tamilnadu

img

நெஞ்சம் நிறைந்த அந்த நாள்...

45 ஆண்டுகள் முடிந்து நாளை 46ஆம் ஆண்டுக்குள் நுழைகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஆம் ..1975ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதிமதுரை தமுக்கம் கலை அரங்கில் த.மு.எ  ச முதல் மாநாடு நடைபெற்றது. 1975 ஜூன் மாதம் 25ஆம் தேதி அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சகல நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. கருத்தரங்கம்,கவிதை  அரங்கம்,கலைவிழா என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு தான் இருந்தது.

மகாத்மா காந்தி அவர்களின் குருவான கோபாலகிருஷ்ண கோகலே அவர்களின் தம்பி மகள் கோதாவரி பாருலேகர் மாநாட்டை துவக்கி வைக்க வந்திருந்தார். 1929 ஆம் ஆண்டிலேயே புனே பெர்குசன் கல்லூரியில் படித்து இந்தியாவின் முதல் பெண் சட்டநிபுணரான கோதாவரி ஒர்லி இனமக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வினை அர்ப்பணித்தவர். அவர் எழுதிய “மனிதன் விழித்தெழுந்தபோது “என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற மிகச்சிறந்த மராட்டிய எழுத்தாளரும் கூட.

கேரளத்தின் சிறந்த விமரிசகரான கோவிந்தப்பிள்ளை உரையாற்ற வந்திருந்தார். பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன்,கண்ணன் பத்திரிக்கை ஆசிரியர் ஆர் வி ஆகியோர் வாழ்த்துரைக்காக வந்திருந்தனர். தோழர் தீரர் சங்கரய்யா முழுவதுமாக இருந்து மாநாட்டை நடத்திக்காட்டினார் . முன்மேடையில் தீக்கதிர் ஆசிரியர் கே.முத்தையா வழிகாட்ட மாநாடு சிறப்புற்றது.

மறுநாள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளராக கே.முத்தையா தேர்வு செய்யப்பட்டார். அன்று இரவு கே.எம் அவர்கள் எழுதிய “புதிய தலைமுறை” என்ற நாடகத்தை மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவினர் அரங்கேற்றினர். காஸ்யபன் நாடகத்தை இயக்கினார். மூத்த தோழர்கள் பி.எம்.குமார்,வீரபத்திரன், கார்மேகம், பூச்சி  ஆகியோர் மாநாட்டிற்காக உழைத்தது மறக்கமுடியாததாகும்.

- காஸ்யபன்