tamilnadu

img

இந்நாள் மே 29 இதற்கு முன்னால்

1658 - அவுரங்கசீபை முகலாயப் பேரரசராக்கிய, சமுகார் யுத்தம் நடைபெற்றது. ஷா-ஜஹான் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, அவராலும், மூத்த மகளான ஜஹனாரா பேகத்தாலும், பட்டத்திற்குரியவராக அடையாளம் காட்டப்பட்டிருந்தவரும், மகன்களில் மூத்தவருமான தாரா ஷிக்கோ-விடம் அதிகாரங்கள் வந்திருந்தன. ஆனால், அவரை எதிர்த்து அவுரங்கசீப் பொர் தொடுக்க, ஆக்ராவுக்கு அருகில் சமுகார் என்ற கிராமத்தில் மிகப்பெரிய படையுடன் எதிர்கொண்டார் தாரா ஷிக்கோ. மிகச்சிறிய படையுடன் வந்த அவுரங்கசீபின் போர்த்திறமையால்,  தாரா ஷிக்கோவின் படைகள் தடுமாறியதைத் தொடர்ந்து, யானையிலிருந்து இறங்கி குதிரைக்கு மாறினார். அவர் இல்லாமல் அவரது யானை ஓடியதைக்கண்ட படைகள், அவர் இறந்துவிட்டதாகக் கருதி சரணடைந்ததும், பேரரசராக அவுரங்கசீப் அறிவிக்கப்பட்டார். ஆனாலும், மற்றொரு சகோதரர் ஷா-ஷுஜா தன்னைப் பேரரசராக அறிவித்துக்கொள்ள, காஜ்வா யுத்தத்தில் அவரை வென்றபின்னரே, அவுரங்கசீப் முடிசூடிக்கொண்டார். முகலாயப் பேரரசின் வரலாற்றின் பெரும்பகுதியில், சட்டம், மரபு ஆகியவற்றின் அடிப்படையிலான வாரிசுரிமை பின்பற்றப்படாமல், வாரிசுகளுக்கிடையேயான போர்களின்மூலமே அரசர்கள் உருவாயினர்.

சகோதரர்களைக் கொன்றவராக அவுரங்கசீபை குற்றம் சாட்டுபவர்கள், அதைச் செய்துதான் ஷா-ஜஹானும் ஆட்சிக்கு வந்தார் என்பதைப் பெரிதாகச் சுட்டிக் காட்டாததற்குக் காரணம், செல்வந்தர்கள், மதத் தலைமை ஆகியோரிடமிருந்த பல அதிகாரங்கள், இவர் காலத்தில் பறிக்கப்பட்டு, முழுமையான சட்டத்தின் ஆட்சி நடைபெற்றதுதான். மது, போதைப் பொருட்கள், சூது ஆகிய அனைத்தையும் அவுரங்கசீப் தடைசெய்தார். அது யாருக்கு சிரமத்தைக் கொடுத்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்கள்தான், இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகள் என்பதால் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்தனர்.  மற்ற முகலாய அரசர்கள் அனைவரும் பகட்டான வாழ்க்கையை நடத்தியிருந்த நிலையில், அரசின் கருவூலம் என்பது, மக்களுடைய நிதியைப் பாதுகாக்கிற இடம் என்பதில் உறுதியாக இருந்த அவுரங்கசீப், தன் உழைப்பில்தான், தனக்கான செலவுகளையே செய்தார் என்பது உலகறிந்தது. அவர் காலத்தில் இந்தியாவின் வருவாய், பிரெஞ்சுப் பேரரசின் வருவாயைப் போல 10 மடங்கு அளவுக்கு உயர்ந்து, அன்றைய உலகின் ஜிடிபியில் கால் பங்காகியது. ஒட்டுமொத்த மேற்கு-ஐரோப்பிய நாடுகளின் ஜிடிபியைவிட அதிக ஜிடிபியை அவுரங்கசீப் காலத்தில் கொண்டிருந்த இந்தியாவின் வங்கத்தில், தொடக்கநிலை-தொழில்மயத்தின்(ப்ரோட்டோ-இண்டஸ்ட்ரியலைசேஷன்) அறிகுறிகளே உருவாகிவிட்டன.

- அறிவுக்கடல்

;