tamilnadu

img

பாம்புக்கடியும் மருத்துவ ஆலோசனையும்! - தொகுப்பு: சி. ஸ்ரீராமுலு

“சமீபத்தில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி என்னும் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஷேலா ஷெரின் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை ஊதி ஊதி பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட முயன்ற அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் துரிதமாக செயல்பட்ட இடது முன்னணி அரசு, அரசுப்பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்ட ஆசிரியர், அரசு மருத்துவர் இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. கேரளாவில் நடந்த இந்த துயரச் சம்பவத்தின் மூலம் நாம் நமக்கு முன்னாடி இருக்கும் படிப்பினைகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது  என்னவென்றால் எந்த ஒரு விஷக் கடியையும் அலட்சியம் செய்யக்கூடாது.

“பாம்பை கண்டால் படையே நடுங்கும்” என்பது பழமொழி. காரணம் பாம்பு என்றாலே 100 அடி தூரத்திற்கு பயந்து ஓடுபவர்கள் ஏராளம் ஏராளம். காரணம் உயிர் பயம்தான். இதைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம். பொதுவாக கிராமப் பகுதிகளில் வயல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வீடுகள் இருக்கும். அதேபோல் மலையும் மலை சார்ந்த வனப்பகுதிகளிலும் வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் ஜனங்களோடு ஜனமாக ஓணான் முதல் பாம்பு வரை அனைத்து ஊர்வன இனங்களும் உள்ளன.

“எந்த பாம்பும் திரைப்படங்களில் காட்டுவது போல வீடு தேடி வந்து பழி தீர்ப்பது இல்லை. அதன் பாதையில் குறுக்கிட்டாலோ அல்லது அதன் மீது நம் கை, கால்கள் பட்டாலோ தான் நம்மை தாக்குகிறது. தனக்குத் தேவையான இரையை தேடிச் செல்லும் பாம்புகள் தவளை போன்ற உயிரினங்களை மூர்ச்சை அடையச் செய்ய விஷத்தை பயன்படுத்துகிறது. கீரி, மயில், கழுகு போன்ற எதிரிகளிடம் இருந்தும் தங்களை பாதுகாக்கவும் விஷத்தை பயன்படுத்துகிறது. பாம்புகள் வட, தென் துருவத்தை தவிர்த்து உலகின் அனைத்துப் பகுதி மலை, காடு, சதுப்பு நிலங்களிலும் வசிக்கின்றன. பாம்பினம் தோன்றி 13 கோடி ஆண்டுகளாகிறது என்றும் உலகிலேயே அதிக நீளம் கொண்ட பாம்பு தென் அமெரிக்காவில் வாழும் அனகோண்டாவாகும் இதன் எடை 500 கிலோ. இவை 3000 வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதில் 500 வகை பாம்புகள் மட்டும்தான் விஷத்தன்மை கொண்டவை. அவற்றிலும் பெரும்பாலான பாம்புகள் தனக்குத் தேவையான இறையை தேடும் போதுதான் விஷத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை 270 வகையான பாம்பினங்கள் உள்ளன. இதில் நாகப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி வரியன், சுருட்டை விரியன், கடல்  பாம்பு என 5 வகையான பாம்புகளுக்குத் தான் மனிதனைக் கொல்லக் கூடிய விஷத்தன்மை உள்ளது. பாம்பின் எச்சில்தான் விஷமாக மாறுகிறது. இந்த எச்சிலில் புரதமும் அமினோ அமிலமும் அடங்கி இருக்கின்றன. பாம்பு கடித்தவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக முதலில் என்னென்ன முதலுதவிகள்  மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. மூட நம்பிக்கைகளே பெருகிக் கிடக்கின்றன. இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம். ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் நாம் முதலில் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பது பற்றி மருத்துவர்கள் கூறுவதைப் பார்ப்போம்:-

