tamilnadu

img

இந்நாள் மே 20 இதற்கு முன்னால்

1645 - ஆறு நாட்களில் 8 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட, யாங்ஸோவ் படுகொலைகள் சீனாவில் தொடங்கின. சிங்(கிங்) மரபின் ஆட்சியை எதிர்த்ததற்குத் தண்டனையாகவும், பிற பகுதியினர் எதிர்க்காமலிருக்க அச்சமூட்டுவதற்காகவும் இப்படுகொலைகள் செய்யப்பட்டன. 1368இல் உருவாக்கப்பட்டிருந்த மிங் மரபின் ஆட்சி, நிதி நெருக்கடியையும், விவசாயிகள் கலகங்களையும் சமாளிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், அரசு அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி, மஞ்சு இனத்தைச் சேர்ந்த (மஞ்ச்சூரியாவிலிருந்து வந்தவர்கள்), ஹாங் தைஜி 1636இல் முடிசூட்டிக்கொண்டு, சிங் மரபைத் தோற்றுவித்தார். விவசாயிகள் கலகத்தை வழிநடத்திய லீ ஸிச்செங் தலைமையிலான படையிடம், 1644 ஏப்ரல் 24இல் பீஜிங் வீழ்ந்ததைத்தொடர்ந்து, மிங் மரபின் கடைசிப் பேரரசரான சோங்ஸென், அரண்மனைத் தோட்டத்தில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள, மிங் மரபு முடிவுக்கு வந்தது.

பல பகுதிகளிலும், சிறு சிறு ஆட்சிகளும், புதிய மரபுகளும் உருவாயின. பின்னாளில் முற்றாக அழிக்கப்பட்ட இவை தொகுப்பாக, தென்பகுதி மிங் என்று குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு, யாங்ஸோவில் 1644இல் லீ ஸிச்செங் உருவாக்கியிருந்த ஷன் மரபின் ஆட்சி, யாங்ஸோவ் யுத்தத்தில் மே 20இல் சிங் மரபினரின் படைகள் வென்றதோடு முடிவுக்குவந்தாலும், மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். வாங் ஸியுச்சு என்ற அக்கால அறிஞரின், ‘யாங்ஸோவில் 10 நாட்களைப் பற்றிய ஒரு பதிவு’ என்ற ஆவணமே இப்படுகொலைகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவிப்பதால், 10 நாட்கள் படுகொலைகள் நடந்ததாகப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், 6 நாட்களில் முடிந்துவிட்டதாகவே அவர் பதிவு செய்திருக்கிறார். 8 லட்சம் பேர் என்று அவர் பதிவு செய்திருப்பதை, தற்கால அறிஞர்கள், மிகைப்படுத்தப்பட்டதாகக் கருதினாலும், 3 லட்சம் பேருக்குக் குறையாமல் படுகொலை செய்யப்பட்டதாக ஏற்கின்றனர். முழு சீனாவின் ஆட்சியும் சிங் மரபிடம் வருவதற்கு, மேலும் சுமார் 40 ஆண்டுகள் ஆயிற்று. எதிர்த்தவர்கள், முந்தைய மிங் மரபின்மீது விசுவாசம் கொண்டிருந்தவர்கள் என்று, சீனா முழுவதும் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, கால் கோடிவரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 1911இல் நடைபெற்ற ஸின்ஹாய் புரட்சியின்போது, கடைசிப் பேரரசர் பூயி முடிதுறக்கச் செய்யப்பட்டதோடு, சிங் மரபின் ஆட்சி முடிவுக்குவந்து, சீனக் குடியரசு உருவானது.

அறிவுக்கடல்

;