tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூன் 20

1756 - கல்கத்தாவின் கருந்துளை என்றழைக்கப்பட்ட சிறையில் ஆங்கிலேயப் படையினரை, வங்கத்தின் நவாப் சிராஜ் உத்-தெளலாவின் படையினர் அடைத்ததில், ஒரே இரவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த நிகழ்விலிருந்துதான், விண்வெளியில் தோன்றும் கருந்துளைக்குப் பெயரிடப்பட்டது! வங்கத்தில் அரண்கள் அமைப்பதை நிறுத்துமாறு உத்-தெளலா உத்தரவிட்டதை பிரெஞ்ச்சுக்காரர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஆங்கிலேயர்கள் அதை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட, கல்கத்தாவிலிருந்த அவர்களது வில்லியம் கோட்டையை நவாபின் படைகள் முற்றுகையிட்டன. இந்த யுத்தத்தில் ஆங்கிலேயர்களால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், தப்பிச்சென்றுவிடுமாறு தங்கள் படையினருக்கு ஆங்கிலேயத் தளபதி உத்தரவிட்டார். ஆனால், 146 பேர் சிக்கிக்கொள்ள, அவர்களை அந்தக் கோட்டையிலேயே உள்ள ஓர் அறையில் சிறைவைத்தனர்.

கோட்டையின் காவலர்களுக்கான, சுமார் 18 அடிக்கு 14 அடி நீள, அகலம்கொண்ட அந்த ஒரே அறையில் 146 பேரையும் அடைத்தபின் கதவை மூடுவதே சிரமமாக இருந்துள்ளது. பிடிபட்டவர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்கப்படாது என்று உத்-தெளலா உறுதியளித்திருந்த நிலையில், இவ்வாறு அடைக்கப்பட்டது அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. மறுநாள் காலையில் அறை திறக்கப்பட்டபோது, 23 பேர் மட்டுமே உயிருடன் இருந்துள்ளனர். மெட்ராசிலிருந்து உதவிக்கு அழைக்கப்பட்ட ராபர்ட் க்ளைவ், உத்-தவ்லாவின் தளபதி மீர்-ஜாஃபருக்கு கையூட்டு கொடுத்து, 1757இல் பிளாசிப் போரில் வென்றதுடன், உத்-தெளலாவ்லாவையும் கொன்றார். இந்த நிகழ்விற்கு அமைக்கப்பட்ட நினைவுத்தூண், கல்வெட்டு ஆகியவை விடுதலைப் போரின்போது அகற்றப்பட்டதுடன், வில்லியம் கோட்டையுமே கிளைவால் மறுகட்டுமானம் செய்யப்பட்டுவிட்டதால், கருந்துளை இன்று இல்லை.

விண்வெளியில் அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் அமைப்பினை, 'ஈர்ப்புவிசை சிதைவுற்ற பொருள்' என்று தொடக்கத்தில் ஆய்வாளர்கள் அழைத்துவந்த நிலையில், 'இருண்ட விண்மீன்' என்ற பெயரை ஜான் மிச்செல் பயன்படுத்தினார். அமெரிக்க ஆய்வாளர் ராபர்ட் டிக், கல்கத்தாவின் கருந்துளை நிகழ்வுடன் விண்வெளி நிகழ்வுகளை ஒப்பிட்டு, 'கருந்துளை' என்று குறிப்பிட்டார். கருந்துளை என்ற பெயர் லைஃப், சயின்ஸ் நியூஸ் ஆகிய அமெரிக்க அறிவியல் இதழ்களில் 1963இலும், 'விண்வெளியின் கருந்துளைகள்' என்ற பெயர் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் ஆய்வறிக்கையில் 1964இலும் இடம்பெற்றன. ஆனாலும், கோட்பாடுசார் அறிவியலாளரான ஜான் வீலர் 1967இல் பயன்படுத்தியதைத் தொடர்ந்தே இது பரவலானதால், இப்பெயரை அவரே சூட்டியதாகவும் குறிப்பிடப்படுவதுண்டு.

====அறிவுக்கடல்===

;