tamilnadu

img

இந்நாள் மார்ச் 14 இதற்கு முன்னால்

1982 - தென்ஆஃப்ரிக்காவில் நிறவெறி ஆட்சி நடைபெற்ற காலத்தில், லண்டனில் செயல்பட்ட (நாடுகடந்த) ஆஃப்ரிக்க தேசிய காங்கிரசின் அலுவலகத்துக்கு, தென் ஆஃப்ரிக்க அரசே குண்டுவைத்தது! 1912இல் தென்னாஃப்ரிக்க பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ்(எஸ்ஏஎன்என்சி) என்ற பெயரில், ஆஃப்ரிக்க மக்களை ஒருங்கி ணைக்கவும், உரிமைகளுக்காகப் போராடவும் தொடங்கப்பட்ட அமைப்பு, 1923இல் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ்(ஏஎன்சி) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (பழங்குடி யினரின் தலைவர்கள் தொடங்கி தேவாலயத்தின் பிரதிநிதிகள்வரை, பழைமை, புதுமை வேறுபாடின்றி அனைவரும் உறுப்பினர்களாக இருந்த ஏஎன்சியில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

1931இல் பெண்கள் இணை உறுப்பி னர்களாக அனுமதிக்கப்பட்டு, 1943இல்தான் முழுமையான உறுப்பினர்களாக அனு மதிக்கப்பட்டனர்.) 1948இல் ஆட்சிக்கு வந்த தேசியக் கட்சி, நிறுவனமயமாக்கப்பட்ட இனவொதுக்கல் நடவடிக்கைகளை சட்டப்படியாக நடைமுறைப்படுத்தும் அபார்த்தெய்ட் கொள்கைகளை அறிவித்தது. 1950களில் வாக்காளர் பட்டியலி லிருந்து கருப்பினத்தவர் நீக்கப்பட்டதுடன், இருப்பிடம், இடம்பெயர்தல் உள்ளிட்ட சட்டங்களும் கருப்பினத்தவருக்குக் கடுமையாக்கப்பட்டன. இந்தியாவில் 1947இல் வெற்றியடைந்திருந்த விடுதலைப்போரால் ஈர்க்கப்பட்டு, வன்முறையற்ற போராட்டங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்த  ஏஎன்சி, இனவொதுக்கல் நடவடிக்கைகளுக்கெதிராகப் போராடத் தொடங்கியபோது, ஆஃப்ரிக்கர்களை ஒருங்கிணைப்பது மட்டுமே நோக்கம் என்று கருதியவர்கள் பிரிந்து, ‘பான் ஆஃப்ரிக்கனிஸ்ட் காங்கிரஸ்(பிஏசி)’ என்ற அமைப்பை 1959இல் தொடங்கினர்.

ஆனால், ஆஃப்ரிக்கர்கள் அனைத்துத் தருணங்களிலும் தங்கள் அடையாள அட்டையை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கிய பாஸ் சட்டங்களுக்கெதிராக, ஏஎன்சிக்கு முன்பே பிஏசி போராட நேர்ந்தபோது, காவல்துறையால் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட, ஷார்ப்பிவில்லி படுகொலை நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்தே, ஏஎன்சி ஆயுதப் போராட்டத்திற்கு மாறியது. இரண்டு அமைப்புகளும் தடைசெய்யப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் 1978இலிருந்து(1994வரை) ஏஎன்சியின் அலுவலகம் லண்டனில் செயல்பட்டது. இந்த அலுவலகத்தில், 1982 மார்ச் 14 காலை 9 மணிக்கு வெடித்த குண்டால், ஏஎன்சியின் ஊழியர் ஒருவர் மட்டும் காயமடைந்தாலும், சுற்றிலும் சுமார் 1200 அடி தொலைவுவரை இருந்த கட்டிடங்கள் சேதமுற்றன. 1994இல்  நெல்சன் மண்டேலா தலைமையில் ஏஎன்சியே ஆட்சிக்கு வந்தபின், குண்டு வெடிப்புக் காலத்திய தென்னாப்ரிக்கக் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.  எச்சரிக்கை விடுப்பதற்காக குண்டு வைக்க அப்போதைய அரசு உத்தரவிட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

- அறிவுக்கடல்

;