tamilnadu

img

இந்நாள் மே 13 இதற்கு முன்னால்

1958 - நீரிலும், நிலத்திலும் செல்லும் ஒரு வாகனத்தில், முதன்முதலாக உலகைச் சுற்றிய பயணத்தை பென் கார்லின் மாண்ட்ரியாலில் நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்த கார்லினின் முழுப்பெயர் பிரடரிக் பெஞ்சமின் கார்லின். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், (ஆங்கிலேய) இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் பிரிவில் பணியாற்றிய கார்லின், போருக்குப்பின் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று, எலினோர் என்ற அமெரிக்கப் பெண்ணை  மணந்துகொண்டு, அமெரிக்காவில் குடியேறினார். அட்லாண்ட்டிக் கடலைக் கடக்கும் பயணமாகத் தங்கள் தேனிலவைக் கொண்டாடலாம் என்ற கார்லினின் கருத்தை, எலினோரும் ஏற்றுக்கொள்ள, ஃபோர்ட் ஜிபிஏ வாகனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

ஃபோர்ட் ஜிபிடபிள்யூ ஜீப்பை நீரிலும் நிலத்திலும் செல்லத்தக்கதாக மாற்றியமைத்து ஃபோர்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்ததே ஃபோர்ட் ஜிபிஏ சீப்(சீ ஜீப்!). தங்கள் வண்டிக்கு ஆஃப்-சேஃப் (பாதி பாதுகாப்பானது?!) என்று கார்லின் பெயரிட்டார். பயணத்துக்கு ஸ்பான்சர் செய்யுமாறு ஃபோர்ட் நிறுவனத்தை அணுகியபோது, கடல் பயணத்துக்கு ‘சீப்’ ஏற்றதல்ல என்று மறுத்துவிட்டது. வண்டியின் முன்புறத்தை படகைப் போன்று மாற்றியமைத்தது, 45 லிட்டர் எரிபொருள் கலனை, 760 லிட்டராக உயர்த்தியது, ரேடியோ கருவிகள் பொருத்தியது என்று தேவையான மாற்றங்களைச் செய்தாலும், 1948இல் கனடாவின் மாண்ட்ரியாலிலிருந்து கிளம்பி, வண்டி பழுது உள்ளிட்ட காரணங்களால், நான்கு முறை தோல்வியைச் சந்தித்தனர்.

பயணத்தைக் கைவிட்டுவிடலாம் என்று கருதியபோது, நான்காவது முயற்சியின் தோல்வியில், இவர்களைக் காப்பாற்றி, கனடாவின் ஹேலிஃபேஃக்ஸ் நகரில் கரைசேர்த்த எண்ணெய்க் கப்பலின்(ஆயில் டேங்கர்) தளபதி ஊக்கப்படுத்த, எரிபொருள் கொள்ளளவை 3,337 லிட்டராக உயர்த்திய கூடுதல் கலன் உள்ளிட்ட மாற்றங்களுடன், 1950 ஜூலை 19இல் கிளம்பி, 1952 ஜனவரி 1இல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் வந்தடைந்து அட்லாண்ட்டிக் பயணத்தை நிறைவு செய்தனர். பழுது, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அங்கேயே தங்கி, பணியாற்றி, நிதி திரட்டிக்கொண்டு 1955இல் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். சென்ற நாடுகளிலெல்லாம் சுற்றிப் பார்ப்பதுடன், வேலைகளும் செய்து நிதி திரட்டிக்கொண்டு தொடர்ந்த பயணத்தில், உடல்நிலை ஒத்துழைக்காமல், எலினோர் ஆஸ்திரேலியாவில் இறங்கிக்கொள்ள, கார்லின் மட்டும் பயணித்து நிறைவு செய்த இதுவே, இன்றுவரை, நீரிலும், நிலத்திலும் செல்லும் வாகனத்தில் உலகைச் சுற்றிய ஒரே பயணம்!

- அறிவுக்கடல்

;