எம்.என். ராய் எனப்படும் மானபேந்திர நாத் ராய் மேற்குவங்கத்தில் ஆர்பிலியா என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய பள்ளிப்படிப்பு ஆர்பிலியாவில் தொடங்கியது. வங்கத்தொழில் கழகத்தில் பொறியியலும் வேதியியலும் கற்றார். சொந்த முயற்சியில் தொடர்ந்து படித்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய தேசிய எழுச்சி எங்கும் பரவத்தொடங்கியது. பங்கிம் சந்திர சட்டர்ஜி, விவேகானந்தர் ஆகியோரின் எழுத்துகளைப் படித்து உணர்வு பெற்றார். பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராடி இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினார். ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார்.
மெக்சிக்கோவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றார். மெக்சிக்கோவிலிருந்து ரஷ்யாவுக்குச் சென்றார். அங்கு லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரின் நட்பைப் பெற்றார். 1923ல் கம்யூனிஸ்டுக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. இக்கொள்கைத் திட்டத்தில் எம். என். ராயின் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. பின்னர் உஸ்பெகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கும் சென்று பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார். கம்யூனிஸ்ட் அகிலத்தில் ராய், எவ்லின் ஆகியோரோடு அபானி முகர்ஜி, எம்.பி.டி. ஆச்சார்யா, முகம்மது ஷாஃபிக் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த அகிலத்திற்குப் பிறகே அனைவரும் ஒன்றுகூடி 1920 அக்டோபர் 17 அன்று இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளையை தாஷ்கண்டில் உருவாக்கினர்.
ஜதின் முகர்ஜி, ராஷ் பிகாரி போஸ், சன்யாட்சென், லாலா லஜபதிராய், மைக்கல் பொரோடின், லெனின், டிராட்ஸ்கி, ஜினோவியேவ், ஸ்டாலின், புக்காரின், மாவோயிஸ்ட், காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் என ஆளுமைகள் பலரோடும் இணைந்தும், முரண்பட்டும் பணியாற்றிய ஆளுமை எம்.என்.ராய். தனது தாய் மொழியான வங்காளி தவிர ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், ரஷ்யன் என பல மொழிகளிலும் கத்தியின் கூர்மையோடு எழுதிக் குவித்தார். சுமார் 35 ஆண்டு காலம் தொடர்ந்து ஆசிரியர், பதிப்பாளராய் ஏதேனும் ஓர் இதழின் முதன்மையான பத்திரிகையாளராக இருந்தவர். அவர்தான் இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் முதல் தோழர், முதல் தலைவர் தோழர் எம்.என்.ராய் எனின் மிகையன்று.
பெரணமல்லூர் சேகரன்
என்.என்.ராய் பிறந்தநாள் (மார்ச் 21)