tamilnadu

img

என்றென்றும் லெனின் - பிரகாஷ் காரத்

ஏப்ரல் 22, 2020, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளர் விளாடிமிர் இல்யெவிச் லெனின் அவர்களது 150ஆவது  பிறந்த நாள். மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோருக்குப் பிறகு மார்க்சியத் தத்துவம் மற்றும் நடைமுறைக்கு மாபெரும் பங்களிப்பு செய்தவர் லெனின். ஏகாதிபத்தியத்தைப் பற்றி தீர்க்கமான முறையில் பகுப்பாய்வு செய்தது போன்ற அவரது மிக முக்கியத்துவம் வாய்ந்த சித்தாந்த ஆய்வுகள் மற்றும் புரிதல்கள்தான், 1917 அக்டோபரில் ரஷ்யாவில் உலகின் முதல் சோசலிசப் புரட்சி மலர்வதற்கு அடிப்படையாக இருந்தது.

ஆலைப் பாட்டாளி வர்க்கம் மற்றும்; காலனி நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்கள் திரள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் ஒரு புரட்சிகர உத்தியை வகுத்தார் லெனின். இந்த உத்தியின் மற்றொரு முக்கிய கோணம், தொழிலாளி - விவசாயி ஒற்றுமை என்பதாகும். புரட்சிகர நடைமுறை என்ற தளத்தில், தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனாக ஒரு புரட்சிகரக் கட்சி ஸ்தாபனத்தின் பங்கு என்ன என்பதை உணர்த்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் லெனின்.

அனைத்து விதமான திருத்தல்வாதங்கள் மற்றும் எதிரி வர்க்கங்களோடு கைகோர்த்துக் கொள்வது போன்றவற்றிற்கு எதிராக  தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர குணாம்சத்தைப் பாதுகாப்பதில் லெனின் ஓய்வின்றிப் போராடினார்.சோவியத் ஒன்றியம் எனும் புதிய அரசின் தலைவராக ஒரு சிறு காலமே லெனின் பொறுப்பு வகித்தார்; எனினும் அந்தக் காலத்தில், எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை பிரம்மாண்டமான முறையில் கட்டமைப்பதற்கான வழிகாட்டுதல்களை அளிப்பதில் லெனின் மகத்தான பங்கு ஆற்றினார்.

சோவியத் ஒன்றியத்தின் எதிர்காலத்திற்கு அந்த அனுபவங்கள் மிக அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன. மாமேதை லெனினது 150ஆவது ஆண்டைக் கொண்டாடுகிற இந்தத் தருணத்தில் ஏகாதிபத்தியத்தைப் புரிந்துகொள்வதில் லெனின் ஆற்றிய பங்கு என்ன என்பது பற்றியும், அந்தப் பங்களிப்பின் இன்றைய பொருத்தப்பாடு பற்றியும், நோய்களை எதிர்கொண்டு முறியடித்து மக்களைப் பாதுகாப்பதில் அப்போதுதான் புரட்சி மலர்ந்திருந்த இளம் சோவியத் ஒன்றியம் வெற்றிபெறுவதில் லெனின் ஆற்றிய பங்கு என்ன என்பது பற்றியும் இக்கட்டுரையில் பேசுகிறோம்.

ஏகாதிபத்தியம் இன்று...

