tamilnadu

img

வீரஞ்செறிந்த போராளி தோழர் ஏ.வி.எம் ஜி.வெங்கடேசன்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நாகை தாலுக்காவில் செங்கொடி இயக்கம் பலம் வாய்ந்த பல கிராமங்களில் ஒன்றான வெண்மணச்சேரி கிராமத்தில் பண்ணை கூலித்தொழிலாளியான வீரப்பன் – வீரம்மாள் தம்பதியர்களுக்கு மூத்த மகனாக  ஏ.வி.முருகையன் 04.02.1954-ல் பிறந்தார். இவருடன் சண்முகவேல், பஞ்சவர்ணம், பால்ராஜ், வாசுகி என நான்கு  சகோதர சகோதரிகள் ஆவார். ஏ.வி.எம் என அன்போடு அழைக்கப்படும் ஏ.வி.முருகையன் இளம்வயதிலேயே விவசாய கூலி வேலைக்கு அனுப்பாமல், நன்றாக படிக்க வைக்க வேண்டுமென தந்தையார் வீரப்பனின் கடும் முயற்சியின் விளைவாக வெண்மணச்சேரி பண்ணையார்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு துவக்கப்பள்ளியிலேயே ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பிறகு மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு விவசாய கூலி வேலைக்கு சென்றார்.  அக்கால சூழலில்தான் வெண்மணச்சேரி கிராமத்தில் நிகழ்ந்த பல பண்ணை அடிமை கொடுமைகளைக்கண்டு சக தோழர்களோடு போராட்டத்தில் இறங்கினார்.

மரக்காலில் சோறு தருவது, தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக பேசுவது, பொங்கல் விழாக்களின் போது உழைப்பாளி மக்கள் பண்ணையார் வீட்டிற்கு புல்லு கட்டுடன் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு தப்படித்து சென்று பண்ணையார் வீட்டில் மாட்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற அடிமைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஊரிலுள்ள கட்சி தோழர்களோடு இணைந்து தாழ்த்தப்பட்ட மக்கள் இனி மாட்டுப்பொங்கலுக்கு பண்ணையார் வீட்டிற்கு செல்லக்கூடாது. நமது தெருவிலேயே மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்து தமிழர் விளையாட்டுக்களான சிலம்பம், கபடி, ஆடல் பாடல் என நாடகம் நடத்தி கொண்டாடுவார்கள். இந்த நாடகத்தில் பண்ணை அடிமையை எதிர்த்த கதாபாத்திரத்தில் சக தோழர்களோடு, தோழர் ஏ.வி.எம் அவர்களே பண்ணை அடிமை முறையை விளக்கும் வகையில் நாடகம் நடித்து காட்டினார்.  வெண்மணச்சேரியில் சோசலிஸ்ட் வாலிபர் சங்கம் என்ற இளைஞர் அமைப்பை ஏ.வி.எம் உள்ளிட்ட பல இளைஞர்கள் இணைந்து தோழர் ஆர்.முத்துப்பெருமாள் வழிகாட்டுதல்படி பல விளையாட்டு வீரர்களையும் இணைத்து சங்கம் சிறப்பாக செயல்பட்டது.

 1975-ல் ஈசனூர் அய்யாக்கண்ணு, வெண்மணச்சேரி மருதன், காத்தான் போன்ற சிபிஎம் தோழர்களின் முயற்சியால் ஏ.வி.எம் சிபிஎம் கட்சி உறுப்பினர் ஆனார். அப்பொழுது நாகை தாலுக்கா செயலாளர் என்.வடிவேல் தலைமையில் தஞ்சை மாவட்ட சிபிஎம் செயலாளர் கே.ஆர்.ஞானசம்மந்தம் கட்சி ரசீது வழங்கினார்.  1976-ல் எமர்ஜென்சி காலகட்டத்தில் ஏ.வி.எம் - ஜெயம் தம்பதியர்களுக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அன்பரசி என்ற மகளும், பகத்சிங் என்ற மகன் வழக்கறிஞராக கட்சியில் உறுப்பினராக உள்ளார். 1984-ல் வெண்மணச்சேரி துரைசாமி தேவர் பண்ணையில் பண்ணை ஏஜெண்ட் ரெங்கசாமி நாயுடு அங்கு வேலை செய்த தாழ்த்தப்பட்ட கூலித்தொழிலாளர்களை சாதியை சொல்லி தரக்குறைவாக பேசினார். இதனால் கட்சி கிளை மூலம் பண்ணை ஏஜெண்டை கண்டித்து எட்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. வெளி ஊர் ஆட்கள் வந்தனர். தடுத்த போது போலீஸ் அடிதடி கலவரம் ஏற்பட்டது.

