tamilnadu

img

பிரதமர் கேட்க மறந்த கேள்விகள் - ஜி.ராமகிருஷ்ணன்

‘நமது தேசம் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக வேண்டும்; நமது தேவைக்காக வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது’ என இரண்டு தினங்களுக்கு முன்பு, உள்ளாட்சித் தலைவர்களுடனான காணொலி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். அவர் இப்படிப் பேசுவது முதல்முறை அல்ல. 2014 ஆம் ஆண்டில் அவர் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன், செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று, ‘இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம்’ ‘மேக் இன் இந்தியா’ எனப் படாடோபமாக அறிவித்தார்.

வெற்று முழக்கங்கள்

இந்தியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்திட, தொழில்துறையிலும் சேவைத்துறையிலும் உற்பத்தி யைப் பெருக்கிட, வெளிநாட்டுக் கம்பனிகளை நம்பியிரா மல் நமது நாட்டிலேயே மூலதன முதலீட்டை ஊக்கு விக்கப் போவதாக மோடி அரசு அறிவித்தது. உள்நாட்டு மூலதனத்தின் அடிப்படையில் தொழில் வளர்ச்சி என்ப தற்குப் பதிலாக, கடந்த 2015ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அந்நிய நேரடி மூலதனம் இந்தியாவிற்குள் அதிகமாக வந்திறங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை, (கொரோனாவுக்கு முன்பு வரை), கடந்த ஆறாண்டுகாலம் உற்பத்தித் துறையில் என்ன நடந்தது என்பதைப் பரிசீலித்தால், மோடியின் முழக்கம் வெற்று முழக்கம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

2014ல் மேக் இன் இந்தியா  திட்டத்தை அமலாக்கிட, மூன்று இலக்கை மத்திய அரசு அறிவித்தது. 1.  உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 14 சதவிகித வளர்ச்சியை எட்ட வேண்டும்; 2. 2022க்குள் பத்து கோடி பேருக்கு உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும். 3. நாட்டின் மொத்த உற்பத்தியில் உற்பத்தித்துறையின் பங்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் 16 சதவிகித்தில் இருந்தது; இதை 2022ல் 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

முதலீடும் வேலைவாய்ப்பும் வீழ்ச்சி

மோடி அரசு கடந்த 6 ஆண்டுகளில் உற்பத்தியைப் பெருக்குவதில், வேலைவாய்ப்பை அதிகரிப்பதில், மொத்த உற்பத்தியில் தொழிலுற்பத்தித் துறையின் பங்கை அதிகரிப்பதில் என்ன சாதித்துள்ளது என்பதைப் பரிசீலித்தால்  உண்மை புலப்படும். ஐந்தாண்டுகளில் (2014-2019) தொழிலுற்பத்தித் துறையில் மூலதனம் அதிகரிக்கவில்லை. 2013-14ல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த மூதலீடு 31.3 சதவிகிதமாக இருந்தது. இது 2017-18 ஆம் ஆண்டிலோ 28.6 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. ஐந்தாண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்து அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களின் முதலீடு குறைந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி இந்தக் காலகட்டத்தில், அதிகரிக்காதது மட்டுமல்ல, 3 சதவிகிதம் குறைந்துவிட்டது. இதன் மூலம் ஐந்தாண்டுகளில் தொழிற்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 

மோடி அரசு, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூன்று இலக்குகளில் ஒன்றாக, வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நிச்சயித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் பெருமளவுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு சூழல் பற்றி தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வு விவரங்கள் அதிர்ச்சி யளித்தன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என்ற அந்த ஆய்வின் முடிவுகளைக்கூட வெளியிட மோடி அரசு மறுத்தது.

மேற்கண்ட மூன்று இலக்குகளிலும் சரிவு ஏற்பட்ட தில் இருந்து, மேக் இன் இந்தியா தோல்வியுற்றது என்ப தைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு முக்கியமான காரணம், மோடி அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு, தீவிர மாகக் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைதான். உதாரணங்கள் ஏராளம். பெங்க ளூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் உள்நாட்டிலேயே போர் விமான உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பத் திறன் கொண்டிருந்தா லும், அரசு வெளிநாட்டில் அதிக விலைக்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. அது போலவே, மேக் இன் இந்தியா என கூறிக்கொண்டு பாது காப்புத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டு வங்கி, இன்சூரன்ஸ் போன்ற சேவைத் துறை நிறு வனங்களிலும் அந்நிய முதலீடு வரலாம் என்று அரசு அனுமதித்தால் மேக் இன் இந்தியா திட்டம் எப்படி அமலாகும்?

