சென்னை, ஜூலை 21- மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருளர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பி.டில்லிபாபு வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சருக்கு டில்லிபாபு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நெமிலி ஊராட்சியில் இருளர் இனத்தை சேர்ந்த ராஜன் (எ) ராஜா (வயது 45), ஆறுமுகம் (வயது 19) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 17ந் தேதி இரவு எலி பிடிக்க சென்றபோது, அருங்குளத்தை சேர்ந்த மதிவாணன் என்பவர் நிலத்தில் அமைத்துள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த ராஜனின் மனைவி மங்கம்மாள் தனது 3 பிள்ளைகளுடன் நிர்க்கதியாய் நிற்கிறார். எனவே, உயிரிழந்த இரண்டுபேரின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க வேண்டும். உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.