tamilnadu

img

ரபேல் ஒப்பந்தம் தொடர்பானமுறையீட்டின் மீது முதல்தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை?-உச்சநீதிமன்றம்

புதுதில்லி, மே 11-

சென்ற ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திடம் (சிபிஐ-இடம்) அளிக்கப்பட்டுள்ள ஊழல் புகார்மீது ஏன் இன்னமும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரபேல் ஒப்பந்தத்தின்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் சென்ற அக்டோபரில் முறையீடு மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திடம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் இதன்மீது இதுவரை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை. நீதியரசர் ஜோசப், இது தொடர்பாக லலிதாகுமாரி வழக்கின் மீதான தீர்ப்புரையைச் சுட்டிக்காட்டி, காவல்துறையினரிடம் முறையீடு அளிக்கப்பட்டால் காவல்துறையினரின் கடமை அதன்மீது முதல் தகவவ் அறிக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்வதேயாகும் என்றும், எனவே ஏன் இவ்வாறு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவில்லை என்றும் அரசுத்தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் வினவினார்.

உண்மையில் தாங்கள் குற்றப் புலனாய்வுக் கழகத்திடம் அளித்திட்ட முறையீட்டின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷௌரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள்.

(ந.நி.)