tamilnadu

img

ஈரோட்டிலும் தண்ணீர் தனியாரிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாநகராட்சியில் உள்ள மொத்தம் 60 வார்டுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.இதன்படி 2017-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 5.35 லட்சம் மக்கள் வசிக்கும் ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு தினசரி 81.10 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.  அதேபோல், 2032-ஆம் ஆண்டில் மக்கள் தொகையின் படி (7 லட்சம்) தினமும் 114. 75 மில்லியன் லிட்டர் குடிநீரும், 2047-ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி (9.05 லட்சம்) 147.69 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.


இதையடுத்து ஈரோடு மாநகராட்சிக்கு தனிக் குடிநீர் திட்டம் ரூ. 484.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி அம்ருத் திட்டத்தில் மத்திய அரசு ரூ. 242.23 கோடி( 50 சதவீதம்), மாநில அரசு ரூ.96.89 கோடி (20 சதவீதம்) உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ரூ.145.33 கோடி ( 30 சதவீதம்) நிதியையும் பங்களிப்பு செய்கின்றன. இதன்மூலம் ஊராட்சிக் கோட்டை அருகில் வரதநல்லூர் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து, அதிலிருந்து தினசரி 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது.  


இதற்காக நிமிடத்துக்கு 29 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஆற்றில் இருந்து எடுக்க வேண்டும். இதில், சுத்திகரிப்பு செய்யும் போது 2 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் வீணாக வாய்ப்பு உள்ளது. இதன்பின் சுத்திகரிக்கப்பட்ட நீர் 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரிய குழாய் மூலம் சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிக்கும்,அங்கிருந்து வஉசி பூங்காவில் அமைக்கப்படும் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிக்கும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.


அங்கிருந்து, திண்டல் மேடு வித்யா நகர், ஓடைக்காட்டு வலசு, கணபதி நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ள தரைமட்டத் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்படும். இத்தொட்டிகளில் இருந்து மாநகராட்சி முழுவதும் 46 பழைய மேல்நிலைத்தொட்டி,  21 புதிய மேல்நிலைத்தொட்டி என மொத்தம் 67 மேல்நிலைத் தொட்டிகள் மூலமாக மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் மாநகராட்சி முழுவதும் 731.82 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பதித்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதன்மூலம் மாநகராட்சியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைக்க வாய்ப்பு இருந்தது. 


இதற்கான இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைய உள்ள சூழலில் தற்போது மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மாநகராட்சியுடன் சேர்ந்து தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஈரோடு மாநகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது, அபெக்ஸ் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஈரோடு மாநகராட்சி இணைந்து சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் என்ற பெயரில் ஒரு 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன் மூலம் அந்த தனியார் நிறுவனம் தற்போது பவானி, வீரப்பன்சத்திரம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் அதன் கிளைகளை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ஒரு ரூபாய் எனவும், 20 லிட்டர் மினரல் வாட்டர் ஏழு ரூபாய் எனவும் கணக்கிட்டு விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இதன்படி அபெக்ஸ் நிறுவனம் சார்பில் வாட்டர் கார்டு என்ற பிரிபெய்ட் அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலமாக 24 மணி நேரமும் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


இதில், தினமும் குடும்பத்திற்கு 20 லிட்டர் என பிடித்தம் செய்து கொள்ளலாம். இதற்கு மாதம் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், முதல் முறை 75 ரூபாய் அதற்கான கார்டில் வரவு வைக்கப்படும். இந்தபணம் முடியும் வரை தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். மீண்டும் பணம் முடிந்த உடன் தண்ணீரை பிடிக்கும் இடத்தில் மீண்டும் 200 ரூபாய் கட்டி புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக, பஞ்சாயத்துகளில் உள்ள குடிநீர் இணைப்புகளை நேரடியாக அபெக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது ஈரோடு மாநகராட்சி நிர்வாகம். இதன் மூலமாக பஞ்சாயத்துகளில் உள்ள தண்ணீரை இலவசமாக எடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆர்.ஓ. மற்றும் யுவி டெக்னாலஜி என்ற பெயரில் அபெக்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,அரசு குடிமக்களுக்கு அடிப்படை தேவையான தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டும். இதன்படி ஈரோடு மாநகராட்சிநிர்வாகம் மக்களுக்கு தூய்மையான குடிநீர் அளிக்க வேண்டும் என்ற கடமையும், பொறுப்பும் உள்ள நிலையில், அதனை கைகழுவிதனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இவ்வாறு தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் செய்ய கொடுத்துள்ள அனுமதியின் மூலம் ஈரோடு பகுதிகளில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.


இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள சாய ஆலைகளால் நிலத்தடி நீர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மாநகரப் பகுதிகளுக்கு ஆர்.ஓ. மற்றும் யுவி டெக்னாலஜி முறையில் குறைந்த கட்டணத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக அபெக்ஸ் அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதற்காக, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து சமையலறை, கழிவறை என அனைத்து கழிவுகளும் பாதாள சாக்கடையில் இணைத்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. 7 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டுக்குள் 25 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம். 

மேலும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்கான பணிகள் 71 சதவீதம் முடிந்துள்ளன. புதிய ஒப்பந்தத்தினால் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அபெக்ஸ் நிறுவனம் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம், இதன் மூலம் நல்ல குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


ஏற்கனவே, கோவை மாநகரில் சூயஸ் என்ற பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு தண்ணீர் விநியோக உரிமையை கோவை மாநகராட்சி நிர்வாகம் தாரை வார்த்ததற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பெரும் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் ஈரோடு மாநகராட்சி நிர்வாகமும் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

===து.லெனின்===


;