tamilnadu

img

ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் குறித்து ஐநா தலைவர் பேச வாய்ப்பு - ஐநா செய்தித்தொடர்பாளர்

ஐக்கிய நாடுகளின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் பேச வாய்ப்புள்ளதாக ஐ.நா.வின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி நீக்கியது. மேலும், அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதை அடுத்து, காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது, தொலைத்தொடர்பு துண்டிப்பு போன்ற பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்றது. ஆனால் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் இதில் தலையிடவில்லை. 

இதை தொடர்ந்து இந்த விவகாரத்தை பாகிஸ்தான் ஐ.நாவிடம் எடுத்துச் சென்று முறையிட்டு, கடிதமும் அளித்துள்ளது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டால் மட்டும் இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிடும் என்றும், நேற்று முன்தினம் ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், அடுத்த வாரம் தொடங்க உள்ள ஐநாவின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் பேச வாய்ப்புள்ளதாக ஐ.நா.வின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 

;