tamilnadu

வாக்குச்சாவடிக்குள் ‘நமோ’ உணவு பார்சல் உ.பி.யில் காற்றில் பறந்த தேர்தல் விதிகள்

லக்னோ, ஏப். 11 -பிரதமர் மோடி துவங்கி, அமித்ஷா, ஆதித்யநாத் என பாஜக-வின் அத்தனைதலைவர்களும், தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறி வருகின்றனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் எழுப்பியும், தேர்தல் ஆணையம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், உத்தரப்பிரதேசத் தில், வியாழனன்று நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலின்போது, வாக்குச்சாவடிக்கு உள்ளேயே, பிரதமர் மோடியின் பெயர் பொறிக்கப்பட்ட ‘நமோ’ உணவு பார்சல்கள் விநியோகிக்கப்பட்ட அராஜகம் அரங்கேறியுள்ளது.கொடுமை என்னவென்றால், நமோ உணவுப் பார்சலை விநியோகிக்கும் பணியில் உத்தரப்பிரதேச காவல்துறையே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள்தான் தங்களின் வாகனங்களில் உணவுப் பொட்டலங்களை எடுத்து வந்து, விநியோகம் செய்துள்ளனர். இவ்வாறு உணவு வழங்குவதற்காக, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, ஸ்வீட் பாக்ஸ் அமைப்பில், காவிநிறத்தில் ‘நமோ’ என்று நேர்த்தியாக அச்சிடப்பட்ட அட்டைப் பெட்டியை தயார் செய்து, பாஜக-வினர் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.இந்த உணவை யார் ஏற்பாடு செய்தது; போலீசாருக்கு இந்த உணவுஎப்படி கிடைத்தது, அப்படியே ஆயினும் இதை வாக்காளர்களுக்கு கூட கொடுக்க யார் அனுமதி அளித்தது? என்று தேர்தல் ஆணையம் தங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆவேசப்பட்டுள்ளன.

;