முதலாளித்துவம் என்பது உலகளாவிய கட்டமைப்பாக மாறும் என்பதை மார்க்ஸ் முன்கூட்டியே சுட்டிக்காட்டினார். ஆனால் அவரது மறைவிற்குப் பிறகுதான் முதலாளித்துவமானது ஏகபோக முதலாளித்துவம் என்ற கட்டத்தை வந்தடைந்தது. லெனின் இந்தக் கோட்பாட்டை ஆழ்ந்து உள்வாங்கினார். ஏகபோக முதலாளித்துவம் தனக்குள்ளேயே பெற்றிருக்கிற வாய்ப்புகள் மற்றும் சூழல்களின் அடிப்படையில் அது ஒரு உலகளாவிய கட்டமைப்பாக ஏகாதிபத்தியமாக வளர்ச்சிபெறும் என்பதை லெனின் முன்வைத்தார்; அத்துடன், ஏகாதிபத்தியம் பற்றிய தனது கோட்பாட்டை உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான திட்டவட்டமான நீண்டகால உத்தி மற்றும் நடைமுறை உத்திகளோடு ஒருங்கிணைத்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாட்டில் சோசலிசப் புரட்சி என்பது, அந்த நாட்டின் சமூகங்களில் முழுமையான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட பிறகுதான் சாத்தியம் என்ற புரிதல் இருந்தது. ஆனால் அந்தப் புரிதலை, ஏகாதிபத்தியம் பற்றிய மிகத் தெளிவான புரிதலுடனும் பார்வையுடனும் உடைத்தெறிந்த முதல் மார்க்சிஸ்ட், லெனின் ஆவார். ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவ வளர்ச்சி என்பது சமமற்றதாக இருக்கிறது என்பதை லெனின் கண்டறிந்தார்; அந்தப் புரிதல்தான் முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மிகவும் பின்தங்கிய ஒரு நாட்டில் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதைச் சாத்தியமாக்கியது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், உலகளாவிய முதலாளித்துவச் சுரண்டல்  எனும் சங்கிலியில் பலவீனமான கண்ணி எங்கு இருக்கிறதோ அங்கு அதை உடைத்து நொறுக்கினால் புரட்சியை மலரச் செய்ய முடியும். இதை மிகச் சரியாக உணர்த்தி, நடத்திக் காட்டினார் லெனின். ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதலின் ஒரு வெளிப்பாடாக முதலாம் உலகப்போர் துவங்கிய பிறகு, அந்த முதலாளித்துவ சங்கிலியில் பலவீனமான கண்ணியாக ஜார் மன்னனின் ரஷ்யா இருந்தது.

ஏகாதிபத்தியம் குறித்த லெனினியப் புரிதல்தான், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளி வர்க்கம் நடத்துகிற போராட்டங்களை காலனி ஆதிக்கத்தின் பிடியில் உள்ள நாடுகளது மக்கள் நடத்தி வரும் தேசிய விடுதலைப் போராட்டங்களுடன் இணைப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

இன்றைக்கும் உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனம் ஏற்படுத்தியுள்ள உண்மையான நிலைமைகளை சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால், ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கோட்பாட்டின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்துவதன் மூலமே அதைச் செய்ய முடியும். ஏகாதிபத்தியம் குறித்து லெனின் பகுப்பாய்வு செய்த காலத்திலிருந்து இன்றைக்கு நிதி மூலதனத்தின் தன்மை என்பது மிகப்பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக கடந்த 30 ஆண்டு காலத்தில் மூலதனம் மிகப் பிரம்மாண்டமான அளவுகளில் குவிக்கப்பட்டிருக்கிறது;

சிலரது கரங்களில் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிதி மூலதனமானது உலகம் முழுவதிலும் லாப வேட்கையோடு அனைத்தையும் தன்வசப்படுத்தத் துடிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளோடு மூலதனத்தின் இத்தகைய நிதிமயமாக்கல் என்பது தேசிய அரசுகளின் பொருளாதாரம் மற்றும் அரசியல் இறையாண்மை மீதும் உழைக்கும் மக்களின் வாழ்விலும் மிகக்கடுமையான விளைவுகளை, தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்களால் ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் கொடிய ஆக்கிரமிப்புத் தன்மை மாறிவிட்டது என்று அர்த்தம் அல்ல.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகள், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான போர்களுக்கு இட்டுச் செல்லவில்லை என்ற போதிலும், ஏகாதிபத்திய முகாமின் தலைவனாக இருக்கக்கூடிய அமெரிக்கா, தேசங்கள் மீது யுத்தங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது; ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டணிகள் பல நாடுகளின் மீது போர்களை நடத்தி அவற்றை அடிபணியச் செய்யவும் அதன்மூலம் தங்களது ஆதிக்கத்தைப் பேணவும் முயற்சி மேற்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, தனது வல்லாதிக்கத்  திட்டங்களை உறுதியாக நடைமுறைப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் மிகக் கொடூரமான இதர தடைகளையும் ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது.

ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனமான இயல்பு என்பது தற்போது எப்படி வெளிப்படுத்துகிறது என்றால்,வளர்முக நாடுகளின் ஆதார வளங்களையெல்லாம் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் கைப்பற்றுவதன் மூலமும் மூலதனம் மேலும் மேலும் குவிக்கப்படுவது மற்றும் வளங்களை உறிஞ்சி எடுப்பது ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுகிறது; சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும், குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளையும் முற்றாகத் தனியார் கைகளுக்கு மாற்றிவிடுகிற நவீன தாராளமய கொள்கைகளின் மூலமாக வெளிப்படுகிறது; அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்கள் மீதான கொடிய சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதன் மூலமாகவும் வெளிப்படுகிறது.

1918-19 ப்ளூ கொள்ளை நோய்

இன்றைக்கு கோவிட்-19 கொள்ளை நோயால் உலகம் முற்றுகையிடப்பட்டிருக்கின்ற சூழலில் நாம் லெனினது 150வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். 185 நாடுகளின் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1918-19ஆம் ஆண்டில் மிகப்பெரிய கொள்ளை நோய் உலகை தாக்கியது. இன்ப்ளூயன்சா கொள்ளை நோய் அது (இந்த நோய் ஸ்பெயினிலிருந்து உருவாகவில்லை என்ற போதிலும் அதற்கு “ஸ்பானிஷ்” ப்ளூ என்று தவறுதலாக பெயர் வைத்தார்கள்). 

இன்ப்ளூயன்சா கொள்ளை நோய் 5 கோடி முதல் 10 கோடி வரையிலான மக்களின் உயிரைப் பறித்தது. அந்தக் காலத்தில் முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காரணத்தால் நோய் பாதித்த வீரர்களுடன் பல்வேறு நாடுகளுக்கு படைகள் சென்று வந்த காரணத்தால் உலகம் முழுவதும் ப்ளூ நோய் பரவியது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது; முதலாம் உலகப்போரில் போரிட்டு கொண்டிருந்த இந்திய வீரர்கள் திரும்பி வந்த பிறகு இங்கும் பரவி  1.6 கோடி முதல் 1.8 கோடி வரையிலான மக்கள் இறந்தார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்தக் கொள்ளை நோயானது, ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடந்த சில வாரங்களில் துவங்கியது.  இந்த நிலையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தின் சார்பில், அக்டோபரில் அமைதியை வலியுறுத்தி லெனின் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்; உலகின் மிகப்பெரிய சக்திகளுக்கு இடையே நடந்து வரும் பகைமையை முடிவுக்கு கொண்டுவருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அவரது அறைகூவல் ஒருபுறம் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளாலும் மறுபுறத்தில் ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளாலும் அலட்சியம் செய்யப்பட்டது. யுத்தத்தில் பிரிட்டனும் அதன் கூட்டாளிகளும் வெற்றி கிட்டப்போவதாக உணர்ந்தன; போரைத் தொடர விரும்பின. அந்தத் தருணத்தில் லெனின் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமானால், மிகக் கொடூரமான - உயிர்பறிக்கிற இன்ப்ளூயன்சா நோய்க்கு எதிரான வெற்றிகரமான போராக அது முடிந்திருக்கும். ஆனால் அதற்கு மாறாக, 1918 அக்டோபரில் ப்ளூ வைரஸ் இரண்டாவது கட்டமாக மிகத் தீவிரமாக பரவியது; பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிரையும் அது பறித்தது.

முதலாம் உலகப்போர், வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயமாக, ஏகாதிபத்தியத்தின் மனிதத் தன்மையற்ற குணாம்சத்தை அப்பட்டமாக காட்டி நிற்கிறது. மனிதர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு உடல் நலிந்து செத்து விழுந்து கொண்டிருந்த போது அதை முற்றாக அலட்சியம் செய்து ஆதிக்கவெறியில்  ஏகாதிபத்தியம் நடந்து கொண்டதன் விளைவை உலகம் அனுபவித்தது.

