tamilnadu

img

எதேச்சதிகார அரசை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்! - பிரகாஷ் காரத்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவையொட்டி  சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  பிரகாஷ் காரத் ஆற்றிய உரையின் பகுதிகள்

ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநில பேரவைத்தேர்தல் அறிக்கையில் வி.டி.சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும்  என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனிதர்தான் ‘இரட்டை தேசம்’ என்ற திட்டத்தை இந்தியாவில் முதலில் எழுப்பியவர். இந்து தேசம், முஸ்லீம் தேசம் என இரு தேசங்களாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்று கூறியவர். முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சி முஸ்லீம்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கையை எழுப்புவதற்கு முன்பே  1923ல் சாவர்க்கர் இந்த கோரிக்கையை எழுப்பிவிட்டார். இந்தியா இந்துக்களின் தேசம். இந்து மதத்திற்கு அப்பாற்பட்டு வெளியில் உள்ள புண்ணிய பூமிகளை வழிபடுபவர்கள் இந்தியர்கள் அல்ல; மெக்கா, மதினாவை புண்ணிய பூமியாகக் கருதுபவர்களை இந்தியர்களாகக் கருதமுடியாது என்று சாவர்க்கர் கூறினார்.

யார் இந்த சாவர்க்கர்?

மகாத்மா காந்தி படுகொலையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தில் கோட்சே சகோதரர்களுடன் சேர்த்து சாவர்க்கரும் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள சாவர்க்கர் இல்லத்தில் வைத்துத்தான் மகாத்மா காந்தி படுகொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையை அவர் சந்தித்தார். காந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் படிக்கப்பட்டபோது இந்த படுகொலைக்கான சதித்திட்டத்தில் சாவர்க்கருக்கு பங்கு உள்ளது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ள போதிலும் அதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத்தரப்பினர் தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி கூறினார். அப்படிப்பட்ட நபருக்குத் தான் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று இன்று பாஜக கூறுகிறது. அதுவும் மகாத்மா காந்தியடிகளின் 150வது ஆண்டு பிறந்தநாளை நாடே கொண்டாடி வரும் இவ்வேளையில் பாஜக இவ்வாறு கூறுகிறது. 

முஸ்லீம்களுக்கு எதிரான அரசு 

மோடி அரசின் முதல் ஐந்தாண்டுகளில் பல துன்பங்களை நாம் அனுபவித்தோம். கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பெரும்பான்மை இடங்களை அதிகரித்துக்கொண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நமது குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மையை அழித்தொழிக்கும் வேலையில் அது இறங்கியுள்ளது. நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை அம்சங்களை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறது. இந்தியாவில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் இந்தியர்களாக அங்கீகரிப்பது என்ற நிகழ்ச்சி நிரலில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இதற்காகக் குடிமக்கள் பதிவேடு திருத்தச் சட்ட மசோதாவை  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வந்தது. அச்சட்டம் என்ன கூறுகிறது என்றால், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள், இந்துக்களாக அல்லது சீக்கியர்களாக இருந்தால், அவர்கள் சட்டவிரோதமான முறையில்  வந்திருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை தருவோம் என்கிறது. ஆனால், முஸ்லீம்களாக இருந்தால் தரமாட்டோம் என்கிறது.

அரசியல் சாசனம் கூறுவது என்ன?

நமது அரசியல் சாசனம், அனைத்து குடிமக்களும் சமமானவர்களே; மதம், சாதி, மொழி, பாலினத்தின் பெயரால் எவர் ஒருவருக்கும் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்று கூறுகிறது. ஆனால் மதத்தின் பெயரால் குடியுரிமை வழங்கப்படும் என்ற புதிய முறையை பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்துக்கள் வந்தால் குடியுரிமை உண்டு; முஸ்லீம்களுக்கு இல்லை. இந்த சட்டத்திருத்த மசோதாவைக் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் வரும் கூட்டத்தொடரில்  நிறைவேற்றப்போவதாக ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். நமது அரசியல் சாசனத்தில் இதுகுறித்து எங்கும் சொல்லவில்லை.

உண்மையைப் பொறுக்க முடியவில்லை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஒழித்துவிட்டார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டதாக அரசு கூறுகிறது. அவர்கள் அதை மட்டுமே செய்யவில்லை. மாநிலத்தையே கலைத்துவிட்டார்கள். தற்போது ஜம்மு-காஷ்மீர், லடாக் என மத்திய ஆட்சிக்குட்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிவிட்டனர். ஏன் இதை அவர்கள் செய்தார்கள் என்றால், இந்தியாவில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த ஒரே மாநிலம் ஜம்மு காஷ்மீர் தான். இந்த உண்மையை அவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. இதுதான் அந்த மாநில சிதைப்புக்கான உண்மையான காரணம்.

