tamilnadu

img

உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் எனக் கூறியவருக்கு ‘கொரோனா’ பலரை தனிமைக்கு தள்ளிவிடும் மருத்துவமனை

இராமநாதபுரம், ஏப்.5- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜமால் (70) கொரோனோ தொற்று அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா முடிவு வருவதற்கு முன்பே அவரது உடலை மருத்துவமனை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டது. தற்போது ஜமாலின் உறவினர்கள், நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஷ்கனி வெளியிட்டுள்ள அறிக்கை:- கடந்த மாதம் துபாயிலிருந்து வந்த கீழக்கரையைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் ஜமால் (70) வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் அரசு சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் ஏப்.2- ஆம் தேதி காலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா நோய் இருப்பதைக் கண்டறிவதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முடிவுகள் வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டார். சனிக்கிழமை இரவு வரை கொரோனா தொற்று முடிவு வந்து சேரவில்லை. இந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பதாக ஞாயிறு காலை அரசு அறிவித்தது. கொரோனா முடிவு வருவதற்கு முன்பே ஜமால் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் எனக்கூறி உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது நோய்த் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரது இறுதி நிகழ்வில் யதார்த்தமாக பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதனால் உறவினர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். கொரோனா தொற்று முடிவை உடனடியாக அறிவித்திருந்தால் அச்சம் ஏற்பட்டிருக்காது. அல்லது முடிவு வர தாமதமாகும் பட்சத்தில் இறந்தவரின் உடலைப் பாதுகாத்து முடிவு வந்ததற்கு பிறகு ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மருத்துவர்களின் வழிகாட்டுதல் படி அவரின் உடல் அடக்கம் செய்யப் பட்டிருக்கும். இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்து இருப்பார்கள். அதைச் செய்யாமல் பேரிடர் காலகட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பெரும் தவறை செய்து விட்டது. மருத்துமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனையில் இருக்கும் நபர் இறந்து விட்டால் முடிவுகளை அறிவித்த பின்பே அவரது உடலை ஒப்படைக்க வேண்டும்.