tamilnadu

img

உலகைச் சுற்றி... அமெரிக்க வல்லூறின் உறக்கம் கலைந்தது

அமெரிக்கா தற்போது ஒரு வரலாற்று திருப்பத்தில் நிற்கிறது. கருப்பர்கள், வெள்ளையர்கள், இதர இனங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் போராட்டம் நாடெங்கிலும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ‘கருப்பர்களின் உயிர் முக்கியம் (பிளாக் லைவ்ஸ் மேட்டர்)’ என முழக்கமிட்டு கருப்பர்களும் வெள்ளையர்களும் இணைந்து போராடுவது அமெரிக்க அரசுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் ஆதரிக்கும் கோஷம்
அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களே முதல்முறையாக கருப்பர்கள் மீதான அமைப்பு ரீதியான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அமேசான், கூகுள், ஆப்பிள்,ஊபர், பேஸ்புக், டுவிட்டர் போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்,“கருப்பர்கள் உயிர் முக்கியம்”என்ற வாசகத்தை உயர்த்தி பிடித்துள்ளன. அமேசானின் அலக்சாவிடமோ, அல்லது ஆப்பிளின் சிரியிடமோ அல்லது கூகுள் அசிஸ்ட் டிடமோ “கருப்பர்கள் உயிர் முக்கியமா” என்ற கேள்விக்கு அவை ‘நேர்மைறையான’ என்ற பதிலை தரக்கூடிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

“என்னால் மூச்சு விட முடியவில்லை!”
ஜார்ஜ் பிளாயிட் என்ற எளிய மனிதர், கடைக்காரரிடம் சிகரெட் வாங்க கொடுத்த 20 டாலரில் எழுந்த பிரச்சனைக்காக காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்தவர்கள் மினியாபோலிஸ் நகர காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் மற்றும் 3 அதிகாரிகள். கொலைகாரன் டெரிக் சாவின் தொடர்ந்து8 நிமிடம் 46 விநாடிகள், ஜார்ஜ் பிளாயிட்டின் குரல்வளையை அழுத்தி கொன்றான். “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என ஜார்ஜ் பிளாயிட் பலமுறை கதறியும் அந்த போலீஸ் அதிகாரி பொருட்படுத்தவில்லை. படுகொலையைத் தொடர்ந்து மினியாப்போலிஸ் நகரில் அவரது கொலைக்கு நியாயம் கேட்டு நடைபெற்ற போராட்டம் அமெரிக்காவையே உலுக்கிக் கொண்டுள்ளது. ஜார்ஜ் பிளாயிட் மரணம் அமெரிக்க காவல் துறையில் புரையோடிப் போயுள்ள ஒரு நோயின் வெளிப்பாடு!

“என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று ஜார்ஜ் பிளாயிட் தவிர மேலும் மூவர் இதற்கு முன் இறந்துள்ளனர். 2014ல் நியூயார்க் நகரில் எரிக் கார்னர் என்ற இளைஞர்,2018ல் டெக்சாஸ் நகரில் சேவியர் ஆம்பலர், வாஷிங்டன் மாகாணத்தில் டாகாமோ நகரில் மானுவேல் எல்லிஸ் ஆகியோர். 

இப்படி அமெரிக்கா முழுவதும் பல சம்பவங்கள். சிறுவர்கள் முதற்கொண்டு முதியவர் வரை பல கருப்பர்கள் கைது செய்யப்படும் போதே, அவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படும்முன்பே கொல்லப்பட்டுள்ளனர். அதை விட மோசம், அவ்வாறு கொன்ற அதிகாரிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதுதான். நீதித்துறை எப்போதும் வெள்ளை காவல்துறை அதிகாரிகள் பக்கமே நின்றுள்ளது. பாதிக்கப்பட்ட கருப்பின மக்களுக்கு என்றுமே நியாயம் வழங்கியதில்லை அமெரிக்க நீதிமன்றங்கள்.

போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு
இந்த போராட்டத்தையொட்டி அமெரிக்க குடிமைச் சமூகத்தின் போக்கில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு நடத்திய கணக்கெடுப்பில் 74%பேர்அமெரிக்காவில் நடைபெறும் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினரே 53 சதவீதம் பேர், கருப்பர்களின் உயிர் முக்கியம் என்ற இயக்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் ஜார்ஜ் பிளாயிட் கொலை, சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் துறையில் ஆழமான பிரச்சனைகள் உள்ளதை காட்டுவதாக தெரிவித்துள்ளனர். 

ஏமி கூப்பரின் வைரல் வீடியோ
ஜார்ஜ் பிளாயிட் கொலையைஒட்டி நடந்த போராட்டங்களுக்கு மற்றொரு சம்பவமும் காரணம். அதற்கு15 நாட்களுக்கு முன்புநடைபெற்ற ஏமி கூப்பர் சம்பவம். அதில் ஏமி கூப்பர் என்பவர் நாயை சங்கிலி கொண்டு கட்டும்படி கிரிஸ் கூப்பர் என்ற கருப்பர் சொல்ல,“ஒரு கருப்பரால் தனக்கும் தனது நாய்க்கும் ஆபத்து” என ஏமி கூப்பர் காவல்துறையில் புகார் தெரிவிக்கும் வீடியோவைரலானது.இதுவே வெள்ளையர்களின் பொதுவான அணுகுமுறையாக உள்ளது என கண்டனங்கள் எழுந்தது. ஏமி கூப்பர் வேலை பார்த்த பிராங்க்ளின் டெம்ப்பிள்டன் நிறுவனம் அவரது இனவாத நடவடிக்கைக்காக அவரை வேலையை விட்டு நீக்கியது.

அச்சமே போதும்!
அமெரிக்காவில் ஒருவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஒருவர் தவறு செய்திருக்க வேண்டும் என அவசியமில்லை. ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவரால் தனக்கு ஆபத்து என ஒரு வெள்ளையர் 911 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும். யார் மீது குற்றம் சொல்கிறார்களோ அவர்களை காவல்துறை பிடித்து கைவிலங்கிட்டு அவர் மீது அமர்ந்து அவர் மீது உடல்ரீதியான வன்முறையை பிரயோகிக்கும். வெள்ளையர்கள் தவிர, கருப்பர்களுக்கும் இதர நிறத்தவர்களுக்கும் எதிராக அமைப்பு ரீதியான வன்முறை இவ்வாறுதான் நடைபெறுகிறது.

இந்திய முதியவர் சுரேஷ்பாய் பட்டேல் சம்பவம்
2015ஆம் ஆண்டு அலபாமா மடிசன் நகரில், இந்தியாவைச் சேர்ந்த முதியவர் சுரேஷ்பாய் படேல் தனது மகன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் அங்கு சென்று 1 வாரம் தான் ஆகியிருந்தது. அவர் ஆங்கிலம் அறியாதவர். காலையில் தனது மகன் வீட்டிலிருந்து நடைபயிற்சிக்காக வெளியில் வந்து நடைபாதையில் நடந்து சென்றுள்ளார். நடைபாதையில் சிறிது தூரம் நடப்பதற்குள் காவல் அதிகாரி எரிக் பார்க்ர் அங்கு வந்து சுரேஷ்பாயிடம் ஆங்கிலத்தில் கட்டளையிட்டுள்ளார். அவர் தன்னைத்தான் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளாத சுரேஷ் தொடர்ந்து நடக்க, அந்த அதிகாரி அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளி கையை பின்னால் முறுக்கி அவர் முதுகில் ஏறி அமர்கிறார். இதற்கிடையில் கீழே விழுந்த முதியவர் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்ற ஒரு சொல்லை மட்டும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். 

