tamilnadu

img

கீழடி அகழாய்வுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்க!

மதுரை மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்

மாநாட்டு அரங்கில், கீழடி அகழாய்வு இடத்தை  வாலிபர் சங்க, கட்டுமான சங்க தோழர்கள் தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

மதுரை, அக்.13- இராமர் குறித்த ஆய்வு, கங்கை நதி தூய்மை, சரஸ்வதி நதி  ஆய்வு ஆகியவற்றிற்காக பல நூறு கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு கீழடி அகழாய்விற்கு ரூ.100 கோடி ஒதுக்கத் தயங்குவது ஏன் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பி னார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பண்பாட்டுக்கழகம் சார்பில் ‘கீழடி - வைகை நதி நாகரீகம்’ குறித்து மதுரையில் சனிக்கிழமை மாலை சிறப்பு மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் கலந்துகொண்டு சு.வெங்கடேசன் பேசியதாவது:-
 

தொல்லியல் அறிஞர்களை அதிகளவு கொண்ட மாநிலம் தமிழகம். அவர்களில் ஒருவர் அறிஞர் சாந்த லிங்கம். தமிழகத்தில் தொல்லியல் துறை இருக்கிறது என்பதை சாமானி யனுக்கும் தெரிவித்தது கீழடி தான். சமூகத்தின் பண்பாட்டையும், கலாச் சாரத்தையும் மீட்டெடுக்கும் துறை  அது. கீழடி வைகை கரை நகர நாக ரீகம் குறித்துப் பேசிக் கொண்டிருக் கிறோம். அதே நேரத்தில் (வெள்ளி, சனி) மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியிடம் சீன ஜனாதிபதி ஜீஜின்பிங் சீனாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பு குறித்துப் பேசி யிருக்கிறார். கடல்சார் வணிகத்திற்கு தொழில்நுட்பம் மிகவும் முக்கியம். அதில் சிறந்து விளங்கியது கிரேக்கம்,  சீனம், தமிழகம் தான். கீழடியில் இரண்டாம் கட்ட ஆய்வின்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதம் ஒன்று கண்டறி யப்பட்டது. அது 15 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தையது என கணிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழி சார்ந்தவை. தமிழகத்தில் 33 இடங்களில் பழமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள் ளன. அவற்றில் 23 வைகை நாகரீகம் சார்ந்தவை. முதற்கட்ட ஆய்வைத் தொடங்கிய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் வைகை நதி தொடங்கும் இடத்திலிருந்து இராம நாதபுரம் முகத்துவாரம் வரை சுமார் 290 இடங்களில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் உள்ள தையும் அந்த 290-இல் 100 கிராமங் களில் சங்ககால அடையாளங்கள் இருப்பதையும் அறிந்தார், அதில் ஒன்று தான் கீழடி. சங்க இலக்கியத்தில் வைகை நதியை ‘தமிழ் வைகை’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.  தமிழர் நாகரீகத்தின் தலைநகர் மதுரை. பழமை மட்கும், சீழ்பிடிக்கும். மரபும், வரலாறும் என்றும் அழியாது. கீழடியில் கிடைத்துள்ள மரபை, அந்த ஞானச்செருக்கை தூக்கிப்பிடிப்போம். கீழடியில் ‘இரவாதன்’ என்ற எழுத்து கண்டறியப்பட்டுள்ளது. ‘இரவாதன்’ என்றால் இரந்து வாழாதவன், யாரை யும் நம்பி வாழாதவன் எனப்பொருள். அப்படியென்றால் கீழடியில் எத்தகையவர்கள் வாழ்ந்திருக் கிறார்கள், தமிழர்களின் நாகரீகம் வள மையானது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. 

கீழடி மரபு சாதி-மத பேதமற்றது

கீழடியில் 5,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஒன்று கூட மதம், சார்ந்தோ வழிபாடு சார்ந்தோ இல்லை. கீழடி யில் சுமார் 250 பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பானை சாமானியனுக்குச் சொந்த மானது. குறிப்பாக பானையை பெண் களே அதிகம் பயன்படுத்தி யிருப்பார்கள். அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் பெண் களாலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆண் - பெண் பேதமில்லாத, சாதி  பேதமில்லாத எழுத்தறிவை, கல்வி யறிவை பிறப்புரிமையாகக் கொண்ட மரபினர் இங்கு வாழ்ந்துள்ளனர், குறிப்பாக தொழில் நுட்பம், அறிவியல் நுட்பம், நீரியல் தொழில்நுட்பம், உபகரணங்களை உருக்கும் தொழில் நுட்பம் கொண்ட மக்கள் கீழடியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வசித்துள்ளனர் என்பதும் பெரிய தொழிற்சாலை ஒன்று இருந்திருக்க லாம், வைகை நதி இந்தப் பகுதியில் ஓடியிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

கீழடி வைகை நகர நாகரீகத்தில் வசித்தவர்கள் தங்களது முன்னோர் களை, இயற்கையை, வீரர்களை வணங்கியிருக்கிறார்கள். அவர்கள் கடவுளை வழிபட்டதற்கான சான்று இல்லை. தங்கக் காசுகள், தாயக் கட்டைகள், அணிகலன்கள் கிடைத்துள் ளன. இது உபகரணங்களை (உலோகங்களை) உருக்கும் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் கைதேர்ந்த வர்களாக இருந்துள்ளனர் என்பதை நிரூபிக்கிறது.

