tamilnadu

img

தேசிய மாற்றுத்திறனாளி தடகளம் தஞ்சை அரசுப்பள்ளிகள் அசத்தல்

சமீபத்தில் நிறைவுப்பெற்ற தேசிய மாற்றுத்திறனாளி (செவித்திறன்) தடகள தொடரில் தஞ்சாவூர் அரசுப்பள்ளிகள் 11 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது.  அகில இந்திய செவித்திறன் குறையுடையோர் விளையாட்டுக் கழகம் நடத்திய இந்த தொடர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சபரிஷா உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து மாணவன் சுகுமார் (ஈட்டியெறிதல்) வெண்கலப் பதக்கமும், மாணவி சசிகலா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலம் என ஹாட்ரிக் பதக்கம் சாதனை புரிந்தார்.  மாணவர் ஜீவா தொடர் ஓட்டத்தில் (மாரத்தான்) தங்கப்பதக்கமும், இதே பிரிவில் மாணவி சாமுண்டீஸ்வரி வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். மேலும், கும்பகோணம் மாதா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கனிமொழி 400மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், மாணவர் மணிகண்டன் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேரில் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவீந்திரன், மாற்றுத்திறனாளி பள்ளி ஆசிரியர்கள் முருகேசன், முத்துமாரி, கிரிஜா, மரகதம், தலைமை ஆசிரியர்கள் சித்ரா, பிச்சை ஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

;