headlines

img

நீட் என்றொரு மோசடி

மருத்துவக் கல்வியில் தரத்தை மேம்படுத்தவே அகில இந்திய அளவிலான நீட் தேர்வு நடத்தப் படுவதாக மத்திய ஆட்சியாளர்கள் அளந்து விட்ட பொய்கள் ஒவ்வொன்றாக நிறமிழந்து வருகின்றன. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்து படித்து வந்த விவகாரம் இந்த தேர்வு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.  தமிழகத்தில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி வெற்றிபெறாத நிலையில் மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து அதன்மூலம் வெற்றி பெற்று தேனி கல்லூரியில் உதிர்சூர்யா  சேர்ந்துள் ளார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போது இந்த விவகாரம் அம்பலமாகி உள்ளது. 

வடமாநிலங்களில் நீட் தேர்வுக்கான கேள்வித்தாளை முன்னதேயே பெற்று மாணவர் களிடம் வழங்குவது, தேர்வு மதிப்பெண்களை திருத்துவது என்று பல்வேறு மோசடிகளை நடத்து வதற்கென்றே தனியார் பயிற்சி நிலையங்கள் உள்ளன என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது. இது தற்போது உறுதியாகியுள்ளது.  இதனிடையே மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வே எழுதாத ஆந்திரா மற்றும் பீகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர முயன்ற விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு இன்னும் எத்தனைபேர் போலிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்களோ தெரியவில்லை. 

தில்லியைச் சேர்ந்த ஒரு கும்பல்தான் இவ்வாறு போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீட் தேர்வு எழுதச் செல்லும் சாதாரண மாணவ, மாணவிகளை இவர்கள் என்னப் பாடுபடுத்தினார்கள் என்பதை நாடறியும். ஆடைகளை கிழிப்பது, ஆபரணங்களை அகற்றுவது என கெடுபிடி காட்டினார்கள். ஆனால் ஆள்மாறாட்டம், போலிச் சான்றிதழ் என ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகிவிட்டது. ஆனால் நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் நீட் தேர்வுக்கென்று தனிப் பயிற்சி நடத்தி லட்சக்கணக்கில் சுருட்டி வருகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர்களிலிருந்துதான் நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்கப்போகிறார்களாம்.  இந்த லட்சணத்தில் புதிய கல்விக் கொள்கையின்படி மருத்துவப் படிப்பில் நுழைய நீட் தேர்வு அதன்பிறகு படித்து முடிந்தவுடன் நெக்ஸ்ட்  தேர்வு என அடுக்கடுக்காக தேர்வுகளை அறிவித்துள்ளனர். இதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் எப்படியிருக்கும் என்பதற்கான முன்னோட்டம்தான் நீட் தேர்வில் நடந்துள்ள ஆள் மாறாட்டம்.

நீட் தேர்வு தேவையில்லை என்பதையே இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன.