tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூன் 24

1374 - புனித ரோமப் பேரரசின் ஆச்சன் நகரில் 'ஆடும் பித்து(டான்சின் மேனியா)' தொடங்கி, பல அருகாமை நகரங்களுக்கு மட்டுமின்றி, இத்தாலி, லக்சம்பர்க் என்று பிற நாடுகளுக்கும் பரவியது. ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், திடீர் திடீரென்று மக்கள் பொது இடங்களில் நடனமாடிய நிகழ்ச்சிகள் 'ஆடும் பித்து' என்று குறிப்பிடப்படுகின்றன.

குழுவாகச் சிலர் ஒழுங்கற்ற முறையில் ஆடத்தொடங்கியதும், பார்ப்பவர்களில் பெரும்பாலோர் ஈர்க்கப்பட்டு, சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோர்கூட ஆடியதால், இது 'ஆடும் தொற்று(டான்சிங் ப்ளேக்)', என்றும் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய நிகழ்வைப் பற்றிய முதல் பதிவு ஏழாம் நூற்றாண்டிலேயே காணப்படுகிறது. 1374இல் ஏற்பட்ட இந்த நிகழ்வு, இத்தகையவற்றில் மிகப்பெரிய ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்வுகள் தன்னியல்பாக நடந்தவையா, அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவையா என்பதில் தற்கால வரலாற்றாசியர்களிடையே மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன.

ஆனால், ஆட்டத்தில் ஈடுபட்டவர்கள் தன்னிலையில் இல்லை என்பது அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. குறைவான ஆடைகளுடன் மட்டுமின்றி நிர்வாணமாகக்கூட ஆடிய இவர்கள், பொதுவாக ஏற்க முடியாத அசைவுகளில் ஈடுபட்டது மட்டுமின்றி, அந்த இடங்களிலேயே பாலியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். பிறரால் தடுக்க முடியாத அளவுக்குத் தன்னிலை மறந்து ஆடிய இவர்கள், சோர்ந்து விழுந்தால் மட்டுமே நிறுத்தினர். அவ்வாறு சோர்ந்த நிலையில் எலும்புகள் உடைந்து, பலர் உயிரிழப்பதும் வழக்கமாக இருந்ததுடன், மற்றவர்கள் நெஞ்சுவலி, வலிப்பு, கடுமையான மூச்சிரைப்பு, குழப்பமான மனத்தோற்றங்கள் உள்ளிட்ட பலவற்றாலும் பாதிக்கப்பட்டனர். இத்தாலியில், டரண்ட்டுலா என்ற சிலந்திக் கடியால் இது நிகழ்வதாகக் கருதியதால் இதற்கு டரண்ட்டிசம் என்று பெயரிட்டிருந்தனர். காரணம் என்ன கணிக்க முடியாத நிலையில், பலவிதமான சிகிச்சைகள் அக்காலத்தில் முயற்சிக்கப்பட்டாலும், பலனளிக்கவில்லை. சாபம் என்றும், சாத்தான் ஆடவைப்பதாகவும் நம்பிக்கைகள் நிலவியதால், பேய் ஓட்டுதல் உள்ளிட்டவை சிகிச்சைகளாக மேற்கொள்ளப்பட்டன.  நெருக்கடிகளை மக்கள் சந்தித்த காலங்களில்தான் ஆடும் பித்து நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்பது பொதுவாக ஏற்கப்பட்டுள்ளதுடன்,  17ஆம் நூற்றாண்டில் இது திடீரென்று மறைந்தும் போனது. மக்களின் வாழ்நிலையை தொழில்மயம் மேம்படுத்தியதுடன், பண்ணையாரைச் சார்ந்திருந்த, பண்ணையடிமைகள் என்ற நிலையிலிருந்து, பாட்டாளிகள் என்ற சுதந்திரமான நிலையை வழங்கிய முதலாளித்துவத்தின் தொடக்கம், மூடநம்பிக்கைகளிலிருந்து ஓரளவுக்கு விடுவித்து, தன்னம்பிக்கையை வளர்த்ததுதான் காரணமாக இருக்கமுடியும்!

===அறிவுக்கடல்===

;