கீழடியை குரங்குகளின் கைகளில் சிக்கிய பஞ்சுத் தலையணையாக மாற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. இதை சமூக ஆர்வலர்கள், தொல்லியல் அறிஞர்கள், இளைஞர் சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. ஐந்தாம் கட்ட அகழாய்வு முடிகின்ற தருணத்தில் நாளொன்றுக்கு சுமார் 7 ஆயிரம் பேர் வரை வந்து சென்றுள்ளனர்.

வீழ்த்தப்பட்ட துரோகம்

கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வு ஸ்ரீராமன் என்பவர் தலைமையில் நடைபெற்றது. அவர், வெறும் மூன்று பக்க அறிக்கையில், கீழடியில் பழங்கால கட்டுமானங்களின் தொடர்ச்சி இருந்ததற்கான ஆதாரம் இல்லை. எனவே ஆய்வை கைவிட்டுவிடலாம் எனக் கூறியிருந்தார். ஆனால் நான்காம் கட்ட ஆய்வை மேற் கொண்ட தமிழக தொல்லியல் துறை 58 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது. கீழடியில் பழங்கால கட்டுமான தொடர்ச்சி கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அரிய பொருட்கள் கிடைக்கப்பெற் றுள்ளன. ஆய்வைத் தொடர்ந்தால் நம்மு டைய கலாச்சாரமும், பண்பாடும் இன்னும் அதிகளவில் வெளிப்படும் எனக் கூறியுள்ளது. மூன்று பக்க வரலாற்றுத் துரோகத்தை தமி ழக தொல்லியல்துறையின் 58 பக்க அறிக்கை மீட்டெடுத்துள்ளது.

ஆசைவேறு-அறிவியல் வேறு

கீழடியைப் பார்வையிட்ட தமிழக அமைச்சர் ம.பா.பாண்டியராஜன் அவர்கள் தமிழர் பண்பாடு, திராவிடர் பண்பாடு என்ப தையெல்லாம் தாண்டி ‘பாரதப்பண்பாடு’ எனக்குறிப்பிட்டுள்ளார். ‘பாரதப் பண்பாடு’  என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும். அறிவியல் வேறு, ஆசை வேறு. பாரதப் பண்பாடு என்பது அமைச்சரின் ஆசையாக இருக்கட்டும், கீழடி இதுவரை அறிவியல் பூர்வமான முடிவுகளையே நமக்கு வெளிப்படுத்தியுள்ளன. அதை அவரே வெளியிட்டுள்ள 58 பக்க அறிக்கை யை உறுதி செய்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். நடைபெற்று முடிந்துள்ள ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் நமக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கக்கூடிய முடிவுகளை வெளியிடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனா லும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 400 மீட்டர் உயரத்திற்கு தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றுகளும் தற்போது கிடைத்துள்ளன. இதைவிட முக்கியமானது விலங்குகளின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. அதை ஆய்வு செய்தபோது அது திமில் கொண்ட காளையின் எலும்புக்கூடு என்பது தெரியவந்துள்ளது. இந்த திமில் கொண்ட காளைகள் தான் ஜல்லிக்கட்டில் ஓடுகின்றன. ஜல்லிக்கட்டிற்காகவும் நாம் போராட்டம் நடத்தியுள்ளோம்,

கீழடி ஆய்வுகளைப் பார்க்கும்போது அது பழைய மதுரையாக இருந்திருக்கலாம் அல்லது அங்கு மற்றொரு நகரம் இருந்திருக்க லாம். ஐந்தாம் கட்ட ஆய்வு 50 சென்ட் நிலத்தில் நடைபெற்றபோது 54 சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன. இது செல்வத் தொடர்பை யும், வளமையையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் ரோமானியம்-தமிழகம், ஆப்கா னிஸ்தான்-தமிழகம் இடையே வணிகத் தொடர்பு இருந்திருக்கலாம் என கருதப்படு கிறது.

கீழடியில் நடத்தப்படும் தொடர்ஆய்வு கள் புதிய வெளிச்சத்தை பரப்பும். கீழடியை பாதுகாப்பது நமது தனித்துவத்தை மட்டு மல்ல; நம்முடைய பாரம்பரிய வேர்களைப் பாதுகாப்பதாகும். கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவற்றை வாழ்விடப் பகுதியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்த தயங்கும் தமிழக அரசு

மத்திய அரசு ராமர் குறித்து ஆய்வு நடத்த, கங்கை நதியை தூர்வார, சரஸ்வதி நதியை ஆராய பல நூறு கோடி ரூபாய்களை ஒதுக்கு கிறது. ஆனால், கீழடி அகழாய்வுக்கு போது மான நிதியை ஒதுக்க மறுக்கிறது. கீழடி அகழாய்வுக்கான நிலங்களை கைய கப்படுத்தி அதற்குரிய நிவாரணத்தை விவ சாயிகளுக்கு வழங்குவது குறித்து தமிழக அரசு இன்னும் யோசிக்கவில்லை. ஆனால், இராமநாதபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஐந்தே மாதத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி சூரிய மின்சக்தி நிறுவனத்தை அமைக்கிறது. ஒரு தனியார் நிறுவனம் செய்யும் வேலையை மாநில அரசு செய்யத் தயங்குவது ஏன்?

மதுரையின் மீட்சிக்கு, வளர்ச்சிக்கு, முக மாற்றத்திற்கு கீழடி ஆய்வும், சர்வதேச அருங்காட்சியகம் அமைப்பதும் ஒரு அடித்தளமாக அமையும். நம்முடைய தொடர் முழக்கங்களும், போராட்டங்களும் தான் கீழடியைப் பாது காப்பதற்கு உதவி செய்யும். கீழடி அக ழாய்வுக்கு அரசு ரூ.100 கோடி வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்பு கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.இவ் வாறு சு.வெங்கடேசன் பேசினார். (ந.நி.)



 

;