tamilnadu

img

இந்நாள் மே 27 இதற்கு முன்னால்

1942 - செக்கோஸ்லோவாக்கியா (இன்று செக்) நாட்டின் பிராக் நகரில், இரண்டாம் உலகப்போ ரின்போது, ‘ஆப்ரேஷன் ஆந்த்ரபாய்ட்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டி ருந்த செக்கோஸ்லோவாக்கியாவின், பொஹீமியா, மொரே வியா பகுதியின் ஆளுனராக இருந்த, நாஜி தளபதி ரீன்ஹார்ட் ஹேட்ரிச்-சைப் படுகொலை செய்வதுதான் ஆப்ரேஷன் ஆந்த்ரபாய்ட். இரண்டாம் உலகப்போரின்போது, ஓர் அரசே திட்டமிட்டு செய்த ஒரே படுகொலை இதுதான். லண்டனில் அமைந்திருந்த, செக்கோஸ்லோ வாக்கியாவின் நாடுகடந்த அரசின் தலைவரான எட்வர்ட் பெனஷ் உத்தரவின் பேரில், இங்கிலாந்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான ரகசியப் படை, ஆறு மாதங்கள் திட்டமிட்டு நடத்திய இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஹேட்ரிச், ஜூன் 4இல் உயி ரிழந்தார். ஹேட்ரிச்-தான், ‘யூதக் கேள்விக்கான’ தீர்வாக, இனப்படுகொலையை வடிவமைத்தவர். ஆந்த்ரபாய்ட் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘மனிதனைப் போன்ற தோற்றமுடைய’ என்று பொருள்! உண்மையிலேயே அவ்வளவு கொடூரமான ஹேட்ரிச்சைக் கொல்வதில் வேறு நோக்கங்களும் இருந்தன. முதல் உலகப்போரின் இறுதியில், ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு இல்லாமற்போனபோதுதான், செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு உருவானது. ஆஸ்திரியாவிலிருந்த ஜெர்மன் இனத்தவர்களும் புதிதாக உருவான இந்நாட்டில் இருந்தனர். சூடெட்டன் மலைகளையொட்டி இவர்கள் இருந்ததால் சூடெட்டன் ஜெர்மானியர்கள் என்ற பெயர் பின்னாளில் உருவானதுடன், இவர்கள் இருந்த பகுதியும் சூடெட்டன்லேண்ட் என்று குறிப்பிடப்பட்டது.

ஜெர்மானியர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும் ஜெர்மனியுடன் இணைக்கும் அகண்ட ஜெர்மனியை நோக்கமாகக்கொண்ட ஹிட்லர், சூடெட்டன்லேண்டை ஜெர்மனியிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ‘காடெஸ்பர்க் மெமோரண்டம்’ என்ற ஆவணத்தின் மூலம் எச்சரித்தார். அவ்வாறு  வழங்காவிட்டால் ஹிட்லர் போர் தொடுக்கலாம் என்பதால் அதைத் தடுப்பதற்கா கவும், அதுவே தான் கடைசியாகக் கேட்கும் பகுதி என்று ஹிட்லர் கூறியதாலும், செக்கோஸ்லோவாக்கியாவையே கேட்காமல், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் 1938 செப்டம்பரில், இப்பகுதியை ஜெர்மனிக்குத் தரும் முனீச் ஒப்பந் தத்தை ஜெர்மனியுடன் செய்துகொண்டன. இதைத்தொடர்ந்து, சில பகுதிகளை ஹங்கேரியும், போலந்தும் எடுத்துக்கொள்ள, எஞ்சியிருந்த பகுதிகளை ஹிட்லர் ஆக்கிரமிக்க, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடே, இரண்டாம் உலகப்போர் தொ டங்குவதற்கு முன்பே காணாமற்போனது. இந்தப் பின்னணியில்தான், லண்டனி லிருந்து செயல்பட்ட நாடுகடந்த செக்கோஸ்லோவாக்கியா அரசுடன், முனீச் ஒப்பந்தத் தில் ஏமாந்த இங்கிலாந்தும் சேர்ந்து, நாஜி தலைவர்களைக் கொல்ல முடியும் என்று எச்சரிக்கும் விதமாக, கொடூரன் ஹேட்ரிச்சைக் கொன்றது.

- அறிவுக்கடல்

;