இந்தக் காலக்கட்டத்தில் ரஷ்யா உள்நாட்டு யுத்தத்தில் சிக்கியது. புரட்சியையும் தொழிலாளர் வர்க்க அரசையும் அழித்தொழிக்கும் நோக்கத்துடன் எதிர்ப்புரட்சி சக்திகள் ஒரு இழிவான போரினை துவக்கியிருந்தார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ரஷ்யா பட்டினியையும் கொள்ளை நோயையும் எதிர்கொண்டது. இன்ப்ளூயன்சா கொள்ளை நோயால் ரஷ்யாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்கில்லை. இந்த நோயால் பலியான முக்கியமான நபர், அந்த இளம் குடியரசின் மிக இளம் வயது தலைவரான போல்ஷ்விக் கட்சித் தலைவர் யாக்கோவ் செவ்ர்டு லவ். அவருக்கு அப்போது வயது 34 தான். இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனே ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவை தாக்குவதற்கும் புரட்சியை சீர்குலைப்பதற்கும் தங்களது கவனத்தை திருப்பினர். 11 நாடுகள், எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக படைகளை அனுப்பின. அவர்களது நோக்கமெல்லாம் கொள்ளை நோயின் இடைக்காலத்தில் இருக்கிறோம், அதைத் தடுக்க வேண்டும் என்பதல்ல; மாறாக புரட்சியை எப்படியேனும் ஒடுக்குவது என்பதுதான்.

பொது சுகாதாரத்தின் முன்னோடி

புரட்சி நடந்த பிறகு, சோவியத் கமிசார்களின் கவுன்சில் தலைவராக லெனின் பொறுப்பேற்றார். இது புரட்சிகர அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு இணையானது. இந்தக் கவுன்சிலின் தலைவராக அவர், மேற்கொண்ட நடவடிக்கைகளில் முதன்மையானது பொது சுகாதாரம் பற்றியதுதான். பொது சுகாதாரத்திற்கான மக்கள் கமிசார் குழு 1918 ஜூலையில் நிறுவப்பட்டது. தொற்று நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது இந்தக் குழுவின் முதன்மை இலக்காக இருந்தது. இதுதொடர்பாக 1920களில் லெனின் எழுதுகிறார் : “உள்நாட்டுப் போரில் நமக்கு கிடைத்த அனைத்து அனுபவங்களையும், நாம் கொள்ளை நோய்களை முறியடிப்பதில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்; அதுவே நமது தீர்மானகரமான இலக்காகும்”.

இது தொடர்பாக சோவியத் பின்பற்றிய கொள்கையின் முக்கியத்துவம் பற்றி 2017ஆம் ஆண்டில் லாரா ஸ்பின்னி எனும் எழுத்தாளரால் ஸ்பானிஷ் ப்ளூ கொள்ளை நோய் குறித்து எழுதப்பட்ட நூலில் இடம்பெற்றுள்ள ‘பேல் ரைடர்’ எனும் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஸ்பின்னி எழுதுகிறார்: “1920ல் முதன் முதலாக ஒரு மையப்படுத்தப்பட்ட, முழுமையான பொது சுகாதாரக் கட்டமைப்பை அமலாக்கிய உலகின் முதல் நாடு ரஷ்யா. அந்த சமயத்தில் அது அனைவருக்குமானதாக இல்லை; ஏனென்றால் அன்றைய சூழலில் அது கிராமப்புற மக்களை சென்றடையவில்லை... ஆனால், அதுவரையிலும் உலகில் இல்லாத மிகப்பிரம்மாண்டமான சாதனை அது; இந்த மாபெரும் சாதனையின் பின்னால் இருந்து இயக்கியவர் யாரென்று சொன்னால் அது விளாடிமிர் லெனின்... 