அந்த அதிகாரியோ அவர் சொல்வதைக் கேட்காமல் அவர் முதுகுத் தண்டின் மீது அமர்ந்து தாக்கியதில் சுரேஷ் முதுகுத் தண்டு துண்டிக்கப்பட்டு அவர் நிரந்தரமாக முடமாக்கப்பட்டு சிறிது நாட்களில் இறந்துவிடுகிறார். ஏன் சுரேஷ் பட்டேல் கைது செய்யப்பட்டார் தெரியுமா? சுரேஷ் சாலையில் நடந்த போது அருகில் இருந்த வீட்டிலிருந்த ஒரு வெள்ளையர் 911ஐ தொடர்பு கொண்டு. திடீரென எங்கள் பகுதியில் ஒருவர் நடக்கிறார்; அவரைக் கண்டால் எனக்கு அச்சமாக உள்ளது; நான் வேலைக்கு போக வேண்டும்; எனது மனைவியையும் மக்களையும் விட்டு செல்ல அச்சமாக உள்ளது; அவரை கைது செய்து எனக்கு பாதுகாப்பளியுங்கள் என புகார் அளித்திருந்தார்.கருப்பர்களின் சிறு குற்றங்களுக்குகூட கடுமையாக தாக்கப்படுவார்கள். 11 வயது சிறுவன் பஸ் நிற்கும் இடத்தை கடந்தான் என்பதற்கு அவனை 9 காவல் அதிகாரிகள் சேர்ந்து தாக்கினர். ஒரு கருப்பர், தன்னை கைது செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தால், அவர் கைது செய்ய வந்த காவல்துறை அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார் என சுட்டுக் கொல்லப்படுவார். அவ்வாறு சுட்டுக் கொன்ற அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் கிடையாது. அவர் தனது ‘பணியை‘ தொடர்ந்து கொண்டே இருப்பார். ஜார்ஜ் பிளாயிட்டை கொன்ற டெரிக் மீது 20 வழக்குகள் உள்ளன.

அமெரிக்க காவல்துறையின் வரலாறு
ஹார்வர்டு பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் கலில் கிப்ரான் முகம்மது, ‘டெமாக்ரசி நவ்’ தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், “அடிமை முறையில் மக்களை கட்டுபடுத்த வன்முறையை பயன்படுத்த தேவையிருந்தது. ஆகவே 17ஆம் நூற்றாண்டின் பாதியிலிருந்து 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நியூயார்க், மஸ்ஸா சூஸெட்ஸ், சவுத் கரோலினா என ஒவ்வொரு காலனியும் கருப்பர் சட்டம் அல்லது நீக்ரோ சட்டம் என்ற சட்டத்தை நிறைவேற்றின. 
இந்த சட்டம், அடிமைகளை வேவு பார்க்க, அவர்களை கண்காணிக்க, அவர்கள் தப்பியோடினால் அவர்களை தேடிப் பிடித்து அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தும் தண்டனை அளிக்க, வெள்ளை குடிமக்களுக்கு அதிகாரத்தை அளித்தது. இந்தப் பணியை செய்தவர்கள் பின்னாளில் காவல்துறையாக மாறினர். 1840-50களில் அயர்லாந்திலிருந்து குடியேறிய வெள்ளையர்கள் காவல்துறையில் நிரம்பினர். காவல்துறை பணி என்பது அமெரிக்க சமூகத்தில் இருந்த இனவாத மற்றும் வர்க்கப் பிளவுகளை பிரதிபலித்தது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலைக்கு வர முடியாத வெள்ளையர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் அமைப்பாக காவல்துறை மாறியது. ஆகவே, காவல்துறை என்பது அமெரிக்காவின் பொருளாதார அமைப்பில் இருந்த வியாதிகளை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அது சமூகத்தில் இருந்த இனவாத படிமானங்களை பிரதிபலிப்பதாகவும்அமைந்தது” என்கிறார்.மேலும் சட்டம் - ஒழுங்கு காத்தல் காவல் பணி என்ற பெயரில் இதர நிறத்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அமெரிக்க காவல்துறையின் பணியென கூறுகிறார். 

