tamilnadu

img

ஊழல் கேபிள்... ஊழல் அதிமுக

சென்னை, ஆக. 8 - ஆளுநர் மாளிகை புதனன்று இரவு வெளியிட்ட செய்தி குறிப்பின் மூலமாக, தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் கழற்றி விடப்பட்டார். தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்  நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணி கண்டன். அவர் வகித்து வந்த இலாக்காவை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  கூடுதலாக கவனித்துக் கொள்வார் என்று எடப்பாடி பழனிசாமி அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. உள்ளாட்சித் துறையில் அனைத்து டெண்டர்களையும் தனது சகோதரர் நிறு வனத்திற்கு வழங்கி அந்தத் துறையை உருக்குலைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி; வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்; கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போன்றவர்கள் எல்லாம் இன்னமும் பதவியில் நீடிக்க, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா, தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்க கோடி கோடியாய் பணம் கைமாறிய புகார்களுக்குள்ளான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்; பாலியல் புகாரில் சிக்கிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்; ஊழல், முறைகேடுகளில் சிக்கிய வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு; மின்துறை அமைச்சர் தங்கமணி என நீண்டுகொண்டே செல்லும் அமைச்சர்கள் மீதும் பாயாத எடப்பாடி, இரவோடு இரவாக மணிகண்டனின் பதவியை பறிக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது!

“கேபிள் டிவி கட்டணம் குறைப்பு குறித்தும் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கேபிள் டிவி நிறுவன தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்தும் முதல்வர் என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை. இனிமேல் நடத்துவார் என நினைக்கிறேன்”என செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டிதான் அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்புக்கு காரணம் என செய்திகள் ‘உலா’வுகின்றன. அது உண்மைதானா என்பது ஒருபுறம் இருக்கட்டும். யார் அந்த உடுமலை ராதாகிருஷ்ணன் என்பது முக்கியமானது. கோவை மாவட்டத்தில் சாதாரண கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்தவர்தான் உடுமலை ராதாகிருஷ்ணன். அவரை கேபிள் டிவி தலைவராக்கிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா, தனது அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறைக்கு அமைச்ச ராக்கினார். அதே ஜெயலலிதாதான் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தபோது, அவரிடம் இருந்த தகவல் தொழில் நுட்பவியல் துறையை பறித்தார். ராமநாதபுரம் தொகுதி யிலிருந்து முதன் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் மணிகண்டனிடம் ஒப்படைத்தார். இதற்கு காரணம் உண்டு. உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணனின் ‘சித்து’ விளையாட்டுகள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதாகும்.  அப்படி என்னதான் அவர் செய்தார்?

மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக தரத்திலான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையை வழங்கும் நோக்கத்துடன் 2007 ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கருணா நிதியால் தொடங்கப்பட்ட அரசு கம்பிவடத் தொலைக்காட்சி (அரசு கேபிள் டிவி) நிறுவனம்  4 ஆண்டுகள் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. 2011 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப் பேற்ற ஜெயலலிதா, அரசு கம்பிவடத் தொலைக் காட்சி சேவையை தொடங்கி வைத்தார். அப்போது, பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த புதிய சேவைத் தொடங்கப்பட்டிருப் பதாகவும், இது ஒரு மக்கள் நல நடவடிக்கை தான் என்றும் அதன்படி மாத சந்தா ரூ.70  என்றும், இதை உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் வசூலித்து ஒரு இணைப்புக்கு ரூ.50 வீதம் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 20 ரூபாயை அரசுக்கு செலுத்தினால் போதுமானது என்றும் தெரிவித்தார். அன்றைக்கு அரசு கேபிள் டிவி நிறு வனத்திற்கு 1.5 கோடி இணைப்புகள் இருந்தன. ஆனால், அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், 50 லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாக உண்மையை மறைத்துள்ளார். அதுமட்டுமின்றி, ஓர் இணைப்புக்கு ரூ.150 வரை கட்டணம் வசூலித்து உள்ளார்கள். இதன்மூலம் கணக்கில் வராத ஒரு கோடி இணைப்புகள் மூலமாக மட்டும் மாதத்திற்கு ரூ.145 கோடியை ‘கல்லா’ கட்டியிருக்கிறார். அதாவது, ஆண்டுக்கு ரூ.1,740 கோடியாகும். மேலும், ஒளிபரப்புக் கருவிகளை வாங்குவதில் நடந்த ஊழல் ஆகியவற்றையும் கணக்கில் சேர்த்தால் நெடுந்தொடர் போல நீண்டுள்ளது. இதற்கு அன்றைய மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டாகும். இத்தகைய ஊழல் முறைகேடுகளால் ஜெயலலிதாவால் உடுமலை ராதாகிருஷ்ணனின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்.

