tamilnadu

img

விதைப்பாட்டின் நூற்றாண்டு... கவிதை

எதற்கான நூற்றாண்டு?
நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி 
மனித சமூகத்தைத் 
தள்ளத் துடிப்போரைத் தடுத்து நிறுத்தி 
முன்னோக்கிச் செல்லும் 
இயக்கவியல் விதியின் முழக்கம் 
இந்தியாவில் முதன்முதலாய் 
எழுவராம் முன்னோடிகள் 
எழுப்பிய நாளுக்கு நூற்றாண்டு !

அரசியல் விடுதலைக்கான 
அர்ப்பணிப்புமிக்க போராட்டக் களத்தில் 
தீரமிக்க பங்களிப்பைச் செலுத்தியபடி 
மனிதகுல விடியலுக்காகவும் இணைத்தே 
மகத்தான தீர்மானம் 
முகிழ்த்த தினத்துக்கு நூற்றாண்டு !

பாலின சமத்துவம் 
பாகுபாடற்ற சமூகம் 
வர்க்கமற்ற உன்னத உலகம் 
ஆரோக்கியமான விடியலுக்கான 
அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டதை 
ஆவேசச் செஞ்சுடராக 
அங்கொரு மனத்திடை 
போராளிகள் எழுவர் ஏந்திய
புரட்சிகர தருணத்திற்கு நூற்றாண்டு !

உயிர்களிடத்து அன்பு 
உறவு தோழமை 
உலகம் உண்ண உண்ணவும் 
உடுத்த உடுத்தவுமான 
ஒப்பற்ற இன்ப வாழ்வுக்கான 
பாதை சமைப்பதற்குப் 
பரவசத்தோடு எடுக்கப்பட்ட 
உறுதிமொழிக்கு நூற்றாண்டு !

சொந்தச் சகோதரர் 
துன்பத்தில் சாதல் கண்டும் 
சிந்தை இரங்க விடாத 
மந்திரம் போதிக்கும் உலகமயம் 

சந்தையின் பலிபீடத்தில் 
சந்ததியின் எதிர்காலம் 
கொண்டுநிறுத்த 
வழிநடத்தும் தாராளமயம் 

கட்டிப் புரண்டு காதலுற 
காலகாலமாய் 
ஒட்டுறவாய் வாழ்வோரை 
வெட்டிச் சாய்க்க 
வெறியூட்டும் காவிமயம் 

எல்லாம் 
எட்டித் தூக்கி எறிந்து 
மனிதத்தை உயிர்த்துவத்தை 
மகத்துவமாய்க் கொடியுயர்த்த
இந்த நூற்றாண்டில் 
இறுதிப் போர் நடத்தி 
எழுச்சிமிகு வெற்றி பெற 
இன்னுமின்னும் நம்பிக்கைக் கனலை 
ஊதி விசிறி 
ஒளிவெள்ளம் பெருகவைக்கும் 
உயர்ந்த தத்துவத்தை 
உவப்போடு இம்மண்ணில் 
சிவப்பாய் ஊன்றிச் சென்ற 
விதைப்பாட்டின் நூற்றாண்டு !

===எஸ்.வி.வேணுகோபாலன்===