tamilnadu

img

மக்கள் போராட்டம் எதிரொலி....  கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் திருப்பி அனுப்பப்பட்டது

அம்பத்தூர்:
சென்னை அம்பத்தூர் டன்லப் அருகே மின்சார மயானம் உள்ளது. இங்கு  திங்களன்று (ஏப். 13) மதியம் 2 மணியளவில் ஒரு ஆம்புலன்சில் 4 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு கவச உடை அணிந்து கொண்டு வந்துள்ளனர். மயானத்தில் இருந்த ஊழியர்களிடம் இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.இந்த தகவல் அருகில் உள்ள காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவியது. இதையடுத்து சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் அருகே சாலையில் திரண்ட மக்கள் அந்த உடலை இங்கே எரிக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஆர்த்தோ மருத்துவர் கடந்த 7 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததும், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்ததும் தெரிய வந்தது.இதற்கிடையே பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த மருத்துவர் உடல் மீண்டும் அந்த தனியார் மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்பட்டது.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர், மணலி மண்டலங்களில்தான் இதுவரை கொரோனா தொற்றுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

;