tamilnadu

img

குடிநீர் பஞ்சம் : ஒதுங்கும் அரசு

‘இலவச’ அறிவுரை

சென்னை, மே 14-குடிநீரை சிக்கனமாகப் பயன் படுத்துமாறு பொதுமக்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொது மக்களுக்கு பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்க 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 146 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள தாகவும், தற்சமயம், தமிழ்நாட் டின் மழை அளவு, வழக்கத்தை விட 69 விழுக்காடு குறைந்துள்ளதால், இந்த வருடம் சராசரியாக ஆயிரத்து 856 மில்லியன் லிட்டர் கள் வழங்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.குடிநீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை உறுதிபடுத்திக்கொள்ள, தமிழகம் முழுவதும் வாரியத்தின் மூலம் 258 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.குடிநீர் குழாய் கசிவு, மின் மோட்டார் பழுது ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர், போன்றவை குறித்து 94458 02145 என்ற அலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், குடிநீர் தரப் பரிசோதனைக் கூடம் உள்ளதாகவும், அதில் பொதுமக்கள் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் 960 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய மழை 811.7 மில்லி மீட்டர் மட்டுமே பெய்ததாகவும், 2019 ஜனவரி முதல் மே வரை 108 மில்லி மீட்டர் பொழிய வேண்டிய மழை, 34 மில்லி மீட்டர் மட்டுமே பொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், குடிநீரை பொதுமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

போர்க்கால நடவடிக்கை மேற்கொள்க: சிபிஎம்

சென்னை, மே 14-தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்ச அபாயத்தை தடுத்திட மாநில அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக சென்னையில் செவ்வாயன்று நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். நெல்லை போன்ற ஆற்றங்கரையோர நகரத்திற்கே பத்து நாட்களுக்கு ஒருமுறை, மிக குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது. சென்னை மாநகரில் மாநகராட்சி தண்ணீர் விநியோகம் 90 சதமான பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டு மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மழை யளவு குறைவு, நீர் நிலைகள் போதிய பராமரிப்பின்றி இருப்பது, புதிய குடிநீர் திட்டங்கள் இல்லை என பல காரணங்களை கூற முடியும். இதற்கான திட்டங்களை அரசு கவனத்தில் எடுத்து நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே 28 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறி வித்துள்ள நிலையில் உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, குறிப்பிட்ட கால இடை வெளியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாவட்டச் 

செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.உடனே பராமரித்திடுக!

தமிழ்நாட்டில் தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக கடும் வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சென்னை நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் 10 சதவிகிதம் என்ற அளவிற்கே தண்ணீர் இருப்பு உள்ளது.தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்துநகரங்களிலும், பல்வேறு கிராமப்புறங் களிலும் குடிநீர் பற்றாக்குறை பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 41948 நீர்நிலை களை அரசு ஒழுங்காக மராமத்து பணி களை மேற்கொண்டு, ஆழப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாத்து இருந்தால் ஓரளவு வறட்சியில் இருந்து மக்களைப் பாதுகாத்து இருக்க முடியும். ஆனால், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி உலக வங்கியிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க பெற்ற 3042 கோடி ரூபாயைக் கூட சரியான முறையில் உபயோகப்படுத்தாமல் தவறிய காணரத்தால் நீர் நெருக்கடி பெருமளவில் தமிழக மக்களை பாதித்து வருகிறது.அதன் காரணமாகவே சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம், நீர்நிலைகளை பராமரிக்க தவறிய காரணத்திற்காக ரூ. 100 கோடி அபராதம் விதித்தது.தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தமிழக அரசு இப்பிரச்சனையில் போதிய கவனம் செலுத்தாத நிலையிலும் ஆளும் கட்சியினரே நீர் நிலைகளை ஆக்கிரமித்து வரும் நிலையிலும் தமிழகம் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.தமிழக அரசு போர்க்கால அடிப்படை யில் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.


குடிநீர் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தவண்ணம் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட மக்கள்.