tamilnadu

img

கிராமங்களில் சூழ்ந்திருக்கும் அச்சமும் மன அழுத்தமும் - டாக்டர் வி.பிரமிளா

உலகையே அச்சுறுத்தியுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம், சமீபத்தில் கூறுகையில், “அமெரிக்கா தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக பாதிப்பை உருவாக்கி உள்ளது. தற்போது மிக மோசமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். உலக நாடுகள் மிக மிக விழிப்புடனும் கவனமுடன் இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். இன்றைய நிலையில் தமிழக அரசு மட்டும் அனுமதி அளித்தால், சென்னை மற்றும் சென்னை புறநகர் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கக்கூடிய மக்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் சென்னையை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று  விடுவார்கள். பலர் ஏற்கனவே பெட்டி படுக்கைகளுடன் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.  இது ஏதோ, அச்சம் என்பதால் மட்டும் அல்ல. அவர்கள் அனைவரும் இம்மாவட்டங்களில் வாழ்வாதாரம் இழந்த வர்கள். அடுத்த வேளை உணவும் வாழ்வும் கேள்விக்குறியாகிப்போனவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஊரடங்குகள் காரணமாக வீட்டை  விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கிற அல்லது பொருளாதார வசதி படைத்தவர்கள் வெறும் 10 சதம் மட்டுமே . மீதி 90 சதம் மக்கள், உழைத்தால் மட்டுமே உணவு என்று இருப்பவர்கள், இவர்களுக்கு ஊரடங்கு கணக்கிட முடியாத அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா தொற்று அனைவரையும் பாதிக்கும்.  மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடங்களில் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு  உள்ளது.  அதனால்தான் சென்னையும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் வீடுவீடாக சென்று சோதனை செய்யும் மைக்ரோ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியரி டம் வலியுறுத்தியும் இன்று வரை வீடு வீடாக சோதனை செய்வது என்பதை, தமிழக அரசால் குறிப்பாக இந்த நான்கு மாவட்டங்களிலும் செயல்படுத்திட முடியவில்லை.  செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 5ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

75 பேர் பலியாகியுள்ளனர். தினந்தோறும் தொற்று  வேகமாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், நகராட்சி ஆணையர் உட்பட பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணி பணி புரியும் ஊழியர்கள் உட்பட யாருக்கும் எந்தவித பரிசோதனையும் செய்யப்பட வில்லை. அரசு ஊழியர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் தொடர்ந்து முறையீடு செய்து வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணிபுரிய  போதுமான சுகாதாரப் பணியாளர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இல்லை. பணியில் இருப்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துவதாகவும் தெரியவில்லை.

மருந்துகள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய பேவிஃபிரா விர் என்ற மருந்துக்கு இந்திய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக அரசு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மருந்தாக  ஆர்சனிகம் ஆல்பம் 30சி என்னும் ஹோமியோபதி மருந்தை பரிந்துரை  செய்தது. அதற்கான நிதி உதவி செய்யப்பட்டு மருந்தும் கொள்முதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் இன்று வரை அந்த மருந்தை  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கிட எந்த கவனமும் செலுத்த வில்லை. கேரள மாநிலத்தில் இந்த மருந்தை அரசு ஏப்ரல் மாதத்திலேயே வீடுவீடாக வழங்கி நோய்த்தொற்றை பரவலை கணிசமாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட சூழலில், தமிழக அரசு இதில் மெத்தனமாக செயல்படு கிறது. இதற்கு தமிழக அரசிடம் போதுமான அரசு ஹோமியோபதி மருத்து வர்கள் இல்லை என்பதே காரணம் என்கிற கருத்தும் வலுவாகஎழுந்துள்ளது.

30 ஆயிரம் குடும்பங்களுக்கு...
இந்த சூழலில் மே 13 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமின் போது ஹோமியோபதி மருத்துவர் ஒருவரால் இந்த மருந்து ரத்தக் கொடையாளர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றுவரை சுமார் 65 கிராமங்களில் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு மேலாக நேரடியாக கிராமங்களுக்குச் சென்று ஹோமியோபதி மருத்துவர்கள் டாக்டர் ஜவஹர், டாக்டர் பாலமுருகன், டாக்டர் ஆனந்த் குமார் ஆகியோர் தலைமையில் திரைக்கலைஞர்கள் பூ ராமு, இளவரசு ,பிளாக் பாண்டி , அருண் வெங்கட் ஆகியோரின் ஆதரவுடனும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.  பெரும்பாலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்ட இடங்கள் குக்கிராமங்கள். 

