tamilnadu

img

இந்தியாவை பங்கு போட்ட இரண்டு ஏகபோகங்கள்...

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் மிகக் ‘கவர்ச்சியான’ அம்சம் போட்டியாகும். இந்த உண்மை முதலாளித்துவத்தின் கடும் விமர்சகர்கூட அங்கீகரிப்பதுதான். பொருளாதாரச் சக்தியுள்ளவர்கள் போட்டியிடலாம் என்பது உற்பத்திகளின், சேவைகளின் சிறந்த தர உயர்வுக்கும், ஒப்பீட்டளவில் குறைந்த விலை நிலவரத்திற்கும் காரணமாகிறது. நுகர்வோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் இங்கே தரப்படுகிறது. அதனால், இந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் நுகர்வோர் ராஜாக்கள் என வாதிடுகிறார்கள்.

ஆனால், இதற்கு நேர்மாறான ஒரு நிலையைக் குறித்தும் முதலாளித்துவம் சிந்திக்கிறது. அது ஏகபோகமயமாக்கல் பற்றியது. இங்கே போட்டியில்லை. மாறாக, ஒரு ஏகபோக முதலாளி தனியாகவோ அல்லது சில பொருளாதார குழுமங்களுடன் கூட்டுச்சேர்ந்தோ பொருளாதார மண்டலத்தின் அல்லது மண்டலங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுகிறார். இங்கே நுகர்வோர் அடிமைகளாக்கப்படுகிறார்கள். முதலாளி அல்லது சில முதலாளிகள் சொல்லுவதுதான் சந்தையில் வேதவாக்காகும். இறுதியில் மிக ஆபத்தான ஒரு பொருளாதாரச் சூழல் இதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

இவ்வகையான சில ஏகபோக முதலாளிகள் அரசாங்கத்துடன் சேர்ந்து மோசமான கூட்டு வைத்துக் கொள்வதைத் தொடர்ந்து  சர்வாதிகார-முழுஆதிக்கப் போக்குகள் எழுகின்றன. இது பிரிவினை வாதத்திற்கும் சிதைவுக்கும், பின்னர் தேசத்தின் முழு நாசத்திற்கும் இட்டுச்செல்கிறது. தாங்கள் மட்டுமே நிலைத்திருப்பதற்காகவும், தங்கள்வளர்ச்சிக்காகவும் வேண்டி இந்த ஏகபோக முதலாளித்துவ சக்திகள் மதவாதம், கபட தேசியம் முதலானவற்றைஇருபுறமும் கூர்மையுள்ள வாள்களாகப் பயன்படுத்துவதன் மூலம் காரியங்கள் பெரும் ஆபத்தான திசை நோக்கிச்செல்கின்றன. 2014 முதல் மத்திய பாஜக ஆட்சி இத்தகையஒரு கட்டத்திற்கு இந்தியாவை இட்டுச் சென்று கொண்டிருப்பதைக் காணலாம்.

அதானியின் ஆதிக்கம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு ஒப்படைக்கும் தீர்மானத்திலிருந்து இதைப் பார்க்கலாம். ஒரு விமான நிலையத்தின் வளர்ச்சிக்குத் தனியார் முதலீடு வருவது நல்ல விஷயமல்லவா என்று சில ‘சுத்த ஆத்மாக்கள்’ கேட்கிறார்கள். 2017 நவம்பர் 8 அன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்புநீக்கம் செய்தபோது அதை மிகவும் நல்ல காரியமாகப் புகழ்ந்துரைத்து எல்லா ஆதரவும் வழங்கியவர்கள் இதே ‘சுத்தஆத்மாக்கள்’தான். தனியார்மயமாக்கியபோது ஆறுவிமான நிலையங்களும் கிடைத்தது அதானி குழுமத்திற்குத்தான். இங்கு தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் ‘கவர்ச்சி’யை நிராகரித்துக் கொண்டு அது ஏகபோகமயத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது. அதானி குழுமம் ரூபாய் 15,000 கோடிக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தை, அதை நிர்மாணித்துச் செயல்படுத்திவரும் ஜீவிகேகுரூப்பிடமிருந்து வாங்கவும் செய்கிறது. மும்பை விமானநிலையத்தைச் செயல்படுத்திவருகிற ‘மியால்’ என்ற கம்பெனிதான் நவி மும்பையில் இந்தியாவில்  மிக நவீன விமான நிலையத்தை நிர்மாணித்து வருகிறது. இந்தபேரத்தின் மூலம் நவி மும்பை விமான நிலையமும் அதானிக்குச் சொந்தமாகிறது. இப்போது மேலும் மூன்று விமான நிலையங்களும் தனியார்மயம் ஆக்கப்படுகின்றன. இவையும் கிடைத்துவிட்டால் இந்தியாவில் 11 விமான நிலையங்களும் அதானிக்குச் சொந்தமாகிவிடுகின்றன.

