tamilnadu

img

இந்நாள்... பிப்ரவரி 12 இதற்கு முன்னால்...

1947 - இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், பாரிஸ் இழந்திருந்த, ஃபேஷன் உலகின் தலைநகரம் என்ற பெருமையை மீட்டெடுக்க உதவிய, ஆடையலங்கார அணிவகுப்பை(ஃபேஷன் ஷோ), கிறிஸ்டியன் டியோர் நிறுவனம் நடத்தியது. உண்மையில் கரோல், விட்(ஹூய்ட்) என்ற பெயர்களில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண்களின் ‘பார் சூட்’ உடைகளை, ‘என்ன ஒரு புதிய தோற்றம்(நியூ லுக்)!’ என்று ஓர் இதழாசிரியர் குறிப்பிட்டதையடுத்து, இந்த அணிவகுப்பே ‘நியூ லுக்’ என்றுதான் குறிப்பிடப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் முழுவதும் பெரும்புகழ்பெற்ற இந்த ஆடைகள், 1946இல்தான் தொடங்கப்பட்டிருந்த டியோர் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சியை ஈட்டித்தந்தன. 1800களின் தொடக்கத்திலேயே, ஆடையலங்கார அணிவகுப்புகள் பாரிசில் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாலும், ஃபேஷன் ஷோ என்பது உண்மையில், அதற்கும் முன்னரே தொடங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஃபேஷன் ஷோ பற்றிய வரலாறு தெளிவாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலமான 15,16ஆம் நூற்றாண்டுகளில், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய ஆடை வடிவங்களை உருவாக்கி, ஃபேஷன் தலைநகரமாக ரோம், வெனிஸ், ஜெனோவா, நேப்பிள்ஸ், மிலன், பிளாரன்ஸ் போன்ற நகரங்கள் இருந்துள்ளன. பதினான்காம் லூயி காலத்தில் இவ்விடத்தை பாரிஸ் பெற்றாலும், அந்தந்தக் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் நகரங்களான லண்டன், பெர்லின் உள்ளிட்டவையும் இப்பெருமையைப் பெற்றன. 1900களின் தொடக்கத்தில், நியூயார்க்குக்கு ஃபேஷன் ஷோ அறிமுகமாக, இரண்டாம் உலகப்போர்க்காலத்தில், ஃபேஷன் தலைநகரமாக அது மாறியது. தற்காலத்தில் பாரிஸ், லண்டன், நியூயார்க், மிலன், டோக்கியோ ஆகிய 5 நகரங்கள் ஃபேஷன் உலகில் கோலோச்சுகின்றன. உருவாக்குவது என்ற பொருளுடைய ஃபேசியர் என்ற லத்தீன் சொல்லிலிருந்து ஃபேஷன் என்ற சொல் உருவானது. கேட்வாக் என்பது உண்மையில், ஆடையலங்கார அணிவகுப்பு நடைபெறும் சிறிய பாதையைக் குறிக்கிறது. குறுகலான அப்பாதையில் விழுந்துவிடாமலும், எதிரில் வருபவர்மீது மோதிவிடாமலும் கவனமாக நடப்பது, பூனை (இயல்பாக!)நடப்பதைப் போலிருப்பதால் அப்பெயர் சூட்டப்பட்டது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் பாரிஸ், நியூயார்க் ஃபேஷன் வாரங்களுடன், லண்டன் உள்ளிட்ட நகரங்களும் இவற்றை நடத்துகின்றன. ஃபேஷன் என்பது ஆடம்பரமாக இருந்த நிலையிலிருந்து, அனைவருக்குமானதாக மாற்றப்பட்டுவிட்ட தற்போதைய நிலையில், உலக ஃபேஷன் சந்தையின் ஆண்டு வணிகம் சுமார் ரூ.1.87 கோடி கோடியாம்!

- அறிவுக்கடல்