வெளிப்படை தன்மை இல்லை; புள்ளிவிவரம் கிடையாது
முதலாளித்துவ அறிவு ஜீவிகள்,சோசலிச நாடுகளை “போலீஸ் ஸ்டேட்” என பகடி செய்வர். உண்மையில் இன்றைய தேதியில் உலகின் மிக மோசமான போலீஸ் ஸ்டேட் என்றால் அது அமெரிக்காதான். அமெரிக்காவில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களைப் பற்றிய துல்லியமான தகவல் உண்டு. அனைத்து நாடுகளின் வர்த்தகம் பற்றிய துல்லியமான தகவல் உண்டு. அனைத்து நாடுகளிலும் உள்ள ஆயுதம்- இராணுவம் பற்றிய துல்லிய தகவல் உண்டு. 
ஆனால் காவல்துறை நடவடிக்கை என்று வரும்போது அமெரிக்கா எந்த புள்ளி விவரத்தையும் வெளிப்படையாக வைப்பது கிடையாது. உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்ட பின் கைதிகள் (கஸ்டோடியல்) இறப்பு குறித்து அமெரிக்காவிடம் தேசிய அளவிலான தரவு ஒன்றுகூட கிடையாதாம். இதை நம்ப முடிகிறதா?

இதைப் பற்றி எப்.பி.ஐ. (அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு அமைப்பு) முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற நீதித்துறை குழுவின் முன் சாட்சியம் அளிக்கும் போது பின்வருமாறு கூறினார்: “ கடந்தவாரக் கடைசியில் யார் யாரெல்லாம் சினிமாவிற்கு போனார்கள் என்பதற்கான புள்ளிவிவரங்கள் எங்களிடம் உண்டு... ஆனால், கடந்த மாதத்தில், கடந்த வருடத்தில் போலீஸ் சுட்டு எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளி விவரத்தையோ, அவ்வாறு இறந்தவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதையோ என்னால் சொல்ல முடியாது, ஏனெனில் என்னிடம் எந்த தரவும் இல்லை. அந்த இடத்தில் மிகவும் மோசமாகத்தான் உள்ளோம்.” (சி.என்.என்.) குற்றத்தை பதிவே செய்வதில்லை என்றால் அங்கு நியாயத்திற்கு ஏது இடம்?

ஜி – 7 நாடுகளில் காவல்துறையால்  சட்டத்திற்கு புறம்பான உயிரிழப்பு
உலகின் மிகவும் பணக்கார நாடுகளான ஜி7 நாடுகளை எடுத்துக் கொள்வோம். இந்த நாடுகளின் காவல்துறைகளிலேயே மிகவும் வன்முறையானது அமெரிக்க காவல்துறைதான். பி.ஜே.எஸ் (BJS) என்ன அமைப்பு ஜூன் 2015 முதல் மார்ச் 2016 வரை 10 மாதங்களில், கைது செய்யும் போது 1348 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சொல்கிறது. அதாவது மாதத்திற்கு 135பேர். ஒரு நாளைக்கு 4 பேர் காவல்துறை நடவடிக்கையால் இறப்பதாக சொல்கிறது. இதில் வெள்ளையரும் உண்டு. ஆனால் அவர்கள் ஏழை வெள்ளையர்கள்.

இதே 10 மாத காலத்தில், இங்கிலாந்தில் 13 பேரும், ஆஸ்திரேலியாவில் 21 பேரும் காவல்துறை நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு ஜி-7 நாடான அமெரிக்காவின் வட எல்லையில் உள்ள கனடாவில் 2000-2017 வரையிலான 17 ஆண்டுகளில் 461 பேர் காவல்துறை என்கவுண்டர்களில் இறந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு ஒரே ஒரு அதிகாரி மட்டும் எத்தனை “நியாயமான படுகொலைகள்” செய்துள்ளதாக எப்.பி.ஐ. தெரிவிக்கிறது தெரியுமா? 408 பேர்களை!(சி.என்.என்.) மற்றொரு செய்தி நிறுவனமான அல் ஜசீரா கடந்த 2013 முதல் 2019வரையிலான 6 ஆண்டுகளில்அமெரிக்காவின் காவல்துறை, கைது நடவடிக்கையின் போது 7666 பேர்களைகொன்று குவித்துள்ளது என்கிறது! 