பிறகு காவல்துறை அதிகாரிகள், தாசில்தார், மிராசுதார்கள், கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தையில் ஏ.வி.எம் கூலித்தொழிலாளர்களை பண்ணை ஏஜெண்ட் பேசியது தவறு என ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியபோது நெல் உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவராக இருந்த ஆய்மழை ராமநாததேவர் உங்களிடம் எல்லாம் நாங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என திமிராக பேசினார். ஏ.வி.எம் இது எங்கள் ஊர் பிரச்சனை ஆய்மழை மிராசுதாருக்கு இங்கு என்ன வேலை அவரை வெளியே போகச்சொல்லுங்கள் என தாசில்தாரிடம் கூற தாசில்தாரும் அவர்கள் ஊர் பிரச்சினை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் எனக் கூற ஆய்மழை மைனர் பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். பிறகு ஏஜெண்ட் தொழிலாளர்களை பேசியது தவறு என மன்னிப்பு கேட்க பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. போராட்டம்  வெற்றி பெற்றது. வெண்மணச்சேரியில் குடியிருக்க இடமில்லாத உழைப்பாளி மக்கள் கட்சி கிளை முடிவுப்படி துரைச்சாமி பண்ணையாருக்கு சொந்தமான இடத்திலேயே வீடு கட்டினர்.

பிறகு போலீஸ் தாக்குதல் பேச்சுவார்த்தை என பேசியதில் ஏ.வி.எம் சாதுரியமாக  பண்ணையாரிடமே சுமூகமாக பேசி நிலம் விலைக்கு வாங்கிக்கொள்வது என முடிவு செய்து 22 பேருக்கு வெண்மணச்சேரி வடபாதி கிராமத்தில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது.  நிலப் போராட்டத்தில் பி .வைரன், எம்.நடராஜன், ஆர் .முத்துபெருமாள் ஏ.வி.எம் போன்ற தோழர்களோடு முன் நின்று நடத்தினார்.  அமரகோன்முலை கிராமத்தில் உள்ள நிலமில்லா உழைப்பாளி மக்களுக்கு திருவாய்மூர் தியாகராஜ சுவாமிக்கு சொந்தமான 3 வேலி நிலம் சுமார் 80 குடும்பத்திற்கு கட்சி மூலம் 1980-ல் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் எடுக்குடி என்.வடிவேல், பி.வைரன், எம்.நடராஜன், ஆர் .முத்துபெருமாள், எஸ்.தங்கவேல், மருதன், பி.தூண்டி, காத்தான், டி.கிருஷ்ணமூர்த்தி, கே.மன்மதன், ஏ.வி.எம் உள்ளிட்ட தோழர்கள் முக்கிய பங்கு வகித்தனர். 

ஊராட்சி மன்ற தலைவராக 
1986 பிப்ரவரி 26-ல் நடைபெற்ற வெண்மணச்சேரி ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக ஏ.வி.எம் வெற்றி பெற்றார். 1986-91 காலகட்டத்தில் வெண்மணச்சேரி தென்பாதி தெற்கு தெரு மற்றும் மேலத்தெருவிற்கு பட்டா நிலத்தை வாங்கி சாலை அமைக்கப்பட்டது. தென்பாதி மேலத் தெருவிற்கு பட்டா இடத்தை வாங்கி புதியதாக சாலை அமைக்கப்பட்டது. அமரகோன்முலையிலிருந்து சக்கிலியன் வாய்க்கால் வரை புதிய மண் சாலை அமைக்கப்பட்டது. காட்டியானயோடை மேலத்தெருவிற்கு காடந்தேத்தி கோவில் நிலத்தை வாங்கி புதிதாக சாலை போடப்பட்டது. புதியதாக ஐயனார் குட்டை என்ற குளம் வெட்டப்பட்டது. 1987ல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. அச்சுக்கட்டளை கிராமத்திற்கு புதிதாக மின்கம்பங்கள் நடப்பட்டது. 2001-2006 காலகட்டத்தில் கீழையூர் ஒன்றிய மாவட்ட கவுன்சில் உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார்.

வி.தொ.ச -அரங்கத்தில்    
1982-ல் கீழையூர் ஒன்றியமானதிலிருந்து விவசாய தொழிலாளர் சங்கத்தினுடைய ஒன்றிய செயலாளராக ஏ.வி.எம் பணியாற்றினார்.  குடவாசல் தங்கையன் படுகொலைக்கு பிறகு குடவாசல் தாலுகாவின் பதட்டமான சூழலில் கட்சி மாவட்ட மையத்தின் சார்பில் ஏ.வி.எம் அவர்களை  பொறுப்பாக நியமித்த போது அதனை சிறப்பாக அங்கு பணியாற்றினார். 1997-ல் பிப்ரவி 1,2 தேதிகளில் செம்பனார்கோவிலில் நடைபெற்ற மாநாட்டில் பி.ஏ.குருசாமி தலைவராகவும், ஏவிஎம் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நீண்டகாலம் வி.தொ.ச மாவட்ட செயலராக, மாநில நிர்வாகியாகவும் பணியாற்றினார்.  1986 செப்டம்பர் மாதம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச கூலியாக ஆண்களுக்கு ரூ.15, பெண்களுக்கு ரூ.12-ம் அரசு அறிவிக்க வேண்டுமென பல இடங்களில் போராடிய போது ரூ.12, ரூ.10 என கீழையூர் ஒன்றியங்களில் கூலி உயர்வு பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கூலி உயர்வு பெறப்பட்டது. இப்போராட்டங்களை சக தோழர்களோடு ஏ.வி.எம் முன்னின்று நடத்தினார்.

