tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை

புதிய கல்விக்கொள்கை வரைவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக ஒரு பருந்து பார்வையாக ஒரு ஆசிரியராக சில பகுதிகளை மட்டுமே அணுகுகிறேன். தற்போது நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டம் 6 வயது முதல் 14 வரையுள்ள குழந்தைகளின் கல்வி உரிமையை அது வலியுறுத்துகிறது. புதிய கல்விக்கொள்கை வரைவில் 3 முதல் 18 வரை அரசின் பொறுப்பாகவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குழந்தைமையைப் பற்றி விரிவாகப் பேசும் இவ்வறிக்கை குழந்தைகளின் குழந்தைமை தொலைவதை அதிகம் கருத்தில் கொள்ளாதது மிகபெரிய முரண்நகை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி பெறும் வயதின் துவக்கம் குறைவாக இருப்பதற்கான காரணம் (அதாவது பின்லாந்து போல 7 வயதாக இல்லாமல் இருப்பது) குழந்தைகள்  விரைவாக பெரியவர்களாகி வேலைவாய்ப்பை அடையவேண்டும் என்பதே ஆகும்

கல்விக்கட்டமைப்பு – தனியார் பங்கேற்பு
தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் வாய்ப்புகள் பெருகிய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது இன்னும் நமது தெளிவைக் கூட்டும். 1979-80 காலத்தில் இன்று இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி என்பது 11 ஆம் வகுப்பு ஆகும் அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் ஒன்றோ அல்லது இரண்டோ இருக்கும் புகுமுகக் கல்வி எனப்படும் (PUC) பயிலவேண்டும். பின்னரே கல்லூரிக் கல்விக்குச் செல்ல இயலும். 1980 களில் இது சீர்திருத்தப்பட்டு. 10 +2 +3 என்ற வகையில் மாற்றப்பட்டது. அப்போது உயர்நிலைப் பள்ளிகளாக இருந்த பல பள்ளிகளும் மேநிலைப் பள்ளிகளாக மாற்றப்பட்டு அனைவரும் மேநிலைக்கல்வி பெறும் அளவுக்கு கல்விப் பரவல் ஏற்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இயக்கம் (SSA) மூலமாக வாய்ப்புள்ள பல ஆரம்ப்பப் பள்ளிகளும் நடுநிலைப்பள்ளியாகப் பரிணமித்து அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் வழிவகை ஏற்பட்டது. பின்னர் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) மூலம் வாய்ப்புள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளில் வாய்ப்புள்ளவை மேநிலைப்பள்ளிகளாகவும் பரிணாமம் பெற்றன.  இதனிடையே அரசின் வாய்ப்புக்குட்பட்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறாக கல்லூரிக் கல்வி வரை கல்விப்பரவலில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல் கல்லூரிக் கல்வியில் சேரவும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பது தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பினைக் கூட்டும் என்பதும் கேள்விக்குரிய விஷயமே. ஒரு கூட்டாட்சி தத்துவத்தில் ஒவ்வொரு மாநிலமும் தமக்கான வாய்ப்புகளைத் தாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அதிகம் பேச வேண்டும். மாறாக ஒட்டுமொத்த கல்வி வேலைவாய்ப்புகளையும் நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு என மத்தியத்துவப்படுத்துவது எவ்வகையிலும் நாட்டு ஒற்றுமைக்கு உதவாது. நீட் இதற்கொரு சாட்சியாக அமைகிறது இந்நிலையில் கல்லூரிக்கல்விக்கும் நுழைவுத்தேர்வை பரிந்துரைப்பது எப்படி இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் சரியாக அமையும்.  இது ஒரு புறமிருக்க ஆரம்பப்பள்ளிக்கான வாய்ப்பே ஒரு கிலோ மிட்டருக்கு ஒரு ஆரம்பப்பள்ளி என்றில்லாமல் குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப அமையும் என்று இவ்வறிக்கை பேசுவது எவ்வாறு சரியாக இருக்கும் எனவும் புரியவில்லை. கல்வியில் தனியார் மயத்தை அளவுக்கதிகமாகவே விமர்சிக்கும் இவ்வரைவு அதனால் தரத்தில் ஏற்படும் குறைவுகள் குறித்தும் வருத்தப்படுகிறது. ஆனால், தனியாரை அளவுக்கதிகமாக அனுமதித்துவிட்டு அங்கிருந்து பயின்று வருவோருக்கு அரசுத் தகுதித்தேர்வு நடத்தும் என்பது தொடர்கதையாவது எவ்வாறு சரியாக இருக்கும். தனியாருக்கு அனுமதி வழங்குவதோடு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் கடமை என்பதை எவ்வாறு பிரித்துப் பார்க்க இயல்கிறது.

திறனடைவுக்குத் தன்னார்வலர்கள்
இவ்வறிக்கையில் துவக்க நிலையில் ஆரம்பக்கல்வியில் கணிதம் மற்றும் எழுத்தறிவு மேம்பாட்டுக்கு உள்ளூர்  தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதை பரிந்துரைக்கிறது. கல்வியில் அனைவரையும் இணைக்கும் இக்கூற இருந்தாலும், சரியான விகிதாச்சாரத்திலும் புரிதலிலும் பயன்படுத்தாவிடில் விரும்பத் தகாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். இன்னொரு விதத்தில் ஆசிரியரின் மனப்பாங்கில் விரக்தி உணர்வையும் உண்டாக்கலாம். குழந்தைகளின் திறன் வளர்ப்புக்கு மிகவும் பொறுப்பாளராக வேண்டியோர் ஆசிரியர்களே. அவர்களுக்கிருக்கும் சிரமங்களை குறைத்து ஆசிரியர் கல்வியில் போதுமான சீர்திருத்தங்களை செய்வதே இதனை சரி செய்ய உதவும். தன்னார்வலர்களைக் கொண்டு விழாக்கள் நடத்தலாம். வகுப்புகள் நடத்துவது தொடர் பயன்பாட்டுக்கு உதவாது. மேலும், இதில் தன்னார்வலர்கள் மூலம் அரசியல் திணிப்புகள் நடைபெற வாய்ப்புகள் அதிகம்.

