tamilnadu

img

பயங்கரவாதத் தாக்குதல்களால் பலியானோர் பல மடங்கு அதிகரிப்பு ராணுவ வீரர்களை காவு கொடுத்த மோடி ஆட்சி! முன்னாள் வீரர் தேஜ் பகதூர் குற்றச்சாட்டு

வாரணாசி, ஏப். 16 - பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில், இந்திய ராணுவம் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் யாதவ். முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையில் பணியில் இருந்தபோது காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டார். ராணுவ வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றும் மூத்த அதிகாரிகள் உணவுப் பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர் என்றும் அந்த காணொலியில் தேஜ் பகதூர் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் காணொலி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தவே, தேஜ் பகதூர், பாதுகாப்புப் படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து, கொதித்தெழுந்த தேஜ் பகதூர் யாதவ், ராணுவத்தை சீர்குலைத்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் அம்பலப்படுத்தப் போவதாக அறிவித்தார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறேன் என்றும் கூறிய அவர், “தேர்தலில் ஜெயிப்பதோ, தோற்பதோ என்னுடைய நோக்கமில்லை; ராணுவ வீரர்கள் விஷயத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது; ராணுவ வீரர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்துவதே எனது நோக்கம்” என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.


அந்த வகையில், மோடி அரசுக்கு எதிராக வாரணாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேஜ் பகதூர் யாதவ், “கடந்த ஐந்தாண்டு ஆட்சியில், இந்திய ராணுவத்தின் மதிப்பை மோடி அரசு குலைத்து விட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார். “நமது நாட்டில் ராணுவத்தினருக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு. ஆனால், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே, கடந்த 2013-ஆம் ஆண்டு, ராணுவ வீரர் ஹேம்ராஜ் கொலையை, மோடி அரசியலாக்கினார். அவர் செய்த அரசியலை நம்பிய பலர், மோடி பிரதமராகி விட்டால், நம் நாட்டின் ராணுவம் வலிமையாகும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்தான், ராணுவம் படுமோசமான நிலைக்கு போயிருக்கிறது.மோடி, ஆட்சியில் அமர்ந்த நாள்முதல், எதிரிகளால் கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. கடந்த ஓராண்டில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டால், அது கடந்த 10 ஆண்டுகளில் கொல்லப்பட்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.


அதுமட்டுமல்ல, கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்ட, துணை ராணுவப் படை வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 997 என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இவற்றை எல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.ராணுவத்தினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து, நான் வீடியோ மூலம் வெளியே தெரிவித்த பின்னர், ராணுவ வீரர்கள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அநியாயங்களை மூடி மறைக்கவே முயற்சி நடக்கிறது. எனவே, ராணுவத்தை அரசியலாக்கிய நரேந்திர மோடிக்கு, தேர்தல் மூலமாக நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வாரணாசியிலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு தேஜ் பகதூர் யாதவ் பேசியுள்ளார்.

;