tamilnadu

img

சுற்றுச்சூழல் மோசமாக மாசுபட்டவை பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட 8 நகரங்கள்

திருப்பூர், ஆக. 28 – இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 100 தொழில்நகரங்களின் பட்டியலில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்த வழக்கில் இந்த விபரத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆங்கில நாளேடு ஒன்றில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தொழில் நகரங்களின் பட்டியலை தயாரித்து வெளியிடும்படி உத்தரவிட்டது. அதன்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களைத் தொடர்பு கொண்டு ஆய்வு மேற்கொண்டு மிகவும் மாசுபட்ட 100  தொழில் நகரங்களின் பட்டியலை தயாரித்து பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒப்படைத்தது. இந்த விபரம் கடந்த ஜூலை 10 ஆம் தேதியே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் இடம் பெற்றுள்ளது. இதன்படி தொழில் நகரங்களில் நிலம், நீர், காற்று ஆகிய மூன்று அம்சங்களிலும் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்புகள் அளவிடப்பட்டு மொத்த சுற்றுச்சூழல் பாதிப்பும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் புள்ளிக்கணக்கில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவை “ஆபத்தான” சூழல் பாதித்த நகரங்கள் என்றும், 60 முதல் 70 புள்ளிகளுக்கு உட்பட்டவை “கடுமையான” சூழல் பாதிப்புள்ள நகரங்கள் என்றும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைந்த 100 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 8 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மணலி, வேலூர் வடக்கு, திருப்பூர் மற்றும் மேட்டூர் ஆகிய நான்கு தொழில் நகரங்கள் ஆபத்தான மாசுபாடு அடைந்த நகரங்களாகவும், தூத்துக்குடி, கோவை, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு நகரங்கள் கடுமையான மாசுபாடு அடைந்த நகரங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் அதிக மாசடைந்த ஆபத்தான தொழில் நகரங்களில் மணலி (84.15 புள்ளிகள்) 10ஆவது இடத்திலும், வேலூர் வடக்கு (79.38 புள்ளிகள்) 21ஆவது இடத்திலும், திருப்பூர் (72.39 புள்ளிகள்) 32ஆவது இடத்திலும், மேட்டூர் (71.82 புள்ளிகள்) 34ஆவது இடத்திலும் உள்ளன. அதன் தொடர்ச்சியாக கடுமையாக மாசடைந்த நகரங்களில் தூத்துக்குடி (66.34 புள்ளிகள்) 50ஆவது இடத்திலும், கோவை (63.64 புள்ளிகள்) 60ஆவது இடத்திலும், கடலூர் (62.56 புள்ளிகள்) 62ஆவது இடத்திலும், ஈரோடு (60.33 புள்ளிகள்) 67ஆவது இடத்திலும் உள்ளன. ஆபத்தான மாசடைந்த தொழில் நகரங்களில் காற்று, நீர், நிலம் என மூன்றுமே கடுமையாக சீரழிந்துள்ளன.

தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு, நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சூழல் கேடு காரணமாக 25 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காற்று மாசு காரணமாக இறந்தவர்கள் சுமார் 11 லட்சம் பேர். நீர் மாசு காரணமாக 5 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் சூழல் பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் மொத்தம் 149 நாடுகளில் இந்தியா 110ஆவது இடத்தில் உள்ளது.

ஏறத்தாழ 37.70 கோடி மக்கள் இந்தியாவில் நகரங்களில் வசித்து வரும் நிலையில் ஆண்டுக்கு 6.20 கோடி டன் திடக்கழிவு உற்பத்தியாகிறது. இந்த திடக்கழிவுகளை அகற்றும் பிரச்சனை சவாலானதாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடுள்ள நகரங்களில் சீர்கேட்டைக் களையவும், சூழலைப் பாதுகாக்கவும் பன்முக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியங்களை வற்புறுத்தி உள்ளது. குறிப்பாக அந்த நகரங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்குத் தடை விதிப்பது, ஏற்கெனவே செயல்படும் தொழிற்சாலைகளில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றுவது, நிலம், நீர், காற்று உள்ளிட்ட சூழல் சீர்கேட்டுக்குக் காரணமான தொழிற்சாலைகளிடமே அபராதம் மற்றும் இழப்பீட்டை வசூலித்து பாதிப்பை சீரமைக்கப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. இது தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும், சூழல் கட்டுப்பாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 மாத காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நவம்பர் 5ஆம் தேதி இவ்வழக்கில் அடுத்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

;