tamilnadu

img

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு கடும் கண்டனம் பெண்களின் உழைப்பை சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டுக!

மார்ச் 6 - சிறை நிரப்பும் போராட்டம்

சிஐடியு அகில இந்திய மாநாடு அழைப்பு

சென்னை, ஜன. 24- பெண்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து மார்ச் 6 பெண்களின் நாடுதழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நடத்த சிஐடியு அகில இந்திய மாநாடு அறைகூவல்விடுத்துள்ளது. சென்னையில் நடைபெறும் சிஐடியு 16வது மாநாட்டில் இதுகுறித்து வெள்ளியன்று (ஜன.24) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: நாடு முழுவதிலும் பெண்கள் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகள், அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து 2020 ஜனவரி 23 முதல் 27 வரை சென்னையில் நடைபெற்று வரும் சிஐடியுவின் 16ஆவது அகில இந்திய மாநாடு தனது கோபத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்கிறது. 

குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் சக்தி குறித்த ஆய்வின்படி வேலைகளில் பெண்களின் பங்களிப்பு என்பது 2004இல் 41.6 சதவீதமாக இருந்தது 2017 - 18இல் 22 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் பெண்களால் மேற்கொள்ளப்படும் வேலைகளில் 51 சதவீத வேலைகளுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதோடு, நாடு தழுவிய புள்ளி விவரங்களிலும் அவை இடம்பெறுவதில்லை என ஐ.நா.வின் உயர்மட்டக் குழுவின் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. 

வீட்டு வேலையின் மதிப்பு என்ன?

பணம் எதுவும் வழங்கப்படாத வீட்டு வேலை என்பது உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து ஆகிய துறைகளை விட அதிகமான அளவிற்கு பொருளாதாரத்தில் பங்கு வகிக்கிறது எனவும் சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இவ்வாறு பெண்களால் மேற்கொள்ளப்படும் வேலைகள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பொருளாதாரத்திற்கு பெண்கள் அளிக்கும் பங்களிப்பின் அளவு, அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலும் மதிப்பிடப்பட்டு உரிய முறையில் அவர்களுக்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும் எனவும் சிஐடியு கோருகிறது. 

பெண்கள் மீதான சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்

அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழான தங்களின் அடிப்படையான, சட்டப்பூர்வமான உரிமைகளை பறிக்க முனைகின்ற நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல்கள், மத வாதத்திற்கு எதிரான பெண்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்து வருவதையும் இந்த மாநாடு பாராட்டுகிறது. உழைக்கும் பெண்கள் மேலும் மேலும் அதிகமான அளவில் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள துணிவோடு போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களுக்கு இந்திய தொழிலாளி வர்க்கம் ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி, பெண்களின் மீதான சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்துப் போராட அனைத்துப் பிரிவு ஆண், பெண்களை அணிதிரட்டுவதற்கான முன்முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தில் சிஐடியுவைப் போன்ற வர்க்க உணர்வுமிக்க தொழிற்சங்கங்கள் முன்னணியில் இருப்பதும் அதன் பொறுப்பாகும். 

அனைத்து வகையிலும் பெண்களுக்கான சமத்துவத்தை வென்றடையவும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மார்ச் 6 பெண்களின் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ மேற்கொள்ள வேண்டுமென சிஐடியுவின் 16ஆவது அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுக்கிறது. 

33விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துக

அனைவருக்கும் வேலை, ஊதியம் வழங்கப்படாத பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம், அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமமான ஊதியம், திட்ட ஊழியர்களுக்கும் தொழிலாளர்களாக அங்கீகாரம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை, வன்முறைகளை தடுத்து நிறுத்தல், தவறிழைப்போருக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்தல், தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அமைப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தல் ஆகிய கோரிக்கைகளுடன் மார்ச் 6 அன்று மாநில மாவட்ட அளவில் பெண்களை பிரம்மாண்டமான அளவில் அணிதிரட்டுவதற்கான முன்முயற்சிகளையும் திட்டமிடுதலையும் மேற்கொள்ள வேண்டுமென அனைத்து மாநிலக் குழுக்களையும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு பெண்களின் அனைத்து அமைப்புகள், மத்திய தொழிற்சங்கங்கள், தோழமை தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
 

;