tamilnadu

img

அரசின் கொள்கைகளால் தொழில்கள் முடமாவதை அனுமதியோம் ஆலைக் கதவுகளை அடைத்து தெருவில் இறங்குவோம்

சிஐடியு தொழில் பாதுகாப்பு மாநாடு அறைகூவல்

கோயம்புத்தூர், செப்.14- கோவை மண்டலத்தில் தொழில் துறை யில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்காக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோவை மாவட்டக் குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மாநாடு நேருநகர் சுகுணா ஆடிட்டோரியத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலை மையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.  சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலு சாமி மற்றும் மகேந்திரா பம்ப்ஸ் உரிமை யாளர் மகேந்திர ராமதாஸ், அம்மாரூன் பவுண்டரி என்.விஸ்வநாதன், கோப்மா சங்கத்தின் கே.மணிராஜ், டேக்ட் சங்கத்தின் ஜெ.ஜேம்ஸ், தி.மணி உள்ளிட்ட பல்வேறு தொழில்அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துரையாற்றினர்.

முன்னதாக, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். தீர்மான விபரம் வருமாறு:

ஊழல் மலிந்த காட்டன் கார்ப்பரேசன்

தங்கத்தின் விலைபோல் நாள்தோறும் பஞ்சின் விலையில் மாற்றம் உள்ளது.  இதனை போக்கி பஞ்சாலை தொழிலை பாதுகாக்க பஞ்சின்  விலை ஆண்டுக்கு  ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க வேண்டும். காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஊழல் படிந்த ஸ்தாபனமாக  மாறி இருக்கின்றது. அதன் நிர்வாக அமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும். மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க கூடாது. 

ஜிஎஸ்டி வரியை குறைத்திடுக!

ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்க ளுக்கு 5 சதவீதத்துக்கு மேல் ஜி.எஸ்டி வரிவிதிப்பு கூடாது. ஜிஎஸ்டிக்கான அபராதத் தொகையை ரத்து செய்வதோடு, இதுவரை வசூலித்த அபராத் தொகையை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். மோட்டார் பம்ப் உற்பத்திக்கான மூலப் பொருள்களுக்கு 18 சதவிகித வரியும், பம்ப் விற்பனைக்கு 12 சதவிகித வரியும் என முரண்பாடான வரி விதிப்பு முறையை மாற்றி இரண்டுக்கும் 5 சதவிகித வரி விதிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும். 
 

வரிவிலக்கு வேண்டும்

எவ்வித மூலதனமும் இல்லாமல் இயந்திரம் மற்றும் உடல் உழைப்பை மட்டுமே கொண்டு மேம்படுத்தப்படுகிற ஜாப் ஆர்டர்களுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும்.  ஜிஎஸ்டியால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது சிறு தொழில்களாகும். விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கு பணம் எப்போது உற்பத்தியாளருக்கு வந்தாலும் கணக்கு தாக்கல் செய்து 10 நாட்களுக்குள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பதை மாற்றி 90 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஜிஎஸ்டி மூலம் தொழிற்சாலைகள் திரும்பப் பெற வேண்டிய பணத்திற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் தரவேண்டியுள்ளது. இதை தடுப்பதற்காக ஆன்லைன் மூலமே அரசுகள் பணத்தை திரும்ப தரவேண்டும். 2 கோடி ரூபாய் வரை உற்பத்தி செய்கிற சிறு,குறு தொழில்களுக்கு வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். என்பிஏ காலத்தை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்த வேண்டும். 

காற்றாலை மின்சாரம்

காற்றலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வாங்குவதற்காக காற்றாலை மின்சாரத்தை வாங்குவதை நிறுத்தக்கூடாது. கட்டுமான பொருட்களுக்காக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும். பத்திரப்பதிவு துறை வீடுகளுக்கான விற்பனை தொகை எவ்வளவு குறிப்பிடுகி றார்களோ அவ்வளவிற்கும் 11 சதவிகிதம் கட்டணமாக செய்யப்படுகிறது. இதற்கு மாறாக வீட்டின் விலையை பொருத்து பத்திரப் பதிவு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். முதல் வீடு கட்டுபவர்களுக்கு பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும். 