மேலும் உள்நாட்டு உற்பத்தி சரிந்து, வேலையிழப்பு அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தியில் சரிவு ஏற்பட்டு, இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டது.

சுயசார்பு எப்படிச் சாத்தியமாகும்?

இந்தப் பின்னணியில் மோடி அரசு, இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு சமர்பித்த பட்ஜெட்டில், எந்த வகையிலும் உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கோ உருப்படியான திட்டம் எதுவும் முன்வைக்கவில்லை. இந்நிலை யில்தான், பஞ்சாயத்துத் தலைவர்களுடனான காணொலி உரையாடலில், வெளிநாடுகளை நம்பியிராமல், சுய சார்பு உடைய நாடாக, உருவாக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். நவீன தாராளயமயக்கொள்கை யை தீவிரமாகப் பின்பற்றிக்கொண்டே, அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து நாட்டின் சட்ட திட்டங்களை எல்லாம் மாற்றிக்கொண்டே, உள்நாட்டு சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களைப் பற்றித் துளி யும் கவலைப்படாமலேயே, பொதுத்துறையில் அரசின் முதலீடுகளைக் குறைத்துக்கொண்டே போனால் சுயசார்பு எப்படி சாத்தியமாகும்? 

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோடானுகோடி உழைப்பாளி மக்கள், முறைசாரா தொழிலாளர்கள் பசியோடும் பட்டினியோடும் வீட்டில் முடங்கிக் கிடக்கிற போது அவர்களுக்குப் போதிய நிவாரணம் வழங்குவது பற்றி மோடி அறி விக்கவில்லை. முதலில் கைதட்டச் சொன்னார், இரண்டா வதாக விளக்கேற்றச் சொன்னார். மூன்றாவதாக சுயசார்புள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என எந்தவித உள்ளார்ந்த உறுதியும் இன்றி அறி வித்திருக்கிறார்.

புதிய திட்டங்கள் எங்கே?

மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி நிவாரணத்தில்கூட புதிய திட்டம் ஏதும் இல்லை. காணொலியில் உள்ளாட்சித் தலைவர்களு டன் உரையாடியபோது, ஜன்தன் திட்டம் அம லாக்கப்பட்டுள்ளதா? நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் அமலாக்கப்படுள்ளதா? விவசாய சாகுபடிக்கு உதவிநிதி வந்துள்ளதா எனக் கேட்டிருக்கிறார். இந்த மூன்றுமே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள். கொரோனாவால் ஏற்படும் பாதிப்பைகளைக் களை வதற்கான புதிய திட்டங்கள் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. நிதியை ஒதுக்கீடு செய்ய வில்லை. மாறாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமல்ல,  ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பல்வேறு பணிகளில் மாநில அரசுகள்தான் ஈடுபட்டுவரு கின்றன. அத்தகைய மாநில அரசுகளுக்கும் மத்திய அரசாங்கம் போதிய நிதிஒதுக்கீடு செய்யவில்லை. 

ஆக ஒட்டுமொத்தமாக மக்கள் ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும்போது அவர்களுக்கு வாழ்வாதா ரத்தையும் நிவாரணத்தையும் அளிப்பதற்கு பதிலாக, ஏற்கனவே 2014 ஆம் ஆண்டில் சொன்ன மேக் இன் இந்தியா என்பதையே சுயசார்பு உள்ள இந்தியாவை உருவாக்குவோம் என்ற வேறு வார்த்தைகளில் மீண்டும் சொல்லியிருக்கிறார். சுயசார்பு மீது பற்றுறுதி இன்றி வெற்றுக் கோஷங்களை முன்வைத்திருக்கிறார்.

வெற்று விளம்பரம்

உள்ளாட்சித் தலைவர்களுடன் கலந்துரை யாடும்போது முதலில் பிரதமர் கேட்டிருக்க வேண்டிய கேள்வி, 1992 ஆம் ஆண்டில் அரசியல் திருத்தம் செய்யப்பட்டு, புதிய பஞ்சாயத்து மற்றும் நகராட்சி சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டி ருக்கிறதா? திட்டங்களை அமலாக்கிட நிதி கிடைக்கி றதா? என்பதுதான். 

போதிய அதிகாரமும், நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டால்தான், உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அமைப்புகளாக (சுயராஜ்ஜியம்) செயல்பட முடியும். 

அதே போல, உங்களுடைய கிராமங்களில், நகரங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் பசியாற சாப்பிடுகிறார்களா? அதற்கு நிதி கிடைக்கிறதா? என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. தான் அறிவித்த திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவ்வளவே!