“ மருத்துவத்துறை  எதிர்காலம் தொடர்பான சோவியத் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ கண்ணோட்டம் 1924ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன்படி அரசாங்கம் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியது. பிற துறைகளில் சாதனைகள் செய்வது போல ஏராளமான மருத்துவர்களை உருவாக்குவது என தீர்மானித்தது; அதுமட்டுமல்ல, மக்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு, நோயால் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய தொழில் ரீதியான, சமூக ரீதியான நிலைமைகளை ஆய்வுசெய்யக்கூடியதாகவும், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல, அதை தடுப்பதற்கான வழிகளை முன்வைப்பதாகவும் மருத்துவக் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கொள்கை வரையறை கூறியது.

மருத்துவம் என்பது வெறுமனே உயிரியல் ரீதியானதாகவே அல்லது பரிசோதனை சார்ந்ததாகவோ இருக்கக்கூடாது, அது சமூகவியல் ரீதியாகவும் இருக்க வேண்டும் என்பதை லெனின் உணர்ந்தார்; அதே நேரத்தில் அது முழுமையான அறிவியல் சார்ந்ததாக இருக்க வேண்டும்; நுண்கிருமியியலை எடுத்துக் கொண்டால் அதன் அறிவியல் பூர்வமான பாதை, எதனால் ஏற்படுகிறது, அந்த நோயின் விளைவுகள் என்ன என்பது போன்ற விசயங்களையும் ஆய்வு செய்வதாக இருக்க வேண்டும் என்றும் லெனின் உணர்ந்தார். இந்த சிந்தனை பொது சுகாதாரத்தின் அடிப்படைத் தூணாக நின்றது. இப்படியாக அங்கு அறிவியல் என்பது முழு அங்கீகாரம் பெற்றிருந்தது” (லாரா ஸ்பின்னி, பேல் ரைடர் : 1918 ஸ்பானிஸ் ப்ளூ உலகை எப்படி மாற்றியது; கேப், 2017).

இப்படியாக, லெனினும் புதிய சோசலிச அரசும், பொது சுகாதாரத்தின் பல தளங்களில் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; கொள்ளை நோய்க்கு எதிரான போரை நடத்துவது எப்படி என்பதையும் இந்த உலகிற்கு காட்டினார்கள். ஆனால் இன்றைக்கு ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருக்கிற  நாடு எப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளை  மேற்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா! கொள்ளை நோயின்போதும் சரி, அது இல்லாத போதும் சரி, கியூபாவுக்கு எதிராகவும் வெனிசுலாவுக்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் பொருளாதார மற்றும் அரசியல் யுத்தத்தினை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அமெரிக்கா. தனக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கூட தனது கூட்டாளிகளின் நலன்களைப் பலியிட்டுத்தான் அபகரித்துக் கொள்கிறது.

ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்படத் தயாராக இருந்த முகக் கவசங்களை அமெரிக்கா அபகரித்து தனது நாட்டிற்கு கொண்டு சென்றது பற்றி ஜெர்மனியின் பெர்லின் மாகாண உள்துறை அமைச்சர் கடுமையாகச் சாடியிருக்கிறார். அமெரிக்காவின் செயல் ஒரு நவீன காலத்துத் திருட்டு என்று கண்டித்து இருக்கிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் மடிந்து கொண்டிருக்கிறார்கள்; அதற்கு காரணம் அந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டிருப்பதும் மிக மிக செலவு பிடிக்கும் ஒன்றாக மாற்றப்பட்டிருப்பதும்தான்.

கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ள டிரம்ப், அதை மறைப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு சீனாவோடு கைகோர்த்துவிட்டதாகக் கூறி அந்த அமைப்புக்கு தரவேண்டிய நிதியை நிறுத்திவைப்பதாக மிரட்டுகிறார். 

கொள்ளை நோய் பீடித்துள்ள இந்தக் காலத்தில், ஏகாதிபத்தியத்தின் கொடூர குணங்கள் குறித்து ஆய்வு செய்து, அதற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தில் ஒரு மனிதநேயமிக்க சமூக அமைப்பை - சோசலிசத்தை - நிர்மாணிப்பதற்காக மேற்கொண்ட ஈடுஇணையற்ற, ஓய்வற்ற மாபெரும் பணிகளுக்காக என்றென்றும் மனிதகுலத்தின் வரலாற்றில் உயர்ந்து நிலைத்து நிற்கிறார் லெனின்.

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
 




 

;