கருப்பர்களே அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர்
அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் கருப்பர்களின் சதவீதம் அவர்களது எண்ணிக்கையை வைத்து கணக்கிடும் போது மிக அதிகம். 

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் கருப்பர்கள் 13 சதவீதமே. ஆனால், காவல்துறை வன்முறைக்கு பலியாவதில் ஒரு கருப்பர்க்கு வெள்ளையரைவிட 2.5 மடங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.யூட்டாவ் மாநிலத்தில் கருப்பர்கள் வெறும் 1.06சதவீதம் மட்டுமே. ஆனால், அந்த மாநிலத்தில் கடந்த 7 வருடங்களில் போலீஸ் வன்முறையில் இறந்தவர்களில் 10 சதவீதம் கருப்பர்கள்! மினோசொட்டா மாநிலத்தில் கருப்பர்கள் மக்கட் தொகையில் 5 சதவீதம்தான். ஆனால், இந்த காணாத்தில் காவல்துறை வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர்கள் கருப்பர்கள்.(தகவல் அல் ஜசீரா) பொதுவாக அமெரிக்காவின் காவல் துறை, கருப்பர்கள் மற்றும் மெக்சிகோ மற்றும் மத்திய தென் அமெரிக்க நாட்டு மக்கள்மீது அதிகமான வன்முறையை ஏவினாலும், வெள்ளையர்களில் உழைக்கும் வர்க்கமும், வீடற்றவர்களும் மற்றும் ஏழைகளும் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். 

சிறைச்சாலை புள்ளிவிவரம்
அமெரிக்கா ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்பது போல அங்கு கைது எண்ணிக்கையும், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் உள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே மூன்று லட்சத்து பதினோராயிரம்(1,03,10,968) பேரை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 32ல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘வேர்ல்ட் ஜெயில் பிரிப்’ என்ற பத்திரிக்கை அமெரிக்காவில் 2018ல் மொத்தம் 22 லட்சம் பேர் சிறைகளில் உள்ளனர் என்கிறது. சிறையில் இருப்பவர்களில் மூன்றிலொரு பங்கினர் கருப்பர்கள். 

வல்லரசின் காவல்துறை ஒரு கொடிய அடக்குமுறை கருவி
அமெரிக்க ஆளும் வர்க்கங்களை தற்போது அச்சுறுத்தும் மற்றொரு விஷயம் தற்போது போராட்டக்காரர்கள் கோரும் அமெரிக்க காவல்துறைக்கு நிதியை வெட்டுவது; காவல்துறையை கலைக்க சொல்வது, காவல்துறை ஏன் தேவை போன்ற விவாதங்கள். 

மினியாபோலிஸ் நகரசபை கவுன்சில்,காவல்துறைக்கான நிதியை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நிதி இல்லாமல் காவல்துறை எப்படி செயல்பட முடியும்? நாடு முழுவதும் காவல்துறைக்கு நிதி வெட்டுவது, அவர்கள் பணியை, சமூக காவல் மூலம் செய்ய முடியுமா என்பது குறித்து தொலைகாட்சிகளில் மிகவும் விரிவான விவாதங்கள் நடைபெறுகிறது. அமெரிக்காவில் காவல்துறை தேவையா, தேவையில்லையா என்ற விவாதங்கள் எழுந்துள்ளதே மிகப்பெரிய சமூகவியல் மாற்றம்தான். தேவை என்பவர்கள் ஒரே ஒரு விஷயம்தான் சொல்கின்றனர்; பாதுகாப்பு! தேவையில்லை என்பவர்கள், நாட்டில் குற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது; காவல்துறை குற்றம் நடந்த பிறகே தலையிடுகிறது; அதற்கு இவ்வளவு அதிகாரம் உள்ள அமைப்பு தேவையா என்கின்றனர். மற்றொரு பிரிவினர், ஒவ்வொரு பகுதியில் காவல் பணியை குறிப்பிட்ட சிலரே பார்க்காமல் அதனை சமூகப் பணியாக்கலாம் (சோசியல் போலிசிங்) என்கின்றனர். 