காஷ்மீர் துயரம்

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கிய பின்னர் இந்தியாவுடன் அந்த மாநிலம் முழுமையாக இணைந்துவிட்டதாக ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள்.இது அப்பட்டமான பொய். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவேண்டுமென்றால் ஏன் அதனுடன் மாநிலத்தையும் கலைத்தார்கள்? இன்றைய ஆட்சியாளர்களின் உண்மையான  குணாம்சம் இதுதான். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்தியக் குடிமக்கள். கடந்த 75 நாட்களாக அவர்கள் சொந்த மாநிலத்திற்குள்ளேயே சுதந்திரமாக நடமாடமுடியவில்லை. தகவல்தொடர்பு உரிமை மறுக்கப்பட்டது. மொபைல்போன், இன்டர் நெட் துண்டிக்கப்பட்டது. பேச்சுரிமை நசுக்கப்பட்டது. தற்போது சில இடங்களில் தகவல்தொடர்பு இணைப்பு வந்துள்ளது. குறைந்த மொபைல் போன்களே செயல்படுகின்றன. மருத்துவமனைக்குக் கூட சிகிச்சைக்காகச் சுதந்திரமாகச் சென்று வரமுடியாது. உங்களது குடும்பத்தில் உள்ள ஒருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்லமுடியாது. காரணம் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. கார் இருந்தாலும் சுதந்திரமாகச் சென்று வரமுடியாது. 21வது நூற்றாண்டில் இப்படி ஒரு நிலைமையை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? 75 லட்சம் மக்கள் திறந்து வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று காஷ்மீர் மக்கள் அனைவரும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

பத்திரிகைகள் முடக்கம்

ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் யாரும் வரவில்லை. பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.கடைகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. காலையில் 2மணிநேரம் மட்டுமே கடைகள் திறக்கப்படும். மக்கள் தங்களுக்கு அரசால் இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராடக்கூடாது என்பதற்காக இப்படி அரசு நடந்துகொண்டது.பத்திரிகைகளும் முடக்கப்பட்டன. அனைத்து பத்திரிகை ஆசிரியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர்.

கடமை தவறிய நீதித்துறை

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நீதித்துறையும் கடமையைச் செய்யத் தவறிவிட்டது. நாட்டு மக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க அது தவறிவிட்டது.இது கவலையளிக்கிறது. நமது நாட்டின் மதச்சார்பின்மை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தவும் இந்து தேசம் என்ற திட்டத்தை அமல்படுத்தவும் ஒருபக்கம் தீவிரமாக முயற்சித்துக் கொண்டே மறுபக்கம் அரசு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் ஒன்று சேர்ந்து நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார மந்தநிலை

நாட்டில் உள்ள பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அந்நிய மூலதன நலனுக்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. நாடு இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பொருளாதார மந்த நிலை உற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அது நமது பொருளாதாரத்தை தேக்கநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதற்குத் தீர்வு காணாமல் கார்ப்பரேட் வரியை அரசு பெருமளவு குறைத்துள்ளது. இதுதான் பாஜக அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கினால் பொருளாதார மந்த நிலையிலிருந்து விடுபட்டுவிடலாம், வருவாயைத் திரட்டலாம்  என்று அரசு கருதுகிறது.

யார் தேசத் துரோகி?

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மிகவும் லாபகரமாகச் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும் அது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. நிலக்கரிச் சுரங்கம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆகியவற்றில் 100 விழுக்காடு அந்நிய முதலீடுகளை அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் வகையில் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வங்கி, காப்பீட்டுத்துறைகளையும் ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. அங்கும் தீவிரமாகத் தனியார் மயம்  புகுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். ஆனால் இப்படிப்பட்ட பாஜகவினர்தான் தங்களை நாட்டின் மிகப்பெரிய தேசியவாதிகள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களை எதிர்ப்பவர்களைத் தேசத் துரோகி என்கிறார்கள். இப்படிப்பட்ட பேராபத்தை நாடு இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறது.

போராட்டத்திற்கு தயாராவோம்

ஒருபக்கம் மத துவேஷத்தை அதிகரித்துக் கொண்டே மறுபக்கம் நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் அந்நிய முதலீட்டாளர்களுக்குத் தாரைவார்த்து வருகிறார்கள். நமது நாட்டு மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். எனவே இந்த தாக்குதலை எதிர்த்து நாம் கடுமையான போராட்டங்களை நடத்தவேண்டியுள்ளது. இதற்காக பல்வேறு தரப்பு மக்களை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசை எதிர்த்து மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து போராடவேண்டியுள்ளது. இந்த எதேச்சதிகார அரசை எதிர்த்து இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையைக் கட்டவேண்டிய கடமை நம்முன் உள்ளது. நாம் தான் பாஜகவை எதிர்த்து கருத்தியல் ரீதியாகவும்  அரசியல் ரீதியாகவும் போராடக்கூடியவர்கள் என்பதை ஆட்சியாளர்களும் உணர்ந்துள்ளனர்.


 

 

;