tamilnadu

img

உயிர்ப்போடும் தியாகத்தோடும் தொடரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாண்டுகள்

உதகமண்டலம்:
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழா உதகையில் அக்டோபர் 20 ஞாயிறன்று இளம் படுகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டசெயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.பத்ரிஉள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.குடும்ப சங்கமமாக நடைபெற்ற இவ்விழாவில், நீலகிரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்க துவக்க கால பணிகளை மேற்கொண்ட முன்னோடி தோழர்கள், “சாதியற்றவர்” என்ற சான்றிதழை பெற்ற மாணவர் பகத்சிங், வெளிநாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற பழங்குடி விளையாட்டு வீரர்கள், தோடர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த முதல் பெண் மருத்துவர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.  மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி பாராட்டினார்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
விழாவில் உரையாற்றிய டி.கே.ரங்கராஜன் எம்.பி.,  ‘‘கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று தனதுநூற்றாண்டு விழாவை எழுச்சியோடு நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டது என்கிற வெறும் எண்ணிக்கைக்காக மட்டுமேஇந்த விழா அல்ல.  நூறாண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தானதியாகத்தையும், அதன் பன்முக பங்களிப்புகளையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேநூற்றாண்டு விழா கொண்டாடப்படு கிறது’’ என்றார் மேலும் அவர் பேசியதாவது:

1920 இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை உருவாகிற போதே, இங்கு இந்து மதத்தினருக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கோஷம், இந்துத்துவா சக்திகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்எதிர்வினையாக இஸ்லாமியர் களுக்கும் தனி நாடு என்ற கோரிக்கையும் எழுந்திருந்தது. இத்தகைய சவாலான சூழலில் பிறந்த கம்யூனிஸ்ட் இயக்கம் தான் மதப்பகைமைகளை விடுத்து தேசிய உணர்வோடு, அனைவரும் ஒன்றாக இணைந்து அரசியல் விடுதலைக்காக போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததோடு, பூரண விடுதலை என முதன்முதலாக சுதந்திர  முழக்கத்தையும் இந்த மண்ணில் விதைத்தது. கம்யூனிஸ்டுகளின் முழக்கம் அனைவரையும் ஈர்த்தது. தேச விடுதலைக்காக அனைவரும் போராடினாலும், அன்றைய பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்டு களைக் கண்டு தான் அஞ்சியது. எனவே தான் இயக்கம் துவங்கிய காலத்திலேயே தடை செய்ததோடு மட்டுமல்லாமல், மேன்மை தாங்கிய மகாராணியின் அரசுக்கு எதிராக பெஷாவர், மீரட், கான்பூர், பம்பாய், சென்னை என பல இடங்களில் கம்யூனிஸ்டுகள் சதி ஆலோசனை மேற்கொண்டார்கள் என குற்றம் சுமத்திபல வழக்குகளைப் புனைந்துகம்யூனிஸ்டுகளை சிறையிலிட் டார்கள்.

பணக்காரர்களுக்கு மட்டும் பணம் எப்படி வந்தது?
இந்த காலத்தில் தான் இந்தியாவில் பக்தி இயக்கங்களும் வலுப்பெறத் துவங்கின. ஏழைகளுக்கு செல்வந்தர்கள் பரிகார உள்ளத்தோடு உதவிட வேண்டும்; அதற்காகத்தான் கடவுள் பணக்காரர்களுக்கு செல்வத்தை அளித்திருக்கிறான் என ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் ஒரு புறத்தில் பிரச்சாரம் செய்து வந்த போது, அந்த பணக்காரர்களுக்கு மட்டும் எப்படி பணம் வந்தது,ஏழைகள் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிய கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ சுரண்டலை அம்பலப்படுத்தினர். ஆதிசங்கரர், புத்தர், ஏசுபிரான், நபிகள் நாயகம் என இறைத்தூதர்கள் ‘மறுமையில் சொர்க்கம்’ என்ற தத்துவத்தை முன்வைத்த போது, மறுமையில் அல்ல.. இப்போதே இந்த வாழ்விலேயே அதைக் காண முடியும் என ‘‘சோஷலிசத்தை’’ முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகளே.  அனைத்து நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்கு சிறிதுநிலத்தை தானமாக அளிப்போம் என ஒருபுறம்  “பூதான்” இயக்கம் கோரிக்கை விடுத்தபோது நிலம்என்பது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், நிலச்சீர்த்திருத் தமே அதற்குத் தீர்வு என கம்யூனிஸ்டுகள் தான் வர்க்க உணர்வை வலுவாக ஊட்டினார்கள்.கம்யூனிசம் என்பது ஏழைகளுக்கான தத்துவமே என குறுகிய கண்ணோட்டத்தோடு இன்றைக்கும் பிரச்சாரம் செய்பவர்கள் உண்டு. ஆனால் அது தலைகீழ் மாற்றத்திற்கான சமூக விஞ்ஞானம் என்பதைப்புரிந்து கொண்ட பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். சென்னையில் பிறந்தபெரும் செல்வந்தரான சிங்காரவேலர், தன்னுடைய வீட்டின் கொல்லையில் யானைகளை கட்டிப் போடும் அளவிற்கு சொத்து வைத்திருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். 

வெல்ல முடியாத கட்சி அல்ல பாஜக
அரசியல் விடுதலைக்காக அன்று போராடிய கம்யூனிஸ்டுகள், இன்றுபொருளாதார உரிமைகளுக்காக வும், சமூக விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக, இந்துத்துவா தேசியத்தை முன்வைத்து மக்களைப் பிரிக்கும் அரசியலை மேற்கொள்வதோடு, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தேசத்தை சிக்க வைத்திருக்கிறது. ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு உணவு என பிரச்சாரம் செய்து வந்த பாஜக,இன்று ஒரே கட்சி என மற்ற அரசியல்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்குதல்களையும் தொடுத்து வருகிறது.வெல்ல முடியாத கட்சி என இறுமாப்போடு இருக்கும் பாஜகவை அரசியலாக வெல்லும் வல்லமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. அந்த நம்பிக்கைகளை மக்களிடத்தில் விதைக்கவும், ஒரு மாற்று அரசியலை நோக்கி மக்களை அணிதிரட்டவுமே இத்தகைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மக்களிடம் இடதுசாரி அரசியலை கொண்டு செல்வதோடு மக்கள் எழுச்சிக்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்குவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக நூற்றாண்டு விழா கொடியை அவர் ஏற்றி வைக்க,நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் உதகை இடைக்குழு செயலாளர் எல்.சங்கரலிங்கம் வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் வி.வி.கிரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

;