செமஸ்டர் முறை 
அடுத்ததாக பள்ளிகல்வியில் செமஸ்டர் முறை அறிமுகம். இது பற்றியும் கூடுதல் தெளிவு தேவைப்படுகிறது. நடைமுறையில் கல்வியானது வேலை வாய்ப்புக்கானது மட்டுமே என்ற புரிதல் மிகவும் அதிகமாக கெட்டிப்பட்டு வரும் நிலையில் 9 ஆம் வகுப்பு முதலே இதற்கான தயாரிப்பினை முன்னெடுப்பது எந்த வகையில் கல்வியின் நோக்கங்களை செயல்படுத்தி முழுமையான குடிமக்களை உருவாக்க உதவும் என்ற ஐயம் எழுகிறது. மேலும் ஏன் அவ்வளவும் விரைவாக குழந்தைகளை தொழிற்கல்வியை நோக்கி நகர்த்தவேண்டும். குழந்தைகளின் சமூக கலாச்சாரப் பின்புலத்திற்கேற்பவே கல்வியின் பால் உள்ள புரிதலும் துறை குறித்த தெளிவடையும் வேகமும் இருக்கும் என்பதை உணராமல் எவ்வாறு வரைவு பேசுகிறது என்பது புரியவில்லை. கல்வி பெறுவதில் இடைவிலகல்களும் வடிக்கட்டல்களும் அதிகரிக்கவே இது உதவும்.

இணைச்செயல்பாடுகள்
பள்ளிக் கல்வியில் கல்வி இணை செயல்பாடுகளின் அவசியத்தைப் பேசும் இவ்வரைவு அதற்கான செயல்வழிவகைகளை இன்னும் வலுவாகப் பேசலாம். மேலும் ஏற்கனவே ஈராசிரியர் பள்ளிகளாக இயங்கும் பள்ளிகளில் இதற்கான நிரந்தர மற்றும் பொறுப்புணர்வு மிக்க தொடர் மனிதவளத்தின் தேவை குறித்தும் ஆராயவேண்டும்..

அதிகாரக்குவியல்
தொழில்சார் கல்வியில் திறன் குறித்த கருத்தாடல்கள் அதிகமாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கற்றலுக்கும்  சுதந்திரத்திற்குமான இடைவெளி குறைவதைக் கவனிக்கத்  தவறுகிறது. சுதந்திரமான சூழலிலேயே புதுமைகள் மலரும். ஆனால் திறன் வளர்ப்பு அவ்வளவு சீக்கிரம் நடைமுறைப்படுவதல்ல. அதற்குத் தேவைக்கேற்ப காலமும், சுதந்திரமும் அவசியம். அனைத்தையும் அதிகார மையக் குவியலாகப் பார்க்கும் பார்வை அறிக்கை முழுவதும் தென்படுவது புதுமை காண அனுமதிக்கும் போக்கிற்கான வாய்ப்பாக எப்படி பார்க்க இயலும்.

மாநிலங்களைப் பார்க்கும் பார்வை
தொழில்சார் கல்வியில் பேசப்படும் பல்வேறு துறைகளுக்கிடையிலான இணைவும் ஒருங்கிணைப்பும்  தமிழகம் மற்றும் கேரளம் போன்ற மாநிலங்களில்  நடந்துள்ளது. குறிப்பாக வேளாண்மை, தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல் போன்றவற்றிக்கு இடையிலான ஒற்றுமையைப் புரிந்துகொண்டு வேளாண் கல்வியை மேற்கொள்ளுதல். இந்நிலையில் வேளாண்மை மருத்துவம் போன்ற கல்வியில் நிறுவனக் கட்டமைப்புகள் மேம்படவேண்டிய மாநிலங்களுக்கும் ஏற்கனவே மேம்பாடு அடைந்துள்ள மாநிலங்களையும் அணுகும் பார்வையில் வேறுபாடுகள் தேவை. 

30 ஆண்டுகளுக்கு 30 நாட்களா? 
இவ்வாறான கூறுகள் ஒருபக்கம் என்றால் இந்த அறிக்கை வெளியீடு குறித்தும் சில கேள்விகள் முன்வைக்க வேண்டியுள்ளது.  பல்வேறு இன மொழி கலாச்சார வேறுபாடுகள் நிறைந்த நாட்டின் கல்விக்கொள்கையை 30 நாட்களுக்குள் முடிவு செய்யவேண்டிய அவசரம் என்ன வந்தது. மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அறிக்கை வெளிவந்துள்ளது ஆரோக்கியமான போக்கல்ல. அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து அளிக்கப்படிருக்க வேண்டும். இவ்வாறான எதிர்ப்புக் குரல்கள் எழும்பியவுடன் ஒரு மிகச்சுருக்கமான மொழிபெயர்ப்பையும் மேலும் ஒரு மாதம் காலநீட்டிப்பையும் மட்டும் வழங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள் அனைத்துமே அற்புதமாக கல்வி உரிமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் பேசுகிறது. கல்வியின் நோக்கங்களாக வரையறுக்கப்படுபவைகள் குறித்தும் பேசி வருகிறது. ஆனால் இந்த வரைவில் பொறுப்புணர்ச்சி இல்லாமல் மாணவர்களை திணறடிக்கும் பகுதிகளே அதிகம்.

;