பை களை பெருங்குடி அருகிலுள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால்  அள்ளப்பட்ட குப்பைகள் உடனுக்குடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு பெத்தானி யாபுரம் மேட்டுத் தெரு கடைசியில் உள்ள வைகையாற்றுப் பகுதியில் போய் கொட்டப்பட்டது. மதுரை மாநக ராட்சி நிர்வாகத்திற்கு இந்த அரிய யோசனையை  யார் கொடுத்தது எனத் தெரியவில்லை. தூய்மை இந்தியா திட்டம் என்று நகர் முழுவதும் விளம்பரம் செய்து கொண்டும், வைகையாற்றுப் பகுதியை தூய்மை யாக வைக்கவேண்டும் என்று கூறிக்  கொண்டும்  கால்வாய்களில் அள்ளப் படும் குப்பைகளை ஆற்றுப் பகுதியில் கொட்டி வருகிறது மாநகராட்சி நிர்வாகம். இது வைகையாற்றை  அசு த்தப்படுத்தும் வேலை இல்லையா?  பெத்தானியாபுரம் பகுதியில் அவனியாபுரம் வரத்துக் கால்வாய் உள்ளது. அதை அமைச்சரோ, மாநக ராட்சி நிர்வாகமோ கண்டுகொள்ள வில்லை. மதுரை நகரில் கிருதுமால் நதி உள்ளிட்ட 11 கால்வாய்களின் கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் துார்வாரும் பணிகளை பல பகுதிகளில் மாநக ராட்சி கைவிட்டு வருகிறது. இந்தக் கால்வாய்கள் 46.18 கி.மீ.க்கு கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய்களோடு 868.81 கி.மீ., மழை நீர் வடிகால்கள் நகர் பகுதி முழுவதும் அமைக்கப்பட்டு  அவை  தூர்ந்து போய் உள்ளன. சிந்தாமணி, பனையூர், கிருதுமால் உள்ளிட்ட பிரதான கால்வாய்கள் பல்வேறு இடங்களில் வாகனங்கள் சென்று சுத்தப்படுத்த முடியாத கட்டமைப்பில் உள்ளது.  மற்றொருபுறத்தில் மதுரை நகர்  முழுவதும் தண்ணீருக்காக மக்கள்  இரவு- பகலாக அலைந்து கொண்டிருக் கிறார்கள். தொடரும் மணல் கொள்ளை, கழிவுநீர் கலப்பு இவற்றால் வைகையும் மாசுபட்டுவருகிறது. இதற்கிடையில் சனிக்கிழமை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் பேசிய அமைச்சர் செல்லூர்  கே.ராஜூ, ‘‘மதுரை மாநகராட்சி ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டாண்டுகளில் குப்பையில்லா தூய்மையான நகராக மாற உள்ளது. அம்ரூட் திட்டத்தின் கீழ் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டதும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் நகராக மதுரை மாறிவிடும்’’ என்றார்.

ஜெ.பொன்மாறன்