நாகப்பாம்பு, கட்டுவிரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி மூர்ச்சையாகி மரணத்தை ஏற்படுத்தும். கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் இரண்டும் ரத்தம் உடனடியாக உரையச்செய்து அதன் மூலம் மரணத்தை உண்டாகிறது. இந்தப் பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது ஒரே நேரத்தில் மரணம் அடையச் செய்யும் அளவுக்கு பல மடங்கு விஷத்தை கக்கிவிடும் தன்மை கொண்டவையாகும். பாம்பு கடித்தால் அந்த இடத்தில் இரண்டு பல் பதிந்த தடம் இருக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. எந்தப் பாம்பும் திட்டமிட்டு மனிதனை கடிப்பதில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்புக்காகத் தான் கடிக்கின்றன. அந்த சமயத்தில் நிறுத்தி நிதானமாக இரண்டு பல்லும்படுமாறு கடிக்க அந்த பாம்புக்கு நேரம் இருக்காது. ஆகவே பல நேரங்களில் ஒரு பல் மட்டுமே பட வாய்ப்பு உள்ளது.

பாம்புக்கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி.. ஒருவரை ஏதோ ஒரு விஷக் கடி கடித்து விட்டது என்று அசட்டையாக இருக்கக்கூடாது. பாம்பு கடித்த இடமாக இருந்தால் ஒரு புள்ளிக்கு  அருகில் இரண்டாவது புள்ளி இருக்கும். தேள்கடி என்றால் ஒரு புள்ளி தான் இருக்கும். பாம்பு கடித்த இடத்தை கடித்து விஷத்தை உறிஞ்சுவது துப்புவது போன்ற செயல்களெல்லாம் கற்பனையாகும். அவை திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும்.  எனவே அதை மறந்துவிட வேண்டும். பாம்பு கடிப்பது என்பது டாக்டர் ஊசி போடுவது போல இருக்கும். பாம்பு கடித்த நொடியிலிருந்து விஷம் ரத்தத்தில் கலந்து அதன் வேலையை தொடங்கி விடும். எனவே, பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுபவரின் வாயில் புண் இருந்தால் அதன் வழியே விஷம் அவருக்கும் வேகமாக பரவி மரணத்தை தழுவும் நிலை ஏற்படும். பாம்பு கடித்த இடத்தில் இருந்து சிறிது இடைவெளி விட்டு கயிறு அல்லது துணியைக் கொண்டு இறுக்கமாக கட்டுவார்கள். சிலர் ஏதாவது மூலிகைகளை வைத்தும் கட்டுப்போடுவது உண்டு. கடிபட்ட இடத்தின் அருகில் இறுக்கமாக கட்டி விட்டால் விஷம் வேறு இடங்களுக்கு பரவாது என்பது மூட நம்பிக்கையாகும்.

ஆனால் உண்மை என்னவென்றால் தோலுக்கு அடியில் இருக்கும் ரத்த நாளங்கள் மற்றும் தசைகளுடன் விஷம் கலப்பதால் எந்த கயிற்றைக் கட்டினாலும் பயனில்லை. ஒருவேளை கடித்த பாம்பு விஷம் அற்றதாக இருந்து உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்பட்டாலும் இதுபோன்று இறுக்கி கட்டுவதால் அந்த பகுதியில் ரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்படும். இதனால், கட்டப்பட்ட இடம் முழுவதும் பாதிக்கப்பட்டு அந்த இடம் கருப்பாக அழுகி அதனால் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணமடையும் நிலை ஏற்படும். பாம்பு கடித்து விட்டது என்ற மன பயம் கடித்தவருக்கு இருக்கக்கூடாது. சாதாரணமாக இதனை எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் பாம்பு கடிக்கான மருந்து உடனே செலுத்தப்படும். பாம்பின் விஷத்தை முறியடிக்க அது உதவுகிறது அடுத்த நிமிடம் கடித்த பாம்பு விஷமுள்ளது விஷமற்றது என்பதை அறிய ரத்த உறைதல் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவில் விஷப்பாம்பு என்று தெரிந்ததும் உடனே விஷ முறிவு மருந்து மூலம் அந்த மனித உயிரைக் காப்பாற்றப்படுகிறது என்றும் அங்கு மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே நமது அலட்சியங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.  எனவே இதை உணர்ந்து நாம் செயல்பட்டால் நிச்சயம் பாம்புக் கடியின் மரணங்களை குறைக்க முடியும்.