tamilnadu

img

மருத்துவக்கல்வியில் அகில இந்திய 69 சத இட ஒதுக்கீடு

ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்! 

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை,ஜூலை 29- மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதமான இட ஒதுக்கீடு பெற அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்பு வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இணைய வழியில் ஜூலை 29 புதனன்று மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.  ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பின ர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு உள்பட மாநி லங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. இந்த ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு சட்டத்தின் படி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டு மென தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந் தன. இதன்படி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதமானம், பட்டியலினத்தோருக்கு 18 சதமானம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 1 சதமானம் என ஆக மொத்தம் 69 சதமான இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டுமெனக் கோரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பிலும், மத்திய மருத்துவக் கவுன்சில் சார்பிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும், அப்படியே வழங்கினாலும் அது  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகத் தான் வழங்க முடியும் என தெரிவித்திருந் தது. மேலும், இவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கும் போது, ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 சதமானத்திற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற எதிர்மறை யான வாதங்களையே முன்வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில் “மாநிலங்கள் வழங்கியுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்கிட வேண்டுமெனவும், இது குறித்து மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர், பல்மருத்துவ கல்வி நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு அமைத்து, மூன்று மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது இதுகாறும் இட ஒதுக்கீடு கிடைக்காத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையும், வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் ஒருமித்த கருத்தோடு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் 1993-ன் படி பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமானம், பட்டியலின மக்களுக்கு 18 சதமானம், பழங்குடியின மக்களுக்கு 1 சதமானம் ஆக மொத்தம் 69 சதமானத்தை வழங்கிட வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27  சதமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டு மெனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது.

இடஒதுக்கீட்டை சிதைக்கும் மோடி அரசுக்கு துணைபோகிறதா பாமக?

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் எல்லாம் முடிந்த பிறகு தான் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை  அளித்துள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசை வற்புறுத்தி பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க போராட வேண்டிய நேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், பாரதப் பிரதமருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதமான இட ஒதுக்கீட்டினை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்க வேண்டுமெனக் கோரி கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதி மன்றம், 27 சதமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென எங்கும் குறிப்பிடவில்லை. அதே சமயம் இப்பிரச்சனை குறித்து ஆய்வு  செய்யும் போது, “மாநில அரசுகள் உருவாக்கி யுள்ள சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ள சதவிகித இட ஒதுக்கீட்டினை புறக்கணித்துவிடக் கூடாது”  (பாரா 103) என தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசின் இடஒதுக்கீடு சட்டத்தின்படி 69 சதமானத்தை புறக்கணிக்கக் கூடாது என பொருள்படும்.

ஏற்கனவே மத்திய அரசு இட ஒதுக்கீடு கொள்கையை நீர்த்துப் போகும் வகையில் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், டாக்டர் ராமதாஸ் அவர்கள் 27 சதமான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருப்பது இடஒதுக்கீட்டினை சிதைக்கும் மோடி அரசின் கையைப் பலப்படுத்துவதாக உள்ளது.  மேலும் இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய சரிபாதிக்கும் மேற்பட்ட இடங்களை தாரை வார்ப்பதற்கு இட்டுச் செல்லும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள சமூக நீதிக்கு போராடும் அனைத்து பகுதி மக்களும் இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதம், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதமானம் இடஒதுக்கீட்டை பெறுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து ஆசிரியர்,  மாணவர், வாலிபர், மாதர், தொழிற்சங்கம், அரசு ஊழியர் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;