tamilnadu

img

இந்தியை திணிக்க முயற்சியா?

கோவை மாநகராட்சிக்கு சிபிஎம் கண்டனம்

கோவை, ஆக.19- பள்ளி மாணவர்களிடம் இந்தியை திணிக்க முயற்சிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: புதிய கல்வி கொள்கையில் கட்டாய இந்தி திணிப்பு முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைக் கண்டு மாநில அரசு இரு மொழிக் கொள்கையைத்தான் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் என தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி தமிழக அரசின் உறுதிமொழிக்கு விரோதமாக மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட  பள்ளியில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை சேர்க்க கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்களில் 14 ஆவது கேள்வியாக இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.  ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையிலேயே இந்தி படிக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தன்னிச்சையாக இந்த கேள்வியை வடிவமைத்ததா அல்லது மாநில கல்வித்துறை இந்த விண்ணப்பத்தை முன்மொழிந்துள்ளதா என்கிற ஐயம் எழுகிறது. மேலும், கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி மத்திய பாஜக  அரசின்  குலக்கல்வி முறையை புகுத்துகிற புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டதா என்கிற கேள்வி எழுகிறது. ஆகவே, தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் உடனடியாக இதனை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக நீக்கப்படும்

கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பங்களில் இந்தி தொடர்பாகவும், கைத்தொழில்  தொடர்பாகவும் கேட்கப்பட்ட  கேள்விகள் உடனடியாக நீக்கப்படும் என மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலர் உமா தெரிவித்தார். பழைய விண்ணப்பங்களில் இந்த கேள்விகள்  சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், அவை தற்போதுதான் தங்கள் கவனத்திற்கு வந்ததாகவும்,  உடனடியாக அவற்றை  நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் முதன்மை  கல்வி அலுவலர்  உமா தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் மழுப்பல்

கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, இந்த விண்ணப்பங்கள் பொய்யானது எனவும்,  தவறுதலாக  உள்நோக்கத்துடன் இவை வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால், முதன்மை கல்வி அலுவலர் தவறுதலாக கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இது உண்மையாக இருந்தால் பழையதை பயன்படுத்தி இருப்பார்கள் எனவும், கடந்த மூன்றாண்டுகளாக விண்ணப்பங்கள் எதுவும்  கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.  

பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக எடப்பாடி பழனிச்சாமி அரசு பறிபோக அனுமதித்து கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாகத்தான் இருமொழி கொள்கை என அறிவித்துவிட்டு இப்போது இந்தியை திணிப்பதும், பாஜகவின் அஜெண்டாவில் ஒன்றான குலக்கல்வி முறையை திணிப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறதா என்கிற ஐயம் எழுகிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு கோவை மக்களின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதுகுறித்து கோவை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தவறுதலாக விண்ணப்பம் விநியோகம் ஆகிவிட்டது. இதனை திரும்பப் பெறுகிறோம் என்கிறார்கள். மாநகராட்சி ஆணையரோ இப்படியான விண்ணப்பங்களே விநியோகிக்கவில்லை. இதுபோலி என்கிறார். எது உண்மை, யார் சொல்வது உண்மை. மாநகராட்சி நிர்வாகத்தை வேறு யாராவது இயக்குகிறார்களா என்கிற பல்வேறு கேள்விகள் எழுகிறது. எது எப்படியாகினும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக திணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.


 

;