tamilnadu

img

இந்நாள் மே 09 இதற்கு முன்னால்

1445 - நெதர்லாந்தின் எல்’எக்ளூஸ் (தற்போது ஸ்லஸ்) நகரைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்கள் கட்டுவதற்கு நிதி திரட்டு வதற்காக, ஒரு லாட்டரிக் குலுக்கல் நடத்தப்பட்டது! 4,304 பரிசுச் சீட்டுகள் விற்பனையான இந்த குலுக்க லில் வழங்கப்பட்ட பரிசுத்தொகை, தற்போதைய (இந்திய) மதிப்பின்படி ரூ.1.4 கோடிக்கும் அதிகம்! வரிகளைப் போல வசூலிப்பதில் சிரமங்கள் இன்றி, மக்கள் தாங்களாகவே நிதியைத்தரும் முறையாக, பொதுப்பணிகளுக்கு லாட்டரி நடத்து வது இப்பகுதி நாடுகளில் 15ஆம் நூற்றாண்டில் வழக்கமாகவே இருந்துள்ளது. தற்போதைய சூதாட்ட விடுதிகளில் காணப்படும், கீனோ என்னும் பந்தயம் கட்டும் சீட்டு கி.மு.205-187 கால சீனாவில் பயன்படுத்தப்பட்டதே உலகின் முதல் லாட்டரியாகக் கருதப்படுகிறது. சீனப் பெருஞ்சுவர் போன்ற பெரிய பணிகளுக்கு, இதன்மூலம் நிதி திரட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ரோமப் பேரரசில் குலுக்கல்கள் நடத்தப்பட்டிருந்தாலும், விருந்துகளில் பரிசளிக்கும் முறையாக மட்டுமே இருந்துள்ளது. நெதர்லாந்து பகுதி நாடுகளில் லாட்டரியின் வெற்றியைத் தொடர்ந்து, 1539இல் பிரான்சும் இதை முயற்சித்தது. பரிசுச்சீட்டின் விலை மிக அதிகமாக இருந்ததாலும், அதை வாங்குமளவுக்கு வசதிபடைத்தவர்களால் எதிர்க்கப்பட்ட திட்டங்களுக்காகவே அது நடத்தப்பட்டதாலும், தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகளுக்குத் தடையும் செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் 1566இல் லாட்டரி நடத்தப்பட்டு பொதுப்பணிகளுக்காக நிதி திரட்டப்பட்டது. சீட்டு வாங்கிய அனைவருக்கும் பரிசளித்து, வசூலித்த தொகை முழுவதும் 1569இல் திருப்பியளிக்கப்பட்டதன்மூலம் வட்டியில்லாக் கடனாக அரசு அதைப் பயன்படுத்தியது. அச்சீட்டை விற்க நியமிக்கப்பட்ட தரகர்கள் பின்னாளில் பங்குச்சந்தைத் தரகர்களாயினர். அமெரிக்காவில் இங்கிலாந்தின் குடியேற்றத்தை நிறுவுவதற்கான நிதியைத் திரட்ட, லண்டனின் வர்ஜீனியா கம்பெனிக்கு 1612இல் அனுமதியளிக்கப்பட்டது. அமெரிக்காவின் குடியேற்ற அரசுகளும், தனியாரும் லாட்டரியையே முக்கிய நிதிதிரட்டும் வடிவமாகப் பயன்படுத்தினர். இன்று உலகின் பல நாடுகளிலும் அரசாலும், தனியாராலும் நடத்தப்படும் லாட்டரிகள் உள்ளன. பரிசுச்சீட்டுகள் என்ற வடிவத்தைக் கடந்து, மின்னணு முறைகள் வந்ததுடன், ஆன்லைன் லாட்டரிகளும் ஏராளமாக நடத்தப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பரிசுத் தொகை மொத்தமாகத் தரப்படாமல் ஆண்டளிப்புத் தொகையாக 20-30 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மொத்தமாகத் தொகையைப் பெற விரும்பினால், அறிவிக்கப்பட்டதைவிட குறைவான பரிசுத்தொகையே தரப்படுகிறது. மற்ற எல்லா சூதாட்டங்களையும் போலவே, லாட்டரியிலும் ஏராளமான ஊழல்களும் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன.

- அறிவுக்கடல்

;