ரஷ்யாவில் மாஸ்கோ நகரின் தெற்கில் 1960 ஆம் ஆண்டில் காங்கோவின் முதல் பிரதமரும், ஆப்பிரிக்க தேசியவாத தலைவருமான தியாகி பாட்ரிஸ் லுமும்பா நினைவாக ரஷ்யா மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. பனிப்போர்க் காலத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மாணவர்களுக்கு உயர் கல்வி, மற்றும் பயிற்சித் திட்டங்களை இலவசமாக வழங்கும் முகமாக இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சில வளர்ந்த நாடுகளில் இருந்தும் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்றார்கள்.
தற்போது, இப்பல்கலைக்கழகத்தில் 47,000க்கும் அதிகமான பட்டதாரிகள் உலகின் 165 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். தற்போது இங்கு பட்டப்படிப்பு, மற்றும் தொழிற்பயிற்சி உட்பட 57 கல்வித்திட்டங்களில் 131 நாடுகளின் 450 இனங்களில் இருந்து கிட்டத்தட்ட 23,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் சுமார் 3500 வெளிநாட்டினர் அடங்குவர்.
ரஷ்யாவில் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஒரு சர்வதேச பல்கலைக்கழகமாகத் தோற்றுவிக்கப்பட்டு சர்வதேச ஒத்துழைப்பு மரபுகளைக் காக்கிறது. சர்வதேச உறவுகளை அபிவிருத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரிமாற்றம் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா அத்துடன் முன்னணி பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில், வட அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் ஒற்றுமை நிலவுகிறது. பல்கலைக்கழக ஆண்டு நிறைவு விழா ஆண்டுதோறும் பிப்ரவரி 5ல் கொண்டாடப்படுகிறது.
- பெரணமல்லூர் சேகரன்