விமான நிலையங்கள் தனியார்துறைக்கு மாறவேண்டும் என்கிற ஆலோசனையை முன்வைத்தது நிதிஆயோக்தான். அவர்களே தெளிவாக்கிய ஓர் ஆலோசனை, எந்தக் காரணத்தாலும் இரண்டுக்கு அதிகமான விமான நிலையங்களை ஒரு குரூப்புக்கு வழங்கக் கூடாது என்பதாகும். ஆனால் அது மீறப்பட்டு, எல்லாமே அதானி கைக்கு சென்று விட்டது.1988-ல்தான் கௌதம் அதானி அகமதாபாத்தைத் தலைமை இடமாகக் கொண்டு ‘அதானி என்டர்ப்ரைசஸ் லிமிடெட்’ என்ற தனது முதன்மைக் கம்பெனியை ஆரம்பித்தார். ‘கம்மாடிட்டி ட்ரேடிங்காக’ இருந்தது அவரதுமுக்கியமான பிஸினஸ். அதன் முதலீடு வெறும் ஐந்துலட்சம் ரூபாய்தான். மிகவிரைவில் பெரும் முன்னேற்றம்கண்ட இந்த குழுமம் 1995-ல் குஜராத்தில் இந்தியாவி
லேயே முதலாவது தனியார் முந்த்ரா துறைமுகத்தை நிர்மாணிக்கத் தயாரானது. 2001-ல் நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சரானவுடன் அதானி குழும வணிகம் மின்னல் வேகப் பாய்ச்சல் கண்டது. உலகத்திலேயே அபூர்வமான வர்த்தக சாம்ராஜ்ய வளர்ச்சியை 2001-க்குப் பிறகு கௌதம் அதானி பெறமுடிந்தது. 2014-ல் மோடிதில்லிக்கு வந்தவுடன் அதானி  சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியானது அம்பானியைத் தவிர மற்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கனவில் மட்டுமே காணமுடிகிற ஒன்றாகும். 74086 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தல் நடத்தியுள்ளார். எல்லா கம்பெனிகளும் மோசமான நெருக்கடியைச் சந்திக்கும்போது அப்படி எதுவும் பாதிக்காத இரண்டே இரண்டு கம்பெனிகள் (அதானி மற்றும் அம்பானிகுழுமங்கள்) மட்டுமே உள்ளன.கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் உலகில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற கம்பெனிகளில் ஒன்றாக அதானி குழுமம் மாறியுள்ளது. நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு ஆறு ஆண்டுகளில் 14 கம்பெனிகளை வாங்கிப் பெருக்கினார் அதானி.
மும்பை விமான நிலையத்தை ஜிவிகே குரூப்பிடமிருந்து வாங்கியதற்கு வருமான வரி வழக்குகள் உள்பட,ரெய்டுகள் நடத்தி நிர்பந்தம் செலுத்திய கதைகள் சில தேசியஊடகங்களிலும் வந்துள்ளன. முந்த்ரா துறைமுகத்திற்கு அடுத்து குஜராத் அரசு துவக்கிய எல்என்ஜி டெர்மினலை 750 கோடி ரூபாய்க்கு அதானி வாங்கியிருந்தார். ஆனால்,இந்த டெர்மினல் நிர்மாணிக்கப்பட்டது 4200 கோடி ரூபாய் செலவில் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

