பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குக!
திண்டுக்கல்,மார்ச் 13- ஊராட்சி ஓ.எச்.டி. ஆபரேட்டர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி மார்ச் 16 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். 7-வது ஊதியக்குழு அரசாணை அடிப்படையில் நிச்சயிக்க வேண்டிய சம்பளத்தை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக ஊரக வளர்ச்சி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து நிச்சயித்து உத்தரவு வழங்க வேண்டுமென வலி யுறுத்தியும், 3 ஆண்டு பணி முடித்த துப்புரவுத் தொழிலா ளர்களை சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குமாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணை அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதியத்தை அமலாக்க வேண்டும். துப்புரவுத்தொழிலாளர்களுக்கு வழங்கியதைப்போல ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு அரசாணை வெளியிட வேண்டும். மேல்நிலை தொட்டி சுத்தம் செய்ய மாதம் ஆயிரம் ரூபாய் சிறப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும். தூய்மைக்காவலர்களுக்கு தற்போது மாதம் ரூ.2600 சம்பளம் வழங்குவதை உயர்த்தி மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். மாதம் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 16 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.