tamilnadu

img

எதிரொலி... மதுக்கூர் இராமலிங்கம்

விடுகதையா இந்த வாழ்க்கை?

‘முத்து’ படப்பாடலை இரண்டாவது பாகமாக எடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என்று ஒரு பாடல். அந்தப் படத்தில் வரும் எல்லாவற்றையும் துறந்து வீட்டை விட்டு ரஜினிகாந்த் வெளியேற அனைவரும் அழுவார்கள். பின்னணியில் ‘உனது ராஜாங்கம் இதுதானே, ஒதுங்கக்கூடாது நல்லவனே, தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை வராது தூயவனே... காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது காவி உடை நீ கொண்டால் என்னவாகும் மனது’ என்று அந்தப் பாடல் வரிகள் அமைந்திருக்கும். தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் ஒரு விசயத்தில் எனக்கு ஏமாற்றம்தான். அதைப் பிறகு கூறுகிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்தார். மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்காததைத்தான் ரஜினி இவ்வாறு கூறுவதாக அவுட்டோர் யூனிட் இயக்குநர் தமிழருவி மணியன் விளக்கமளித்தார். 

ஆனால் இன்டோர் யூனிட் இயக்குநர் குரூமூர்த்தி தனது துக்ளக் பத்திரிகையில் எழுதிய உரையில் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என அவருடைய மன்ற நிர்வாகிகள் கூறியதைத்தான் ரஜினி ஏமாற்றமடைந்துவிட்டதாக கூறியிருந்தார் என்றார். இந்த விசயத்தில் தமிழருவி பெயிலாகிவிட்டார். வழக்கம் போல குருமூர்த்தி பாசாகிவிட்டார். புதனன்று பேசிய ரஜினிகாந்த் முதல்வர் பதவி வேண்டாம் என்று தான் கூறியதை நிர்வாகிகள் ஏற்க மறுத்தது ஏமாற்றமளித்தது என சஸ்பென்ஸை உடைத்துள்ளார். முதல்வர் பதவியை தான் கனவிலும் விரும்பியதில்லை என்றும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். மேலும் பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வர் அர்ஜூன் அறிவித்த திட்டங்கள் போலவே அவை அமைந்துள்ளன. மொத்தத்தில் பரபரப்பு தொடர்ந்து ஏற்றப்பட்டுக் கொண்டே போகிறது. காட்சி ஊடகங்கள் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு மண்டபத்திற்கு வருவதற்கு எவ்வளவு நேரமாகும் என்பது உள்பட துல்லியமாக கணித்து நேரலை செய்து வருகின்றனர். “நாட்டில் ஒரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

அறிவாளிகளின் பத்திரிகையில் ஒரு அபத்த விளம்பரம்

அறிவாளிகளின் பத்திரிகையான துக்ளக்கில் விளம்பரமா, கட்டுரையா என்று கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு செய்தி. ‘டிரம்ப் வந்தார்... மோடி வென்றார்’ என்பது தலைப்பு. மோடியும் டிரம்ப்பும் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு படம். மோடியும் டிரம்ப்பும் ‘ஆறு முறை ஆரத் தழுவினார்கள். கட்டிக் கொண்டார்கள். குதூகலித்தார்கள். உலகமே வியந்தது. பொறாமை கொண்டது இது நரேந்திர மோடியால் மட்டுமே சாத்தியம் என்று உணர்ந்தது’ என்று புல்லரித்து போர்வையை எடுத்து போர்த்திக் கொள்கிறது அந்த விளம்பரம். இதில் உலகம் வியந்து பொறாமைப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கட்டிப்பிடிப்பதெல்லாம் ஒரு சாதனையா? 

மேலும் ‘இதுவரை இந்தியாவில் யாருக்குமே இந்த புகழ் கிடைத்ததில்லை என்று வேறு கூறப்பட்டுள்ளது. இந்த வருகையால் வர்த்தகத்தில் அமெரிக்கா பலன் பெறும், மேம்படும் என்றார் டிரம்ப். இந்த சாதனை மோடி என்னும் மந்திரச் சொல்லால் மட்டுமே சாத்தியம்‘ என்றும் கூறப்பட்டுள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ ஒரு உண்மை கூறப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா பலன் பெறும் இது மோடியால் மட்டுமே சாத்தியம். அமெரிக்காவிடமிருந்து ரூ.21 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதம் வாங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் காயிலங்கடை சரக்கு நமது தலையில் கட்டப்படவுள்ளது. அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் பிரதிநிதியாகவே டிரம்ப் வந்தார். அந்த வகையில் அவர்தான் வென்றார்.

சேரும் இடத்தில்தான் சேர்ந்துள்ளார்

மத்தியப் பிரதேச மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து தாவி பாஜகவில் கரைந்துள்ளார். அவர் செல்ல வேண்டிய இடத்திற்குத்தான் சென்றுள்ளார். அவர் இவ்வளவு காலம் பாஜகவில் இல்லாமல் இருந்ததுதான் ஆச்சரியம். ஜனநாயக காலத்திலும், மன்னர் குடும்பம் என்று கூறிக் கொண்டு கூத்தடிக்கும் குடும்பங்களில் குவாலியர் ராணி குடும்பமும் ஒன்று. 

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விஜய ராஜே சிந்தியா பாஜகவின் பழம்பெருச்சாளிகளில் ஒருவர். குவாலியர் ராஜமாதா என்று கூறப்பட்ட அவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக பாஜக அரசு கொண்டாடியது. அவருடைய மகள் வசுந்தரா ராஜே சிந்தியா பாஜகவின் சார்பில் முதல்வராக இருந்தார். அங்கு பாஜக ஆட்சியை குழிக்கு அனுப்பியதில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா முதலில் ஜனசங்கத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றதோடு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1996ஆம் ஆண்டு ஊழல் புகாரில் சிக்கிய அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு மறுக்கப்பட்டது. இதனால் தனிக்கட்சி துவங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை சேர்த்தார். இவ்வாறு தாவிக் கொண்டே இருப்பது குவாலியர் குடும்பத்திற்கு வழக்கமான ஒன்றுதான். 

ம.பி. முதல்வராக ஆசைப்பட்டு கிடைக்காத நிலையில் குடைச்சல் கொடுத்துக் கொண்டேயிருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவுக்கு பாய்ந்து, அதே வேகத்தில் எம்.பி. பதவியையும் பெற்றுவிட்டார். இன்னமும் மன்னர் பாவனையிலேயே திரிந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு ஏற்றக் கட்சி பாஜகதான்.

====மதுக்கூர் இராமலிங்கம்===

;