‘பரஸ்பரம் போட்டி’யைத் தவிர்க்கும் தந்திரம்
தனியார் துறைமுகத் துறை, நிலக்கரிக் கனிமம்,இறக்குமதி, மின்சார உற்பத்தி, சிட்டி கேஸ் விநியோகம்,சமையல் எண்ணெய் இறக்குமதி, விநியோகம் முதலியஏராளமான துறைகளில்  குழுமம் மிகப் பெரிய கம்பெனியாகும். இப்போது விமான நிலையம், நகர நீர்விநியோக மேலாண்மை, மின்சாரம் விநியோகம், டேட்டா சென்டர், பாதுகாப்பு தளவாடம் முதலான பல துறைகளிலும் நான்கைந்து ஆண்டுகளுக்கிடையே கால்பதித்த கம்பெனி அநேகமாக முகேஷ் அம்பானிக்கு உரிமையுள்ள துறைகளில் முக்கியமாகக் கைவைப்பதில்லை என்பது வெறும் நேர்மையுடன் ஒதுங்குவதாகாது. பட்டியலிடப்பட்ட ஆறு கம்பெனிகள் மூலமாக அதானி தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துகிறார். பங்குகளின் சந்தை மதிப்பு பெருமளவில் உயர்ந்த கம்பெனிகள்தான் இவையெல்லாம். இவற்றுக்கெல்லாம் துணை நிறுவனங்கள் தனியே உண்டு.இந்திய ரயில்வேயைத் தனியார்மயம் ஆக்குவது உறுதிசெய்யப்பட்டதால் அதானி ரயில் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 2005-ல் துவக்கப்பட்ட கம்பெனியை மிகவும் வேகப்படுத்தினார். ‘சாந்திலால் அதானி ஃபேமிலி டிரஸ்ட்’ என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் கம்பெனிகளெல்லாம் உள்ளன.

மற்றொரு குஜராத்காரராகிய முகேஷ் அம்பானி எண்ணெய் சுத்திகரிப்பு, விநியோகம், இயற்கை எரிவாயுபரிசோதனை, தொலைத் தொடர்பு ஆன்லைன் வர்த்தகம்,பாதுகாப்புத்துறை, ஊடக என்டர்டைன்மென்ட், ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ், லாஜிஸ்டிக் முதலான நிறையதுறைகளில் பெரும் ஏகபோகமாக மாறும்போது அதானியுடன் போட்டியிடுவதில்லை என்கிற விஷயம் மிகக் கவனத்திற்குரியதாகும். வெளியே உள்ள ஏதோ வர்த்தக மையங்கள் இவர்களின் பரஸ்பரப் போட்டியைத் தவிர்க்கிறதா என்று சந்தேகிக்கலாம். இந்த இருவரது கம்பெனிகளின் ஏகபோகமய வளர்ச்சியால்தான் கார்ப்பரேட் சில்லறைவர்த்தக துறையை கிஷோர் பியானி தனது ஃப்யூச்சர் குரூப்பை அம்பானிக்கு விற்று களத்திலிருந்து வெளியேறினார். 24,500  கோடி ரூபாய்க்கு அது விற்கப்பட்டது.இவையெல்லாம் தனியார்மய முதலாளித்துவப் பொருளாதார முறையின் லட்சணங்களை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, இது ஏகபோகமயப் பொருளாதார அமைப்பின் வெளிப்பாட்டு வடிவமாகும். அரசியல் தலைமையும் வர்த்தக ஏகபோகங்களும் பரஸ்பரம் கூட்டாகஒன்று சேரும்போது அது முதலாளித்துவத்தின் மிக ஆபத்தான வடிவமாகப் பரிணமிக்கும்.

...ஜார்ஜ் ஜோசப்... தேசாபிமானியிலிருந்து... 

தமிழில்: தி.வரதராசன்

;