கிராமங்களின் இன்றைய கதி
கிராமத்திற்குள் நுழைந்தாலே நம்மால் பார்க்க முடிந்ததெல்லாம் அச்சத்துடன் இருக்கக்கூடிய முகங்கள் தான். பலருடைய முகங்களில் மன அழுத்தமும் சோர்வும் வெளிப்பட்டன. கிராமங்கள் என்றாலே கலகலப்பு என்கிற சூழல் எல்லாம் மாறிப் போய் பல கிராமங்களில் நம்மால் மிகப்பெரிய ‘அமைதி’யைப் பார்க்க முடிந்தது. “நல்லாதான் இருந்தாங்க, இன்னைக்கு கொரோனாவால செத்துப் போயிட்டாங்க” என்று பூவிலுப்பை எனும் கிராமத்தில் அச்சத்துடன் ஒரு பெண்மணி மரணமடைந்த ஒருவரைப் பற்றி நம்மிடம் கூறினார் .போந்தூர் எனும் கிராமத்திற்கு மருத்துவ முகாமிற்கு சென்ற போது ஊரில் தெருக்களில் இருந்த பெண்கள் எல்லாம் தொற்று பரிசோதனை செய்யத்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்கிற பயத்தில் வேகமாக வீட்டிற்குள் ஓடி கதவை அடைத்துக் கொண்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது.

பின்பு ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி அவர்களுக்கு இந்த மருந்தைப் பற்றி விளக்கி அவர்களை முகாமிற்கு அழைத்து வந்தோம். வேடந்தாங்கல் எனும் கிராமத்தில் நாம் இந்த மருந்து குறித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி, “ அம்மா ஆஸ்பத்திரியில மாச மாத்திரை கிடைக்கலமா. கேட்டா இங்க வராத, வெளியில வாங்கிக்க என்று செங்கல்பட்டில் சொல்லிட்டாங்க. நீங்க மாச மாத்திரையும் தருவீங்களா ?”என்று கேட்டார்கள். இதன் பொருள் அரசுத் தரப்பில் அரசு மருத்துவமனைகளில் வழங்கிவந்த ரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் ,புற்றுநோய், இருதய நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கான மருந்துகளை கடந்த மூன்று மாதங்களாக வழங்காமல் விட்டதால் கிராமப்புறங்களில் பலர் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளதை நம்மால் உணர முடிந்தது.

பொதுவாக தொலைக்காட்சியில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று சொல்லப்பட்டு வருவதால், முகாம் நடத்தச் செல்லும் கிராமங்களில் எல்லாம், நாம் முகாமைத் துவக்குவதற்கு முன்பாகவே பல கிராமங்களில் முதியோர்கள் வரிசையில் உட்கார்ந்து நமக்காக, ஹோமியோபதி மருந்துக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தது மிகப்பெரிய சங்கடத்தை உருவாக்கியது. குடும்பத்தினர் உறவினர்கள் என பலருக்கும் நம்மிடம் மிகப்பெரிய நம்பிக்கையுடன் ஆர்கனிசம் ஆல்பம் மருந்தை மக்கள் பெற்றுச் சென்றனர். நோய்த்தொற்றை ஊரடங்கால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என நினைத்திடும் மத்திய - மாநில அரசுகள் தங்களது பணியை மருத்துவ பரிசோதனை மையங்கள், சிகிச்சைக்கான மருத்துவமனைகள், போதுமான பாதுகாப்புடன் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் ஊழியர்களை அதிகப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவதோடு, பிற மாநிலங்களைப் போல் எந்தவித காரணமும் சொல்லாமல் அரசு பரிந்துரை செய்த ஆர்சனிகம் ஆல்பம் 30சி- சித்த மருந்தான கபசுரச் சூரணம், ஆடாதோடை மணப்பாகு, சத்துமாத்திரைகள் உள்ளிட்ட பெட்டகத்தை உடனடியாக வீடுவீடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கிட வேண்டும்.

இப்படி வழங்குவதால் நோய்த்தொற்று பரவலை கணிசமாக குறைத்திட முடியும் என்கின்றனர் ஹோமியோபதி மருத்துவ வல்லுனர்கள். அனைத்து மருத்துவமுறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவத்தை ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை கொரோனா எதிர்ப்பு போரில் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களை பாதுகாக்க வேண்டும். எனவே காலம் உணர்ந்து,தேவையை உணர்ந்து இந்த மருந்தை உடனடியாக விநியோகம் செய்திட உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டாக்டர் வி.பிரமிளா
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;