மார்க்சிஸ்ட் கட்சியில்
1992-ல் கீழ தஞ்சை மாவட்டத்தின் கட்சி மாவட்ட குழு உறுப்பினராக இடைக்கால தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1995 பிப்ரவரி 1, 2, 3 தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் 15வது மாநாட்டில் மாவட்ட குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார். 1997 லிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பிறகு நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக 11 ஆண்டு காலம் சிறப்பாக செயலாற்றினார். மாநில குழு உறுப்பினராகவும் மாநில குழு சிறப்பு அழைப்பாளராகவும் மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். தஞ்சை மாவட்ட முன்னணி தோழர்களான கே.ஆர். ஞானசம்பந்தம் , பி.எஸ்.தனுஷ்கோடி, ஜி. பாரதி மோகன் , ஜி. வீரையன் , எம். செல்லமுத்து, வி. தம்புசாமி போன்ற மூத்த தோழர்களுடனும் இன்றைய மாவட்ட தோழர்களுடனும் மற்ற பிற அரசியல் கட்சியின் தலைவர்களுடனும் எளிமையாக பழகி அவர்களின் நன்மதிப்பை பெற்றவர் ஏ.வி.எம். டிராக்டர் மறியல் போராட்டத்தில் டிராக்டர் சங்க மாவட்ட செயலாளர் கஸ்பர், சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட 250கும் மேற்பட்ட டிராக்டர் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் போராட்டத்தில் காவல் துறையின் கடுமையான அடிதடிக்கும் தலைவர்களோடு பி.செல்வராஜ், சிங்காரவேல், மாரியப்பன், உள்ளிட்ட தோழர்களோடு 11 நாட்கள் சிறை தண்டனை யும் ஏ.வி.எம். அனுபவித்தனர்.

 2008 ஜுன் 12ல் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்திய மாணவர் சங்கம் சார்பில் நாகையில் நடைபெற்றது 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து மாலை 4 மணிக்கு பூட்டினர். பூட்டி தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனை அறிந்த வி.மாரிமுத்து,எம்.எல்.ஏ., நாகைமாலி, ஜி.வாஞ்சிநாதன், வி.அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்களோடு வந்த ஏவிஎம் அவர்கள் மாணவ மாணவிகளை எதற்கு அரையில் வைத்து பூட்டினீர்கள் அவர்களை திட்டியது யார் என கடுமையாக பேசினார். பிறகு மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரே நேரில் வந்து அதிகாரிகள் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டார். பின்னர் இரவு 9 மணியளவில் மாணவ மாணவிகளை வெளியே கட்சி தோழர்கள் அழைத்துவந்தனர்.  வேதாரண்யம் அம்பேத்கார் சிலை பாதுகாப்பு போராட்டத்தில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்துகொண்ட கண்டன பொதுக்கூட்டத்தில் ஏவிஎம் அவர்கள் பேசும் போது 40ல் 16 போகுமா? போகாதா? என்று கேட்டார். மக்கள் போகும் என்றார்கள்!. படிக்காத பாமர மக்களுக்குக்கூட 40-ல் 16 போகுமென்று தெரியும்.

ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்த மாவட்ட அதிகாரிகளுக்கு 40 அடி சாலையில் 16 அடி தேர் போகும் என்பது அவர்களுக்கு தெரியாதா? ஏன் அம்பேத்கார் சிலையை இடிக்க வேண்டும்? அதிகாரிகள், ஆதிக்க சக்தியினர் பக்கம் உள்ளார்களா? என கடுமையாக சாடினார். பிறகு பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அம்பேத்கார் சிலை பாதுகாக்கப்பட்டது.  அதேபோல செட்டிப்புலம் கோவில் நுழைவு போராட்டம், விழுந்தமாவடி கோவில் நுழைவு போராட்டம், மாத்தூர் கோவில் நுழைவு போராட்டம், வேதாரண்யம் ஆதனூர் எஸ்.வடிவேல் படுகொலை போன்ற சாதீய தீண்டாமைக்கு எதிரான பல போராட்டங்களில் சக தோழர்களோடு ஏவிஎம் பங்கு மகத்தானதாகும்.  விவசாய கூலி தொழிலாளி குடும்பத்தில் பிறந்து தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவே அவர் வாழந்த 66 ஆண்டுகளில் சுமார் 46 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் பொது வாழ்க்கையினை வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார். கட்டுரையாளர் :
 தஞ்சை மாவட்ட வரலாற்று ஆய்வாளர்

;