பல்வேறு காரணங்களால் செயலிழந்த நிலை யில் இருந்த அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்டினார் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என பெயர் மாற்றி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் செயல்பட்டு வந்த தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர் கட்டுப்பாட்டு அறைகளை அரசு நிறுவனம் கையகப்படுத்தியது. உண்மை யிலேயே இந்த நிறுவனத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பினால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் அந்தத்துறையின் அமைச்சர் என்ற முறையில் மணிகண்டனிடம் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.  தற்சமயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிகண்டனிடமிருந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத் தலைவர் பதவியை பறித்தார். பதவியை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்குவதற்கு முன், அவரது ஏகபோக நிறு வனமான ‘அட்சயா’தனியார் கேபிள் டிவிக்கு சொந்தமான இரண்டு லட்சத்துக்கும் அதிகமான இணைப்புகளையும், அவரது தயாரிப்பான ‘வெல்லெட்’ கம்பெனி செட்டாப் பாக்ஸ் உற்பத்தியையும் அரசு கேபிள் டிவி நிறுவனம் நிறுவனத்துடன் இணைப்பதற்கு முதல்வர் முயற்சிக்கவில்லை.

அரசு கேபிள் டிவி தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் ஊழல், முறைகேடு புகார் களுக்கும் பஞ்சம் கிடையாது. அமைச்சர் மணி கண்டனிடம் வந்தபிறகும் அது ஓயவில்லை. டிஜிட்டல், செட்டாப் பாக்ஸ் என பல மாற்றங்களை கொண்டு வந்த பிறகும், கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசு நிறுவனத்திடமிருந்த நுகர்வோர் படிப்படியாக தனியார் செட்டாப் பாக்ஸ் மற்றும் டிடிஎச் நிறுவனங்களுக்கு மாறிக்கொண்டனர். மற்ற நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் அரசு செட்டாப் பாக்ஸ் சந்தா தொகை விலை அதிகம் ஆகும். இந்த நிலையில் செட்டாப் பாக்ஸ் தொடர்பான டெண்டரில் அமைச்சர் மணிகண்டனின் சிபாரிசு நிறுவனத்துக்கு வழங்காமல் முதலமைச்சர் எடப்பாடி தரப்பு அவர்களுக்கு வேண்டிய ஒரு கம்பெனிக்கு கொடுத்துள்ளது. இதுகுறித்து அன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரைக்கும் மணிகண்டன் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. அப்போதே ‘குடுமிப்பிடி’சண்டை ஆரம்பித்துவிட்டது. ஒப்புக் கொண்டது 70 லட்சம் செட்டப் பாக்ஸ். ஆனால், அந்த நிறுவனம் இரண்டு வருடத்தில் 35 லட்சம்தான் கொடுத்துள்ளது. இந்த குளறு படியால் அரசு கேபிள் டிவிக்கு கடன் தொகை எகிறியுள்ளது. ஒட்டுமொத்தமாக கடன் தொகை ரூ.800 கோடியை தாண்டியது. இதையே காரண மாக கொண்டு அந்த ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது.  இந்த விவகாரங்களும் தலையெடுக்க, அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு நிதிஉதவி செய்ய முடியாது என எடப்பாடி ‘கை’விரித்துள்ளார். இந்தப் பின்னணியில் மணிகண்டன் பகிரங்கமாகப் பேச, அதையே சாக்கிட்டு அவரை இரவோடு இரவாக நீக்கிவிட்டனர்.

கே.பாலகிருஷ்ணன் கருத்து

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறுகையில், ‘‘அமைச்சர் மணி கண்டன் நீக்கத்தால் அதிமுக அரசின் கேபிள் டிவி  ஊழல் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள் ளது. இவர்களது ஆட்சியில் உள்ள ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஊழல் பேர்வழிகள்தான். சுகாதார அமைச்சர் விஜய் பாஸ்கரில் துவங்கி, ஒவ்வொரு வரும் நடத்திய ஊழல்கள், முறை கேடுகள் தொடர்ந்த வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் மணிகண்டன் பதவி பறிக்கப் பட்டுவிட்டதால், அதிமுக அரசு நேர்மையானது என்று அர்த்தமல்ல; மாறாக ஊழல் அமைச்சர் களிடையே பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட மோதலின் வெளிப்பாடுதான் இது’’ என்று கூறினார்.

சி. ஸ்ரீராமுலு