மதுரை,ஏப்.26- தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அரசு மருத்துவமனை (ம) மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரியும் 3 லட்சம் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனோ தொற்று பரிசோதனை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மத்திய மாநில அரசுகளால் "கொரோனா” கொடூர தாக்குதலை தடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்தியா முழுவதும் 31 நாட்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழகத்திலும் ஊரடங்கும் சமூக இடைவெளியும் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும் "கொரோனாவின்" கொடூர தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் "கொரோனா" தொற்றிலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12,654 கிராம ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள் (ம) மருத்துவ கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது, தமிழகத்தில் நிலவி வரும் "கொரோனாவின்" கொடூர தாக்குதலும் "கொரோனா" தடுப்பு பணியில் அனைத்து தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் ஒரு சிலர் "கொரோனா" தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. எனவே, 3 லட்சம் தூய்மைப் பணியாளர்க ளை பாதுகாக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் , அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் "கொரோனா" தொற்று குறித்த பரிசோதனை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.