தொழிற்பேட்டைகள்

தொழிற்பேட்டைகள் உருவாக்குவதற்கு ஒற்றை சாளர முறையின் மூலம் அனுமதி வழங்க வேண்டும். விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், கோவை தொழில்துறை சரிவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனி அதிகாரியைக் கொண்ட குழுவை அமைக்க தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.  முடிவில், அரசின் செயல்பாடு களில் மாறுதல் ஏற்படாவிட்டால்  டிசம்பர் 13ஆம் தேதியன்று  தொழிலா ளர்களும், தொழில்முனைவோரும் இணைந்து ஆலைக் கதவுகளை அடைத்து தெருவில் இறங்கி குரல் கொடுக்க தயாராவோம் என மாநாட்டு தீர்மானம்  முன்மொழியப்பட்டது.

 அரசின் கொள்கைகள் எங்களை தெருவில் நிறுத்தியுள்ளது

  • ஜிஎஸ்டி வேண்டும் என பல ஆண்டுகளாக  கேட்டது தொழில் அமைப்புகள்தான். இதனால் எங்கள் தலையில் நாங்களே  மண்ணை  அள்ளிப்போட்டுக் கொண்டோம். ஜிஎஸ்டி இந்த ரூபத்தில் வரும் என எதிர்பார்க்கவில்லை. வெளிமாநில  தொழிலாளர்கள் இல்லாமல் இனி தொழில் நடத்த முடியாது. அவர்களுக்கு தங்கும் வசதிகளை அரசுகள் செய்து வர வேண்டும். 30 ஆண்டுகள் இருந்த தொழில் நிலைமை இனி இருக்குமா என சொல்ல முடியாது. தொழிலாளர்கள் பக்கம்தான் தொழிற்சங்கம் நிற்கும், அதில் ஒரு நியாயம் இருக்கும் என்பதை உணர்ந்தவன் நான். ஆகவே, எனது அனைத்து தொழிற்சாலையிலும் தொழிற்சங்கம் வைத்துள்ளேன். தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது போனஸ், கூலி உயர்வு மட்டும் தொழிற்சங்க தலைவர்கள் பேசுவதில்லை; இத்தொழிலை மேம்படுத்துவது குறித்த முன்தயாரிப்போடு வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அது எங்களுக்கு பெரிய அளவிற்கு உதவி செய்துள்ளது. தொழிற்சங்கத்தினரின்  முயற்சிக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு
  • மகேந்திர பம்ஸ்  உரிமையாளர் மகேந்திர ராமதாஸ் பேசியதிலிருந்து..
  • தொழில்கள் நசிவிற்கு தொழில் அமைப்புகள் காரணமில்லை. இந்த அரசின் கொள்கைகளே எங்களை தெருவில் நிறுத்தியுள்ளது. இதனை மீட்டெடுக்கும் பணியை அரசுதான் செய்ய வேண்டும். சுதந்திரம் பெற்று வரிவிதிப்பு வந்த காலத்தில் இருந்து ஜாப் ஆர்டர்களுக்கு வரிவிதிப்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது 5 சதவீதம் துவங்கி 28 சதவீதம்வரை வரி. நாங்கள் எந்த அரசியலிலும் ஈடுபட்டதில்லை. எங்கள் வேலை உண்டு; உற்பத்தியுண்டு என்று இருந்தவர்கள். ஆட்சியாளர்களின் தவறான வரி, வட்டி, கிஸ்தி போன்ற நடவடிக்கையால் இன்று நாங்கள் தெருவில் இறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தொழிலாளர்களுக்காக பேசும் இந்த செங்கொடி இயக்கம் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்கிற முனைப்போடு களம் இறங்கியிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இத்தொழிலை மீட்டெடுக்க உங்களோடு கரம் கோர்த்து நிற்பத்தில் எங்களுக்கு எவ்வித தயக்கமுமில்லை. மின்வெட்டு பிரச்சனைக்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் போராட்ட களம் கண்டது போல இப்போதும் அதற்கான போராட்டத்தை துவக்குவோம்.

கோப்மா அமைப்பின் தலைவர் கே.மணிராஜ், டேக்ட் அமைப்பின் தலைவர் ஜெ.ஜேம்ஸ் ஆகியோர் பேசியதிலிருந்து...