தற்போது காவல் துறையினர் வீடற்றவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் மருத்துவ எமர்ஜென்சி ஆகியவற்றை கவனிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட பணிகளை வேறு வேறு அமைப்புகள் பார்க்கலாம் என்கின்றனர். உதாரணமாக, வீடற்றவர்களை நகரசபை அதிகாரிகள் பார்க்க வேண்டும், மனநோய் மருத்துவர்கள் மனநோய் பாதித்தவர்களை கவனிக்க வேண்டும். மருத்துவ எமர்ஜென்சியை மருத்துவக் குழுக்கள் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது காவல்துறையினரின் பட்ஜெட் கணிசமாக குறையும் என்கின்றனர். 

லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மொத்த செலவில் 52 சதவீதம் காவல்துறைக்கு (எல்.ஏ.பி.டி) செலவிடப்படுவதாகவும் அவர்களின் பட்ஜெட்டை வெட்டினால் அதில் மீதமாவதைக் கொண்டு வீடில்லாதவர்களுக்கு வீடு, இலவச மருத்துவ வசதி பல புதிய இலவச உயர் கல்வி போன்றவற்றை செய்வதால் குற்றங்கள் மேலும் குறையும் என்ற யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. காவல்துறை தேவையா என்ற விவாதம் அமெரிக்க அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எதிர்பார்த்தபடியே டொனால்டு டிரம்ப் காவல்துறையை அதிக மூர்க்கமாக்க விரும்பும் அதே சமயம், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், காவல்துறை சீர்திருத்தம் குறித்து பேசுகிறார். அமெரிக்க காங்கிரஸ் காவல்துறையின் கட்டற்ற அதிகாரங்களை கட்டுபடுத்துவது குறித்து புதிய சட்டம் கொண்டுவர விவாதங்களை தொடங்கியுள்ளது.குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையுள்ள செனட் சபையோ இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

சோசலிச கொள்கைகளுக்கு அமெரிக்க இளைஞர்களிடையே ஆதரவு, முதன்மை பிரச்சாரக் கூட்டங்களில் பெர்னி சாண்டர்ஸ் மேற்கொண்ட சோசலிசபிரச்சாரம், 14.5%இருக்கும் வேலையின்மை(சுமார் 30 மில்லியன் பேர்கள்), கோவிட்-19 அமெரிக்கர்களின் வாழ்வை சூறையாடியது ஆகிய எல்லாம் ஜார்ஜ் பிளாயிட் போராட்டத்திற்கான வலுவான களம் அமைத்துக் கொடுத்துள்ளன. ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான அமைப்பே அரசு என்றும், சிறைக்கூடங்கள் இன்ன பிறவற்றையும் தன்னகத்தே கொண்ட ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகை படைகளால் ஆனது அது என்றும் கூறுகிறார். மாமேதை ஏங்கல்ஸ் (குடும்பம், தனிச்சொத்து அரசு). வர்க்கப் பகைமைகள் உள்ளவரை அரசு அமைப்பு இருக்கும் என்கிறார் மாமேதை லெனின். கம்யூனிச சமூகத்தில்தான் அரசு அமைப்பு உலர்ந்து உதிரும் என்கிறார் லெனின். இந்த போராட்டம் அமெரிக்க வல்லரிசின் நிம்மதியான உறக்கத்தை கலைத்துள்ளது. உள்ளடக்கத்தில் உலக வல்லரசாக அமெரிக்கா இருக்கும் வரையில் அமெரிக்க காவல்துறை வன்முறை நிறைந்தாகவே இருக்கும். அதெற்கெதிரான போராட்டங்களும் மேலும் வலுவாக நடைபெறும்.

===க.ஆனந்தன், தூத்துக்குடி===

;