tamilnadu

img

ஊழியர் நலனும் சமூக அக்கறையும் சங்கத்தின் இரு கண்கள்! - மு.அன்பரசு

நெருப்பை சந்திக்காத தங்கமோ, உளியை சந்திக்காத சிற்பமோ, யுத்தத்தை சந்திக்காத தேசமோ, வீரச்சமர் புரியாத அமைப்போ முழுமை பெறுவதில்லை, வளர்ச்சி அடைவதில்லை. தமிழக அரசு ஊழியர் வரலாற்றில் பலமுறை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 1978, 1988, 2002, 2003, 2016, 2017 மற்றும் 2019 போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த போராட்டங்கள் மூலம் அரசாங்கங்களால் மறுக்கப்பட்ட அல்லது ஒதுக்கி வைக்கப்பட்ட உரிமைகளை அரசு ஊழியர்கள் வென்றிருக்கின்றனர்.  தமிழக அரசு ஊழியர்களுக்கு எது தேவை என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக அரசு ஊழியர் சங்கம் இன்று வளர்ந்து நெடிதுயர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு காரணம் ஊழியர் நலன் மற்றும் சமூக அக்கறை போன்றவற்றிற்காக அது ஓயாமல் போராடிக் கொண்டிருப்பதால்தான்.

1957இல் நடைபெற்ற 15ஆவது இந்திய தொழிலா ளர்கள் முத்தரப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச வாழ்வூதியம் இன்றுவரை அரசாங்கங்களால் மறுக்கப்பட்டு வருகிறது.  அரசாங்க வேலையில் சேர்பவர்களுக்கு இனிமேல்  ஓய்வூதியம் என்பது அவர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியமாகத்தான் இருக்கும் என்பதிலிருந்து தொடங்கி இன்று அரசுத் துறைகளையே தனியார்வசம் ஒப்படைக்கும் நிலைமைக்கு அரசு நிர்வாகம் வந்திருக்கிறது. 

தமிழக போராட்டங்கள்

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். சுமார் 17 ஆண்டுகளாக பெற்றுவந்த சமூகநீதியை, 50 சதவீத இட ஒதுக்கீட்டை எவ்வித அறிவிப்புமின்றி வெட்டி வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் கிராமப்புற, நெடுந்தூர, மலைவாழ் கிராமங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் இளநிலை மருத்துவம் படித்த மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர வழங்கப்பட்டு வந்த ஊக்க மதிப்பெண்களையும் 30 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்து ஏழை எளிய மலைவாழ், நெடுந்தூர, கிராமப்புற மக்கள் மருத்துவ சேவை பெறுவதை தடுப்பதற்கான ஏற்பாட்டை ஆளும் மாநில அரசு செய்திருக்கிறது.  நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் துரோகம் ஆளும் அதிமுக அம்மா அரசின் அலட்சியப்போக்கையும் அக்கறையின்மையையும் தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்களிப்பதற்கான மசோதாவை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பியதோடு தன் கடமையை முடித்துக் கொண்டது அரசு.  

மக்கள் நலனில்  அக்கறையில்லாத அரசு

மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு, பதவி ஒன்றையே பசை போட்டு ஒட்டியிருக்கும் ஆட்சி, செயல்பாடு இழந்த அரசாங்கம், மோடி அரசின் ஏஜெண்டாக மாறி யிருக்கும் முதல்வர், ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு மக்களே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு மரியாதை இழந்திருக்கும் அமைச்சர்கள், மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது நாலாண்டுகால ஆட்சியில் முடிந்தவரை பணம் சேர்ப்பதொன்றே லட்சியமாகக் கொண்டு தொகுதியையும், வாக்களித்த மக்களையும் மறந்துபோன எம்எல்ஏக்கள். இவற்றுக்கு இடையில்தான் அரசு ஊழியர்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தையும் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.  

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் நூற்றுக் கணக்கில் இருந்தபோதிலும், அடிப்படையில் மிக மிக முக்கியமான சில அம்சங்களை மட்டும் தமிழக அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது.

கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆசிரியர் சங்கங்களுடன் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற பேரியக்கமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் செயல்பாடு. அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் அரசு ஊழியர்கள் அனைவரையும் அடிமைகளாக நினைக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கான உரிமைகளை வழங்கிட ஆட்சியாளர்களுக்கு துளிகூட விருப்பம் இல்லை என்பதையும் உணர்த்தியுள்ளது. தமிழ கத்தில் அரசுப் பணியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ எங்களது நியாயமான வாழ்வாதார உரிமைகளைப் பெறுவதற்கான இயக்கங்களை நடத்தி வருகிறோம், ஒன்பது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பல்வேறு கட்ட ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொண்டும் எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில்தான், கடந்த 22.01.2019 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டோம், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நான் அன்போடு கேட்டுக் கொள்வதெல்லாம், போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள், பணிக்குத் திரும்புங்கள். மக்கள் பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் இதனை எனது அன்பான வேண்டுகோளாக ஏற்று நாளையே அனைவரும் பணிக்குத் திரும்ப கேட்டுக் கொள்கிறேன் என்றும் தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு வரவேற்றும் எதிர்காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படை யிலும் தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளின்படி மக்கள் நலன் பேணவும் மாணவர் நலன் கருதியும் வேலை நிறுத்தப் போராட்டத்தினை 30.01.2019 உடன் முடித்துக் கொண்டு உடனடியாக மக்கள் பணிக்குத் திரும்புவது என முடிவெடுத்து, அனைவரும் பணியில் சேர்ந்தோம். தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களில் தற்போது வரை 17பி குற்றச்சாட்டு 5,068 நபர்களுக்கு வழங்கப்பட்டும் பணி மாறுதலில் 1,600 நபர்களும் உட்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையால் புனையப்பட்டு வழக்கு நிலுவையில் இருப்பது பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று பின்னர் பிணையில் வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் தொடர்ந்து மாதாமாதம் குற்றவாளிகளைப் போல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவல நிலை தொடர்ந்து வருகிறது. ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டு வருகிறது. பணியிட மாறுதல் என்பது ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் பணியமர்த்தப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

கல்லூரிப் பேராசிரியர்கள் தொலைதூர கல்லூரிகளுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு, இதுநாள் வரை அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய கல்லூரியில் பணிய மர்த்தப்படாமல் இருந்து வருகிறார்கள். இதனால் கல்லூரி மாணாக்கர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பணியிலிருந்து ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு 17பி குற்றச்சாட்டு நிலுவை யில் உள்ளதைக் காரணம் காட்டி, ஓய்வு பெறுவதற்கு மட்டும் அனுமதி வழங்கிவிட்டு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வரும் ஜாக்டோ- ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்க ளின் ஒருவரான மு.சுப்பிரமணியன் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணிபுரிந்து, வயது முதிர்வின் காரணமாக கடந்த 31.05.2019 அன்று பிற்பகல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதன் அடிப்படையிலும் அன்னாரின்மீது தமிழ்நாடு குடிமை முறைப் பணி விதி 17 (பி)ன் கீழ் தொடரப்பட்ட குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டியும், பணி ஓய்வுபெறும் நாளில் அதாவது 31.05.2019 அன்று தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழகம் எப்போதும் முன்னோடி மாநில மாக இருந்து வந்திருக்கிறது. சமூகநீதி, சமத்துவம், இளை ஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், பெண்களுக்கான உரிமை போன்ற பல தளங்களில் முன்னோடியாக இருந்த மாநிலம் தற்போது எல்லாவற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் இம்மாநில இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுத்துறைகளை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெறுவதும் ஆகும். அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களும் முழுமையான அளவில் நியமிக்கப்பட்டு பணி செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு மத்திய அரசுக்கு இணையான உரிமைகளும் ஊதியமும் வழங்கப்பட்டால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டக் களங்களை துறந்துவிட்டு மக்களுக்கான பணியையும் மாணவர்களுக்கான பணியையும் செய்து இம்மாநிலம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற உழைப்பதுடன் சமுதாய மேம்பாட்டையும் பேணிக்காப்பதில் அரசு ஊழி யர்களும் ஆசிரியர்களும் தீவிர கவனம் செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

மேற்கண்ட சமுதாய மாற்றம் ஏற்பட, இந்த அரசாங்கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நேரடிப் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து வைக்க வேண்டும் என்பதையும், பொருளாதார வளர்ச்சியை எட்ட விவசாய நெசவுத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கெளரவமான வாழ்வாதாரங்களை உறுதி செய்ய வேண்டும் என்பதையும், நலிவுற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பட்டப்படிப்புகள் முடித்தும் தகுந்த வேலைகளின்றி தவிக்கும் 80 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகளை பெருக்க வேண்டும் என்பதையும் இம்மாநாட்டின் அறைகூவலாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஏதோ அரசு ஊழியர்களின் நலன்களுக்காக மட்டும் பாடுபடும் இயக்கம் என்பதைத்தாண்டி சமூக அக்கறை கொண்ட இயக்கம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பார்கள். நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் சொற்களஞ்சி யங்களால் கருத்துக் குவியலை படைக்கவுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13ஆவது மாநில மாநாடு அதை நிரூபித்துக் காட்டும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்


 

;